சகல சவுபாக்கியங்களும் அருளும் சொர்ண காலபைரவர்


சகல சவுபாக்கியங்களும் அருளும் சொர்ண காலபைரவர்
x

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவிசநல்லூர் என்ற ஊர். இங்கு மகா சொர்ண பைரவி உடனாய சொர்ண காலபைரவர் ஆலயம் அமைந்திருக்கிறது.

இந்த ஆலயத்தின் கருவறையில் கற்பக விருட்ச மரத்தின் கீழ், வலது காலை மடக்கி, இடது காலை தொடங்கவிட்டபடி காலபைரவரும், அவருக்கு அருகில் இடதுபக்கம் பைரவி தேவியும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். இது போன்று பைரவரும், பைரவியும் ஒரே கருவறையில் இணைந்து அமர்ந்தபடி காட்சி தரும் ஆலயம் வேறு எங்கும் இல்லை என்கிறார்கள்.

நான்கு கரங்களுடன் அருளும் ெசார்ண கால பைரவர் தன்னுடைய மேல் இரு கரங்களில், நவ நிதிகளில் இருபெரும் நிதிகளாக விளங்கும் சங்கநிதி, பத்மநிதிகளை தாங்கியிருக்கிறார். கீழ் இரு கரங்களும், அபய, வரத முத்திரைகளை காட்டுகின்றன. தன்னுடைய மடியில் உள்ள பூரண கும்பத்தில், சர்வலோக நோய்களைத் தீர்க்கும் அமிர்தத்தை வைத்திருக்கிறார். பைரவரைப் போல, பைரவியின் மடியிலும் ஒரு கும்பம் உள்ளது. இது 'சொர்ண கும்பம்' ஆகும். இதில் இருந்து சொர்ணம் சுரந்து கொண்ட இருக்கும். காலபைரவரும், பைரவியும் குரு மற்றும் குபேரனுக்கு உரிய வடக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.

இந்த ஆலயத்திற்கு வந்து இத்தல சொர்ண காலபைரவரையும், காலபைரவியையும் வழிபடுபவர்களுக்கு, தலையெழுத்து மாறும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் யாவும் சாதகமாக மாறும் என்கிறார்கள். ஆயிரம் ஆலயத்திற்கு சென்று வணங்கி வந்த புண்ணியம், இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் வணங்கினால் கிடைக்கப்பெறும். பொன், பொருள், செல்வாக்கு, புகழ் போன்றவை வந்து சிறப்பான வாழ்க்கை அமையும். சூரியனை சுற்றியே அனைத்து கிரகங்களும் வலம் வருகின்றன. அந்த வகையில் சூரியனின் பிராண தேவதையாக பைரவர் விளங்குகிறார். எனவே இத்தல பைரவரை வணங்கினால், சூரிய தோஷம் மட்டுமின்றி, அனைத்து கிரக தோஷங்களும் விலகும். அதோடு அஷ்டதிக்கு பாலகர்களின் அனுக்கிரகமும் கிடைக்கப்பெறும்.

இந்த ஆலயத்தில் வடுக பைரவர், பாலகனின் தோற்றத்தில் வித்தியாசமாக காட்சி தருகிறார். வடக்கு மூலையில் தெற்கு நோக்கி இவர் அருள்கிறார். மூர்த்தி சிறியதானாலும், கீர்த்தி பெரியது. இவரை வழிபட்டால் துன்பங்கள், ஏவல், பில்லி, சூனியம் போன்றவை, கடன் தொல்லைகள் விலகும். ஆலயத்தின் வடமேற்கு மூலையில் அரசு மற்றும் வேம்பு மரத்தின் அடியில் தனிச் சன்னிதியில் வரசித்தி வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவர் சர்வ சங்கடங்களையும், தடைகளையும் அகற்றுபவர். மேலும் இந்த மரத்தடியில் நாக சக்திகளுடன் மகா வேம்பு வாலையம்மன், காத்தாயி அம்மன், மாரியம்மன், சப்த மாதர்கள் வீற்றிருக்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. காலை 10 மணிக்கு கொல்லிமலையில் இருந்து கொண்டு வரப்படும் சிறப்பான மூலிகைகளைக் கொண்டு, காலபைரவர், அஷ்டபைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம் செய்யப்படுகிறது. செல்வ வளம், காரிய சித்திகளை அடைவதற்காக நடத்தப்படும் யாகம் இதுவாகும்.

திருவிசநல்லூரில் உள்ள சவுந்திரநாயகி உடனாய சிவலோகிநாதர் ஆலயத்திற்கும், திருந்துதேவன் குடியில் உள்ள அருமருந்து நாயகி உடனாய கற்கடேஸ்வரர் கோவிலுக்கும் இடையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.


Next Story