ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்


ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்
x

கோவிலில் அகல் விளக்கு ஏற்றும்போது, காற்றில் அணைந்து விட்டால், அதனை அபசகுனம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கேள்வி:- கோவில்களில் சங்கு ஊதுவது ஏன்?. அனைவரும் சங்கு எடுத்து ஊதலாமா? (கார்த்திக், சென்னை)

பதில்:- சங்கு என்பது 'மங்கல' வாத்தியம். திருக்கோவில் இல்லாத ஊரும்-என்ற பாடலில், `விருப்பொடு வெண் சங்கம் ஊதா ஊரும்'-என ஆறாம் திருமுறை கூறுகிறது. `திருக்கோவிலில் சங்கிடுவான் போகின்றார்' என்பது ஆண்டாள் வாக்கு. நல்ல சங்கைக் காதில் வைத்து கவனித் தால், `ஓம்'-எனும் நாதம் எழுவதைக் கேட்கலாம். மங்கலப்பொருளான சங்கை ஊதும் போது, 'ஓம்' என எதிரொலிப்பதைக் கேட்கலாம். சங்கை எல்லோரும் ஊதலாம்; எந்தப் பாகுபாடும் கிடையாது. ஆனால் அதற்கு நிறைய மூச்சுப் பயிற்சி தேவை.

கேள்வி:- பவுர்ணமிகளில் மட்டும்தான் கிரிவலம் வர வேண்டுமா? மற்ற நாட்களில் கிரிவலம் வந்தால் பலன் உண்டா? (ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு)

பதில்:- எந்த நாளிலும் கிரிவலம் வரலாம். எந்தெந்த நாளில் வலம் வந்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று, 1906-ம் ஆண்டு வெளிவந்த 'அருணாசல புராணம் மூலமும் உரையும்' என்ற நூல், பிரம்மதேவர் சனக ரிஷிக்குச் சொன்னதாக விரிவாகக் குறிப்பிடுகிறது. அவற்றில் சில... ஞாயிற்றுக்கிழமை அன்று கிரிவலம் வந்தால், சிவபதம் கிடைக்கும்; திங்கட்கிழமை அன்று கிரிவலம் வந்தால், இந்திரனைப்போல வாழ்ந்து தெய்வத் தன்மையைப் பெறுவார்கள்; செவ்வாய்-கடன், தரித்திரம் நீங்கும், ஏழு பிறவிகளும் நீங்கும். புதன்கிழமை-4 வேதங்கள், 6 சாத்திரங்கள், 64 கலைகள் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்று, தேவர்களாக ஆவர். வியாழன் - திரிமூர்த்திகளும் புகழும்படியாகத் தேவர்களையும், முனிவர்களையும் விட உயர்ந்த நிலை அடைவார்கள். வெள்ளி- விஷ்ணு பாதத்தில் சேர்வார்கள். சனி உதயத்தில் - நவக்கிரகங்களும் நன்மை அளிக்கும்.

கேள்வி:- சில ஆலயங்களில் மனிதர்கள் இறையருள் வந்து, ஆடுவதையும் குறி சொல்வதையும் பார்க்கிறோம். அது உண்மையா? (ஆ.கஸ்தூரி, தூத்துக்குடி)

பதில்:- உண்மை தான்! இதை சிலப்பதிகாரம் மிகவும் விரிவாகக் கூறுகிறது. சாமி வந்து ஆடியவரின் பெயர், அவர் அலங்காரத் தோற்றம், பரிவாரங்கள், காணிக்கைகள்; சாமியாடி, கண்ணகியைப்பற்றிச் சொன்ன அபூர்வ உண்மைகள் என அனைத்தும் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப் பட்டுள்ளன. சாலினி எனும் பெண், சாமி வந்து ஆடினாள். சிறு வெள்ளைப் பாம்புக்குட்டியைப் போலச் செய்த தங்கக்கயிற்றால், அவள் கூந்தலைக் கட்டியிருந்தார்கள். புலிப்பற்களால் வரிசையாகக் கோர்க்கப்பட்ட `புலிப் பல் தாலி'யை அவள் கழுத்தில் போட்டார்கள்; புலித்தோலால் ஆன புள்ளி புள்ளியான ஆடையைக் கட்டினார்கள்; நீண்ட கொம்புகள் உடைய ஆண் மானின் மீது சாமியாடியை உட்கார வைத்தார்கள். கிளி, காட்டுக்கோழி, மயில், பந்து, கிழங்குகள் ஆகியவற்றை சாமியாடிக்குக் கொடுத்தார்கள். வண்ணக்குழம்பு, நறுமணப் பொடி, வாசனை மிகுந்த குளிர்ந்த சந்தனம், அவரை, துவரை, எள் உருண்டை, மாமிசம் கலந்த சோறு, மலர்கள், நறுமணப் புகை, வாசனைப் பொருட்கள் ஆகியவற்றைத் தாங்கிய பலர், சாமியாடியைச் சுற்றி இருந்தார்கள். கொட்டு முழக்கு, பறை வாத்தியம், ஊதும் சின்னமான கொம்பு, புல்லாங்குழல், மணி ஆகியவை ஒன்றாக ஒலித்தன. சாமியாடி வந்து பலி பீடத்தை வணங்கிக் கொற்றவையைத் தொழுது துதித்தாள். தெய்வ ஆவேசம் வந்த சாமியாடி, அங்கிருந்த கண்ணகியைச் சுட்டிக்காட்டி, "இவள் கொங்குநாட்டின் விலை மதிப்பற்ற செல்வி! குடமலை நாட்டை ஆள்பவள்! தென் தமிழ்ப் பாவை! மேலோர் செய்த தவக்கொழுந்து! இந்த உலகிற்கு எல்லாம் ஒப்பற்ற மாமணி போல மிகுந்த ஔியைத்தரும் தெய்வ மகள்!" என்றாள் சாமியாடி. இதன்பிறகு தான், கோவலன் மதுரை போனது, விபரீதம் விளைந்தது, கண்ணகி வந்து மதுரையை எரித்தது, தெய்வமானது ஆகியவை நடந்தன. கண்ணகி தெய்வப்பெண் என்று முதலில் சொன்னது- சாமியாடி. சிலப்பதிகாரம் சொல்லும் உண்மை இது. ஆகவே சாமி வந்து ஆடுவது, அருள் வாக்கு சொல்வது என்பவை உண்மையே!

கேள்வி:- கோவிலில் அகல் விளக்கு ஏற்றும்போது, காற்றில் அணைந்து விட்டால், அதனை அபசகுனம் என்று எடுத்துக் கொள்ளலாமா? (ராஜ், கீரமங்கலம்)

பதில்:- கூடாது. அதை அபசகுனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கேள்வி:- காயத்ரி மந்திரங்களில் வரும் `தந்நோ' என்பதில், தந்நோ அல்லது தன்னோ-எது சரியானது? (க.ராஜகோபாலன், சென்னை)

பதில்: 'தன்னோ' - அல்ல! `தந்நோ' என்பதே சரியானது.

கேள்வி:- பக்திக்கும் முக்திக்கும் என்ன வித்தியாசம்? (ஜி.ராஜ், புதுக்கோட்டை)

பதில்:- பக்தி இப்பிறவியில் நிம்மதியையும், மகிழ்வையும் வழங்கும். முக்தி மீண்டும் பிறப்பில்லாத ஆனந்தத்தை அருளும்.


Next Story