பெண்களின் தோஷம் நீக்கும் ரிஷி பஞ்சமி வழிபாடு

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் வரக்கூடியது, ரிஷி பஞ்சமி விரதம். இந்த விரதம் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் வரும். சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுவதன் மூலம் பெண்களின் சாபங்கள், பெண்களுக்கு ஏற்படும் தோஷங்கள் விலகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு சமயம் தேவேந்திரன் தனது குருவுக்கு துரோகம் செய்ததால், தன் பதவி, ராஜ்ஜியம், செல்வம் போன்றவற்றை இழந்து தாமரைத் தண்டுக்குள் வசிக்கக்கூடிய சாபத்தைப் பெற்றான். இதையடுத்து அவன், விஷ்ணுவை துதித்து 'என் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அதற்கு விஷ்ணு, 'உன் சாபத்தை யாராவது ஏற்றுக் கொண்டால், உனக்கு தோஷம் நீங்கி பழையபடி ராஜ்ஜியமும், செல்வமும் கிடைக்கும்' என்றார். இதையடுத்து இந்திரன், தன்னுடைய சாபத்தை ஏற்றுக்கொள்ளும்படி பலரிடம் கேட்டான். அவனது சாபத்தை ஏற்க, மரம், நிலம், தண்ணீர், பெண் ஆகிய நான்கு பேர் முன்வந்தனர்.
இதன் காரணமாக இந்திரனின் சாபம் நீங்கியது. அவன் மீண்டும் தன் ராஜ்ஜியமான இந்திரலோகத்தை அடைந்து, செல்வ வளத்துடன் வாழத் தொடங்கினான். தன்னுடைய சாபம் நீங்க காரணமாக இருந்த மரம், நிலம், தண்ணீர், பெண் நால்வருக்கும் வரம் அளித்தான். அதன்படி மரத்தை வெட்டினாலும் மீண்டும், மீண்டும் துளிர்க்கும் சக்தி பெற்றது. நிலம் வறண்டு போனாலும், மறுபடியும் தண்ணீர் பட்டதும் பசுமையாக மாறிவிடும் தன்மை பெற்றது. தண்ணீருக்கு எல்லாவித பொருட்களின் அசுத்தங்களையும் நீக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது. பெண்ணுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்பட்டு, அதன் மூலம் அவளது தோஷங்கள் அனைத்தும் நீங்கி எப்போதும் புனிதமாக விளங்க ஆரம்பித்தாள். பெண்கள் மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடாத செயல்களை செய்வதால் ஏற்படும் தோஷத்தை நீக்க 'ரிஷி பஞ்சமி' விரதம் கைகொடுக்கிறது.
விதர்ப்ப நாட்டில், உதங்கர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி சுசீலை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். உதங்க முனிவர் தன்னுடைய பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் மணமான சில நாட்களிலேயே அவள் தன்னுடைய கணவனை இழந்தாள். இதனால் மனம் துவண்ட முனிவர், தன்னுடைய குடும்பத்துடன் கங்கைக் கரையில் இருந்த ஒரு கிராமத்தில் தங்கினார். அங்கு தன்னுடைய சீடர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். உதங்க முனிவரின் பெண், தந்தைக்கு பணிவிடை செய்து வந்தாள்.
