மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா: நாளை மறுநாள் நள்ளிரவு ஒடுக்குபூஜை


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா: நாளை மறுநாள் நள்ளிரவு ஒடுக்குபூஜை
x

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

மணவாளக்குறிச்சி,

பெண்களின் சபரிமலை என் போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த 3-ந்தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை வரை பத்து நாட்கள் நடக்கிறது. விழாவின் பத்தாம் நாளான நாளை மறுநாள் ஒடுக்கு பூஜை நடக்கிறது. விழாவின் மூன்றாம் நாள் முதல் காலை மற்றும் இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, தினசரி மாலை சந்தனகுடம் பவனி, தினசரி காலை, மதியம், மாலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது. ஒன்பதாம் நாளான நாளை காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் சந்தனகுடம் பவனி, பகல் 12 மணிக்கு பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து சந்தனகுடம், காவடி பவனி, மாலை 6.15 மணிக்கு கூட்டுமங்கலம் ஊர் பக்தர்கள் சார்பில் சந்தனகுடம் பவனி, இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி நடக்கிறது.

பத்தாம் நாளான நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, 4.30 மணிக்கு அடியந்திரபூஜை, 6 மணிக்கு பூமாலை, 7 மணி முதல் குத்தியோட்டம், இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனி, 11.30 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து ஒடுக்கு பதார்த்தங்கள் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவின் கடைசி நாளான நாளை மறுநாள் அதிகாலை நடக்கும் அடியந்திர பூஜையைத் தொடர்ந்து அடைக்கப்படும் திருநடை மாலை 5 மணிக்குதான் திறக்கப்படும். காலை 4.30 மணிக்குமேல் கோவிலுக்குள் எந்த பூஜையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கு பூஜை நடந்து கொண்டிருக்கும்போதே திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.


Next Story