திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழா

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
திருவாரூர்;
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
தெப்பதிருவிழா
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சப்த விடங்க தலங்களில் முதன்மையானதாக விளங்கிறது. இந்த கோவில் ஆழித்தேர் ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. அதனுடன் மற்றொரு சிறப்பு இந்த கோவிலின் தெப்பத் திருவிழாவாகும். திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்தின் நீளம், அகலம் 50 அடி ஆகும்.உயரம் சுமார் 42 அடி. 432 காலி பேரல்களில் காற்று நிரப்பி கட்டப்பட்ட தெப்பத்தில் சுமார் 500 பேர் ஏறி செல்லும் வகையில் பிரமாண்டமாக இந்த தெப்பம் அமைக்கப்படும். தியாகராஜர் கோவிலில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆழித்தேரோட்டம் கடந்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடந்தது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து கமலாலயம் குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி தியாகராஜர் கோவில் தெப்ப திருவிழா இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
வெள்ளோட்டம்
3 நாட்களும் இரவு 8 மணிக்கு தொடங்கி விடிய விடிய குளத்தை தெப்பம் வலம் வரும். இதற்காக கடந்த 4-ந் தேதி பந்தல்கால் முகூர்த்தம் தொடங்கியது. அப்போது இருந்தே தினமும் பணியாளர்கள் தெப்பம் கட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். நேற்று தெப்பம் கட்டும் பணிகள் முடிந்த தருவாயில் மின்விளக்குகள் பொருத்தும் பணி நடந்தது. தொடர்ந்து தெப்பம் வெள்ளோட்டம் விடப்பட்டது.இன்று(வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு திருவாரூர் துர்க்காலயா ரோட்டில் உள்ள தெப்ப மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பார்வதி கல்யாணசுந்தரர் புறப்பட்டு கமலாலயம் குளத்தை அடைந்து, அங்கிருந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
விடிய விடிய நடக்கும்
பின்னர் குளத்தை சுற்றி தெப்பம் வர தொடங்கி விடிய, விடிய தெப்பத்திருவிழா நடக்கிறது. வெள்ளோட்டம் நிகழ்ச்சியின் போது பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நகர சபை உறுப்பினர்கள் வாரை பிரகாஷ், செந்தில், கோவில் பரம்பரை அறங்காவலர், உள்துறை கட்டளை சார்பில் ஸ்ரீதர், செயல் அலுவலர் அழகிய மணாளன் கோவில் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.