ஒரு நாள் இரவு தூங்கும் நேரத்தில் அவளது உடலில் புழுக்கள் நெளிவதைக் கண்ட தாய், அதுபற்றி தன் கணவரான உதங்க முனிவரிடம் கேட்டாள். தன்னுடைய ஞான திருஷ்டியால் அதற்கான காரணத்தை அறிந்தார், முனிவர். அந்தப் பெண் இதற்கு முந்தைய பிறவியில் ஒரு அந்தணரின் மகளாக இருந்தாள். அப்போது மாதவிடாய் காலத்தில் அசுத்தம் என்று எண்ணாமல், வீட்டில் உள்ள பொருட்களைத் தொட்டாள். மேலும் பயபக்தியுடன் தனது தோழிகள் செய்து வந்த ரிஷி பஞ்சமி விரதத்தை பார்த்து கேலி செய்தாள். அதனால்தான் அவள் உடலில் புழுக்கள் நெளிகின்றன. மேலும் தோழிகள் செய்த ரிஷி பஞ்சமி விரதத்தைப் பார்த்த காரணத்தால், இந்தப் பிறவியிலும் அவள் அந்தண குலத்தில் பிறக்கும் பேறு பெற்றாள். அந்த சாபம் நீங்க, ரிஷி பஞ்சமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று உதங்க முனிவர் தெரிவித்தார். இதையடுத்து முனிவரின் மகள், ரிஷி பஞ்சமி விரதத்தை மேற்கொண்டு, தன்னுடைய சாபம் நீங்கப் பெற்றாள்.
ரிஷி பஞ்சமி நாள் அன்று, கவுதமர் - அவரது மனைவி அகல்யா, பாரத்வாஜர் - அவரது மனைவி சுசீலா, விசுவாமித்திரர் - அவரது மனைவி குமதவதி, காஷ்யபர் - அவரது மனைவி அதிதி, ஜமாத்கனி - அவரது மனைவி ரேணுகா, வசிஷ்டர் - அவரது மனைவி அருந்ததி, அத்ரி - அவரது மனைவி அனுசுயா ஆகிய சப்த ரிஷிகளையும், அவர்களின் பத்தினிகளையும் பூஜிப்பதன் மூலம், பெண்களின் சாபமும், அவர்களின் தோஷமும் விலகும் என்கிறார்கள்.
ரிஷி பஞ்சமி பூஜையை மாதவிலக்கு நின்றவர்கள், தொடர்ந்து ஏழு வருடம் பூஜை செய்து, எட்டாவது வருடம் பூஜையை முடிக்க வேண்டும். மாதவிலக்கு நின்று 7 வருடங்களுக்கு பின்னர் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள். ரிஷி பஞ்சமி பூஜை செய்பவர்கள், முதலில் யமுனை நதியை பூஜை செய்ய வேண்டும். பின்னர் கலசம் வைத்து சப்த ரிஷிகளையும், அவர்களின் பத்தினி களையும் ஆவாகனம் செய்ய வேண்டும். பூஜை அன்று மாலை வேளையில், தன்னால் இயன்றதை நைவேத்தியமாக படைத்து, தூப-தீபம் காட்ட வேண்டும். பின்னர் 'ஸப்தரிஷி தேவானாம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோபநார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச' என்று கூறி, வடக்கு முகமாக சப்த ரிஷி கலசத்தை நகர்த்தி வைக்க வேண்டும்.
வடதேசங்களில், முதலில் காலையில் எழுந்தவுடன் ரிஷப பஞ்சமி பூஜை செய்யும் பெண்கள் (இங்கு மாதவிடாய் நின்ற பெண்கள் மட்டுமல்லாது, திருமணமான அனைத்து பெண்களும் இந்த பூஜையை செய்கிறார்கள்), நதிக்கரைக்குச் சென்று அதில் 365 முறை மூழ்கி எழுகிறார்கள். அதன் பிறகே இந்த பூஜையை தொடங்குவார்கள். நெல்லி பொடி தேய்த்து குளிப்பதை விசேஷமாக சொல்கிறார்கள். வீட்டின் வடகிழக்கில் பூஜையறையில் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிப்பார்கள்.
உணவால் ஏற்படும் ஐந்து வகை தோஷம்
நாம் உண்ணும் உணவில் ஐந்து வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை:-
1) பாவமான வழியில் சம்பாதிக்கும் பணத்தினால் வாங்கப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் உண்டாகும் தோஷம். இதனை 'அர்த்த தோஷம்' என்பார்கள். 'அர்த்தம்' என்பதற்கு 'பணம்' என்று பொருள்.
