பொறுமையை சொல்லித்தரும் பூரி ஜெகந்நாதர்


பொறுமையை சொல்லித்தரும் பூரி ஜெகந்நாதர்
x

இந்தியாவின் நான்கு புனிதமான புண்ணியத் தலங்களில் பூரி ஜெகந்நாதர் ஆலயமும் ஒன்று. மற்றவை, துவாரகை, பத்ரிநாத், ராமேஸ்வரம் ஆகியவையாகும்.

பூரியை ஆட்சி செய்த இந்திர தையுமா என்ற மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், தனக்கு ஒரு கோவில் கட்டுமாறு கூறினார். கடலில் மிதந்து வரும் பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து கடலில் மிதந்து வந்த ஒரு பெரிய மரக்கட்டையில் இறைவனின் சிலையை செதுக்க மன்னன் முடிவெடுத் தான். அதற்காக ஒரு தர்ச்சர் வரவழைக்கப்பட்டார். ஆனால் அந்த மரத்தை செதுக்க முற்பட்ட போது உளியே உடைந்து போனது. அப்போது முதிய தச்சர் வடிவில் பெருமாள் அங்கு தோன்றி, தானே மரத்தில் சிலை செய்து தருவதாகவும், 21 நாட்களுக்கு என் அறையை யாரும் திறக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார்.

முதல் 15 நாட்கள் தச்சர் அறையில் இருந்து மரத்தை செதுக்கும் சத்தம் கேட்டது. அதனால் மன்னன் உள்ளே செல்லவில்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு எந்த சத்தமும் கேட்காததால், 'தச்சர் தூங்கிவிட்டாரோ' என்ற சந்தேகத்தில் மன்னன் கதவை திறந்து உள்ளே சென்றான். அப்போது தச்சர், பெருமாளாக காட்சி தந்து, "மனிதனுக்கு பொறுமை மிகவும் அவசியம். உன்னால் இன்னும் சில நாட்கள் பொறுமையாக இருக்க முடியவில்லையா? இப்போது இங்கே அரைகுறையாக இருக்கும் சிலைகளையே, ஆலயத்தில் பிரதிஷ்டை செய். அது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பாடத்தை மக்களுக்கு கற்றுத்தரட்டும்" என்று கூறி மறைந்தார். இதையடுத்து மன்னன் கட்டிய ஆலயத்தில் இறைவனால் செதுக்கப்பட்ட, பலராமர், ஜெகந்நாதர், சுபத்ரா ஆகிய தெய்வங்களின் சிலைகள் ஒன்றாக, ஒரே கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. காலப்போக்கில் இந்த கட்டிடம் பழுதடைந்தது. இதனால் கி.பி. 11 மற்றும் 12-ம் நூற்றாண்டில் தற்போதைய ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.

ஒரு அரண்மனையைப் போற்ற தோற்றத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இதன் சுற்றுச்சுவர் 200 மீட்டர் நீளம் கொண்டது. உயரம் 65 மீட்டர் ஆகும். இந்த ஆலயத்திற்குள் நுழைய கிழக்கில் சிம்ம வாசல், மேற்கில் வைராக்ய வாசல், வடக்கில் யானை வாசல், தெற்கில் குதிரை வாசல் ஆகிய நான்கு வாசல்கள் உள்ளன. இவ்வாலய கோபுரம் 213 அடி உயரம் கொண்டது. ஆனால் இது ராஜகோபுரம் அல்ல. இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் மூலவரின் விமானம் ஆகும்.

பூரி ஜெகந்நாதர் ஆலயம், கடற்கரை கோவில் என்பதால், கடலில் நீராடிய பிறகே கோவிலுக்குச் செல்ல வேண்டும். கடலில் நீராடிவிட்டு முதலில் கடற்கரையில் உள்ள மார்க்கண்டேயரை வணங்க வேண்டும். பின்பு இங்குள்ள பாண்டவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அனுமன் தீர்த்தம் ஆகியவற்றில் நீராடிய பிறகு தான் மூலவரை தரிசிக்க வேண்டும்.

கருவறையில் ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா தேவி உள்ளனர். கருப்பு நிறமும் பெரிய கண்களும் கொண்ட ஜெகந்நாதர் சாம வேதத்தை குறிக்கும். இவர் விஷ்ணு சொரூபமாக விளங்குகிறார். வெண்ணிறமும் தாமரைக் கண்களும் கொண்ட பலராமர், ரிக் வேதத்தை குறிப்பவராகவும், சிவனின் சொரூபமாகவும் விளங்கிறார். மஞ்சள் நிறமும் தாமரைக் கண்களும் கொண்ட சுபத்ரா, யஜூர் வேதத்தை குறிப்பவராகவும், பார்வதியின் சொரூபமாகவும் திகழ்கிறார்.

