தியாகத் திருநாள்


தியாகத் திருநாள்
x

‘ஈதுல் அள்ஹா’ என்று சொல்லப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இன்னும் சில தினங்களில் அடைய இருக்கிறோம். உலகம் முழுவதும் பரவி வாழும் முஸ்லிம்களின் முக்கியமான இரண்டு பண்டிகைகளில் ஒன்று இந்த தியாகத்திருநாள்.

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைத்தூதர் இப்ராகிம் (அலை) அவர்களின் வாழ்வு முழுக்க முழுக்க தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர் மட்டுமின்றி அவரது குடும்பம் முழுவதுமே தியாகத்தின் திரு உருவங்களாக திகழ்ந்தனர் என்பது வரலாறு. தனது இளமைக் காலத்தில் தந்தையின் வழியில் கிடைக்கும் செல்வாக்கு மற்றும் வசதியான வாழ்க்கையை தியாகம் செய்தார். தந்தையையும் சமுதாய மக்களையும் சிந்திக்கத் தூண்டியதன் விளைவாக நாடு துறக்க நேர்ந்தது.

தமது மனைவியையும் குழந்தையையும் பாலைவனத்தில் விட்டு வரும்படி இறைக்கட்டளை வந்தபோது அதை அப்படியே நிறைவேற்றினார். தம்மிடம் இருந்த உணவும், நீரும் தீர்ந்து போன நிலையில் குழந்தை பசியால் அழுதபோது, அன்னை ஹாஜரா அவர்கள் சபா மற்றும் மர்வா மலைக்குன்றுகளின் மீது ஏறி பயணக்கூட்டம் ஏதாவது வருகிறதா என்று தேடினார். அன்னை ஹாஜரா அவர்கள் மலைக்குன்றுகளில் தேடி களைத்து எதையும் காணாத நிலையில் திரும்பி வந்து தனது குழந்தையை பார்த்தபோது அதன் காலடியில் ஒரு ஊற்று ஏற்பட்டு தண்ணீர் பொங்கி பரவுவதை கண்டார். அந்த இடத்தைச் சுற்றி ஒரு பாத்தி கட்டி 'ஜம்ஜம்' என்று கூறினார்.

வறண்ட பாலைவனத்தில் இறைவனின் அத்தாட்சியாக இன்றும் அந்த ஊற்று சுரந்து கொண்டிருக்கிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தினசரி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை தந்து கொண்டிருக்கும் ஜம் ஜம் ஊற்று இறைவனின் ஆற்றலை, வல்லமையை உலகுக்கு உணர்த்தக்கூடிய ஒரு சான்றாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

தனது முதிய வயதில் கிடைத்த மகனை, அவர் வளர்ந்து வரும் வேளையில், அறுத்து பலியிடுமாறு இறைவன் கனவின் மூலம் காட்டிய ஏவலை ஏற்று அதற்கும் தயாரானார். 'இறைவன் நரபலியை விரும்புவதில்லை என்று கூறி அங்கு ஓர் ஆட்டை இறக்கி வைத்து அதை அறுத்து பலியிடுமாறு' இறைவன் கூறினான். இன்றுவரை மட்டுமல்ல இனி உலக முடிவு நாள் வரை அந்த தியாகம் நினைவு கூரப்பட்டு கொண்டே இருக்கும். இப்ராகிம் (அலை) மற்றும் அவரது குடும்பத்தாரின் வாழ்வு முழுக்க தியாகச் சுடராய் பிரகாசிக்கிறது.

இறைவனின் கட்டளைப்படி மக்காவில் உள்ள காபா ஆலயத்தை இப்ராகிம் (அலை) அவர்களும் அவர்களின் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களும் மறு நிர்மாணம் செய்தனர். ஹஜ்ஜுக்கு வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கும்படி இறைவன் கூறினான். அன்று விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இன்று வரையும் இன்னும் உலக முடிவு நாள் வரையும் உலகின் பல பாகங்களில் இருந்தும் முஸ்லிம்கள் அந்த இறைஇல்லத்தை நோக்கி சென்று ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்ற கூடியவர்களாய் இருக்கின்றனர்.

ஹஜ் உடைய காரியங்களில் பெரும்பாலானவை இப்ராகிம் (அலை) மற்றும் அவரது குடும்பத்தாரை நினைவுபடுத்தக் கூடியவையாய் உள்ளன. உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து ஹஜ் செய்யக்கூடிய மக்கள் இனம், நிறம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒரே இடத்தில் ஒரே முழக்கத்தோடு ஒன்று கூடுகின்றனர்.

அங்கு செல்லக் கூடியவர்கள் இறைவனின் இறுதி தூதரான முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றி, உலகம் முழுவதையும் படைத்த இறைவன் ஒருவனே என்ற ஓரிறைக் கொள்கையை ஏந்தியவர்களாக உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லக்கூடிய சமாதான தூதர்களாக விளங்குகின்றனர்.

ஹஜ்ஜுக்கு செல்லக் கூடியவர்கள் ஹஜ் காரியங்களை மக்காவில் நிறைவேற்றிய பிறகு மதினாவுக்கும் செல்கின்றனர். மதினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உள்ளது. அந்த இடத்திற்கு செல்லக்கூடியவர்கள் நபிகள் நாயகம் அவர்களுக்கு சலாம் சொல்வார்கள். அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். "என்னுடைய அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக மாற்றி விடாதீர்கள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் இன்று வரை அவ்வாறே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஹஜ், உம்ரா சமயத்தில் ஆண்கள் அணியக்கூடிய தையலற்ற கீழாடை மற்றும் மேல்துண்டு ஆகிய இரண்டு துணிகள் இறைநம்பிக்கையாளரின் மரணத்திற்குப் பிறகு அணிவிக்கப்படக்கூடிய 'கபன்' என்ற உடையை நினைவுபடுத்தக் கூடியதாக உள்ளது. மேலும் அரபா மைதானத்தில் ஹாஜிகள் அனைவரும் ஒன்று கூடி இருக்கக்கூடிய காட்சி மறுமை நாளில் இறைவனின் முன் ஒன்று கூட்டப்படும் காட்சியை நினைவுபடுத்தக்கூடியதாகவும் இருக்கிறது.


Next Story