2)சமைக்கப்பட்ட உணவானது, நாய், பூனை, எறும்பு, பல்லி, காகம், பசு போன்றவற்றால் தீண்டப்படாமல் இருப்பதும் அவசியம். உணவில் தூசி, தலைமுடி போன்றவையும் இருக்கக்கூடாது. இப்படி ஏதேனும் உள்ள உணவை சாப்பிடுபவர்களுக்கு 'நிமித்த தோஷம்' ஏற்படும்.
3) கழிவறை, மருத்துவமனை போன்ற இடங்களுக்கு அருகே சமைக்கப்படும் உணவை உண்பதால் உண்டாகும் தோஷம் 'ஸ்தான தோஷம்'.
4) கோபத்துடனோ, அழுகையுடனோ அல்லது பதற்றத்துடனோ இருக்கும்பொழுது சமைக்கப்படும் உணவை உண்பதால் வரும் தோஷம் 'குண தோஷம்'.
5)ஒன்றுக்கொன்று எதிர்மறை குணம் உள்ள உணவை உண்பதால் வரக்கூடிய தோஷம் 'சம்ஸ்கார தோஷம்'. உதாரணம், குளிர்ச்சியான மற்றும் மிக சூடான உணவை ஒரே நேரத்தில் உண்பது. மிக காரமான, மிக இனிப்பான உணவை ஒரே நேரத்தில் உண்பது போன்றவை.
இந்த ஐந்து விதமான தோஷத்துடன், பெண் மாதவிடாய் காலங்களில் உணவை சமைத்தாலும் அல்லது சமைத்த உணவுகளை பரிமாறுவதாலும் மற்றும் பவித்திரமான பொருட்களை தொடுவதாலும், அவர்களுக்கு ஏற்படும் தோஷமும் இருக்கிறது. இந்த தோஷம் நீங்க, ரிஷி பஞ்சமி பூஜை பலன் தருகிறது.
அங்க பூஜை (ஒவ்வொரு நாமாவைச் சொல்லி சப்த ரிஷிகளை அர்ச்சிக்கவும்)
1) தீர்த்த பாதேப்போ நம: பாதான் பூஜயாமி (கால்)
2) ஸர்வபூத ஹிதேப்யோ நம: குல்பான்பூஜயாமி (கணுக்கால்)
3) விமல சரித்ரேப்யோ நம: ஜங்கான்பூஜயாமி (முழங்கால்)
4) ஸர்வலோகஹிதேப்யோ நம: ஊருன் பூஜயாமி (தொடை)
5) அஜின தாரிப்யோ ஜிதேந்த்ரியேப்யோ நம: கடீன் பூஜயாமி (இடுப்பு)
6) ஜிதேந்த்ரியேப்யோ நம: குஹ்யான் பூஜயாமி (மர்மம்)
7) யோகீச் வரேப்யோநம: நாபீன் பூஜயாமி (தொப்புள்)
8) பரார்த்தைக ப்யோஜனேப்யோ நம: பார்ச்வான் பூஜயாமி (இடுப்பு)
9) ஸர்வசா'ஸ்த்ர விசாரதேப்யோ நம: உதராணி பூஜயாமி (வயிறு)
10)பரோபகாரிப்யோ நம: ஹ்ருதயானி பூஜயாமி (மார்பு)
11) ருத்ராக்ஷ தாரிப்யோ நம: கண்டான் பூஜயாமி (கழுத்து)
12) ஸர்வாமரவந்திதேப்யோ நம: நாஸிகான் பூஜயாமி (மூக்கு)
13)ச்'ருதி பாரகேப்யோ நம: நம: ச்ரோத்ராணி பூஜயாமி (காதுகள்)
14)தத்வவித்யா விசாரதேப்யோநம: லலாடானி பூஜயாமி (நெற்றி / முகமண்டலம்)
15) ஜடாமண்டல மண்டிதேப்யோ நம: சி'ராம்ஸி. பூஜயாமி(தலை)
16) ஸப்த ரிஷிப்யோ நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி (உடல் முழுவதும்)