இந்த ஆலயத்தில் ஆனி மாதம் வளர்பிறை இரண்டாம் நாளில் இருந்து 21 நாட்கள் தேர்த் திருவிழா நடைபெறும். இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் புகழ்பெற்ற ஒரு தேர்த் திருவிழாவாக, பூரி ஜெகந்நாதர் கோவில் தோரோட்டம் இருக்கிறது. இவ்வாலய மூலவர்களே நேரடியாக தேரோட்டத்தில் பங்கேற்பார்கள். மூன்று தெய்வங்களும் தன்னுடைய அத்தையை பார்த்துவிட்டு, அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து திரும்புவதாக ஐதீகம்.

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பணியாற்றுபவர்கள் அந்தணர்கள் என்றாலும், தேர்த் திருவிழாவின் போது மூலவர்களை தேரில் அமர்த்துவது முதல் தேர் நிலைக்கு வந்ததும், மீண்டும் மூலவர்களை கருவறையில் அமர்த்துவது வரையிலான எல்லா வேலைகளையும் செய்பவர்கள் சவரா என்னும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களை 'தைத்யர்கள்' என்று அழைப்பார்கள். இவர்கள் ஜெகந்நாதரின் உறவினர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேர்த் திருவிழாவை கண்டு தரிசிக்கும் பக்தர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும்.

பூரியின் தேர்

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தில் பலராமர், ஜெகந்நாதர், சுபத்ரா தேவி ஆகிய மூவருக்கும் தனித் தனி தேர்கள் பயன்படுத்தப்படும். இந்த மூன்று தேர்களும் நிரந்தரமானவை அல்ல. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படும். ஒருமுறை வலம் வந்த தேரை மறு உலாவுக்குப் பயன்படுத்த மாட்டார்கள். இந்த தேர்கள் பூரி ஆலயத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குண்டிச்சாதேவி ஆலயம் வரை இழுத்துச் செல்லப்படும். அங்குதான் அவர்கள் ஒரு வாரம் தங்கியிருப்பார்கள். தேரோட்டத்தை பூரியின் அரசர், தங்கத் துடைப்பத்தால் சாலையை சுத்தம் செய்து தொடங்கிவைப்பார்.

ஜெகந்நாதரின் தேரானது, நந்திகோஷ் அல்லது கருடத்வஜா என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தேர் 45 அடி உயரம் கொண்டது. சந்திரனின் 16 கலைகளும் இதன் 16 சக்கரங்களாக அமைந்துள்ளன. நான்கு வேதங்களைக் குறிக்கும் 4 குதிரைகள் தேரில் பூட்டப்பட்டிருக்கும். இந்த தேரின் தேரோட்டியாக தாருகா என்பவர் இருக்கிறார். தேரை இழுக்க உதவும் வடத்திற்கு (கயிறு) 'சங்கசூடா' என்று பெயர். சிவப்பு மற்றும் மஞ்சள் நிற துணிகளால் இந்தத் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

பலராமரின் தேர், 'தலத்வஜ்' எனப்படும். இது 44 அடி உயரம் கொண்டது. 14 மன்வந்திரங்களைக் குறிக்கும் வகையில் இதற்கு 14 சக்கரங்கள் உண்டு. 4 வேதங்கள் 4 குதிரைகளாக கருதப்படும். இந்த தேரின் சாரதியாக இருப்பவர் மாதவி. தேர் வடத்திற்கு 'வாசுகி' என்று பெயர். சிவப்பு மற்றும் பச்சை நிறத் துணியால் இந்த தேர் அலங்கரிக்கப்படும்.

சுபத்ராவின் தேரானது 'தரவதவானா' என்று அழைக்கப்படும். இந்த தேர் 43 அடி உயரம் கொண்டது. மாதங்களைக் குறிப்பிடும் வகையில் 12 சக்கரங்களைக் கொண்டிருக்கும். இந்த தேரின் சாரதி அர்ச்சுனன். வடத்தின் பெயர் 'ஸ்வர்ணசூடா'. இந்த தேர் சிவப்பு மற்றும் கருப்பு நிற துணிகளால் அலங்கரிக்கப்படும்.


Next Story