கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்


கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
x

பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார். அத்தகைய சிறப்புமிக்க கருடனை பற்றி சில தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

1. ஸ்ரீகருடன் மஹாவிஷ்ணுவின் 'சங்கர்ஷண' அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.

2. கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, கதிர்ப்பச்சை, செண்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

3. 'யுவதிஜனப்பிரியா நம' என கருடனை மாலை நேரத்தில் துதித்து பெண்களும் குங்கும அர்ச்சனை செய்யலாம்.

4. காஞ்சியில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே `கருட சேவை' எனப்படும். அப்போது பெருமாள், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடைப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

6. 'திருமாலும் கருடனும் ஒருவரே' என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது.

7. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி - பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக கருடன் விளங்குகிறார்.

9. கருடனுக்கு `சார்பர்ணன்' என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.

10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.

11. கருடனுக்கு கருத்மான், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

12. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

13. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ளது அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

14. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

15. நேபாள நாட்டில் `கருட நாக யுத்தம்' என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடனே இறங்கி விடும்.

16. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது.


Next Story