வித்தியாசமான பிரசாதங்கள்


வித்தியாசமான பிரசாதங்கள்
x

திருப்பதி லட்டு, திருவரங்கம் புளியோதரை என்று பக்தர் களுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் வேறுபடுகிறது. அந்த வகையில் வித்தியாசமான பிரசாதங்களை வழங்கும் சில ஆலயங்களை பற்றி பார்க்கலாம்.

செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில், மிளகு தோசை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும் தோசையுடன் எண்ணெய், பொடி சேர்த்து கொடுப்பார்கள்.

ராமநாதபுரம் அருகே உள்ள திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில், 'மண் உருண்டை' பிரசாதமாக வழங்கப்படுகிறது. கடன் தொல்லை தீர வேண்டும் என்பதற்காக பக்தர்களுக்கு இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

புற்று வழிபாடு என்பது இந்து சமயத்தினரிடையே பரவலாக இருக்கும் வழிபாட்டு முறை. இந்த புற்று மண்ணை பிரசாதமாக வழங்கும் ஆலயங்களும் பல இருக்கின்றன. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்களில் புற்றுமண் பிரசாதம் வழங்கப்படுகிறது.

சென்னை அடுத்துள்ள மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது, முண்டகக் கண்ணி அம்மன் திருக்கோவில். இங்கு ஆடி மாதத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். அப்போது பொங்கல் சமைக்க வரட்டியை பயன் படுத்துவார்கள். இதில் இருந்து கிடைக்கும் சாம்பலைத்தான், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

பெரும்பாலான அம்மன் கோவில்களுக்குச் சென்றால், சாமியை தரிசனம் செய்து முடித்ததும் அம்மன் சன்னிதியில் இருக்கும் எலுமிச்சைப் பழத்தை பிரசாதமாக வழங்குவார்கள். ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் உள்ள ஏ கவுரி அம்மன் கோவிலில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண் களுக்கு, குழந்தை வரம் கிடைப்பதற்காக எலுமிச்சை சாற்றை பிரசாதமாக வழங்குகிறார்கள்.


Next Story