திருமாலின் ஐந்து நிலை வழிபாடு


திருமாலின் ஐந்து நிலை வழிபாடு
x

திருமால் ஐந்து நிலைகளில் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்பதே அந்த ஐந்து நிலைகள் ஆகும்.

1. பரநிலை என்பது முக்தி அடைந்தவர்களுக்கு வைகுண்டத்தில் தரிசனம் தரும் பரவாசுதேவர். 2. வியூகநிலை என்பது தேவர்களுக்கு அருள்புரிய பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள். 3. விபவ நிலை என்பது, நல்ல காரியங்களை நிறைவேற்றுவதற்காக திருமால் எடுத்து வந்த அவதாரங்கள். 4.அந்தர்யாமித்துவ நிலை என்பது, ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் இருப்பதை உணர்த்தும் தத்துவம். 5.அர்ச்சை நிலை என்பது, கோவில்களிலும், இல்லங்களிலும் சிலை வடிவமாக இருக்கும் நிலையை குறிப்பதாகும்.

இதில் அர்ச்சை நிலைதான் மிகவும் உயர்வானது. ஏனெனில் அதில்தான் நாம் இறைவனை கண்டு வழிபடுகிறோம். வடமொழியில் அர்ச்சா என்பதற்கு பூஜை, உருவம், விக்கிரகம் என்று பொருள். இந்து சமயத்தில் திருமாலை, அவரது முதல் நான்கு நிலைகளில் மனிதர்களால் வழிபட முடியாது. கடைசி நிலையான அர்ச்சையில்தான் வழிபட முடியும் என்பதால், இந்த நிலை மனிதர்களுக்கு நெருக்கமானது.

கோவில்களில் அநேக திருநாமங்களுடன் தரிசனம் தரும் உயிரூட்டப்பட்ட, திருமாலின் திருவுருவங்கள் அர்ச்சை எனப் படுகின்றன. இவை அசையா நிலையில் உள்ளவை. இதனை மூலவர் என்றும், திருவிழாக்காலங்களில் வெளியே எடுத்துச் செல்லக்கூடிய உற்சவர் என்றும் இந்த அர்ச்சா நிலை விக்கிரகங்களை அழைப்பார்கள். இவரை திருப்பெயரோடு சேர்த்து 'அர்ச்சாமூர்த்தி' என்றும் சொல்வார்கள். திருமாலை வழிபடும், வேத, ஆகம வழிபாடுகள் அனைத்தும் அர்ச்சை நிலையில் உள்ள விக்கிரகங்களுக்கே.

இறைவனை விக்கிரகமாக வழிபடப்படும் அர்ச்சை நிலை பிரதிஷ்டையை, நான்கு விதமாக பிரிக்கலாம். அவை, ஸ்வயம் வியக்தம், தைவிகம், ஆர்ஷம், மானுஷம் ஆகியவையாகும்.

* ஸ்வயம் வியக்தம் என்பது சுயம்பு நிலை. திருமால் சுயமாகவே வெளிப்பட்ட தலங்களாக இவை பார்க்கப்படுகின்றன. திருவரங்கம், திருவேங்கடம் எனப்படும் திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், நாங்குநேரி, முக்திநாத், புஷ்கரம், பத்ரிநாத், நைமிசாரண்யம் போன்றவை இவற்றில் குறிப் பிடத்தக்கவை.

* பிரம்மா, இந்திரன், சூரியன், தேவர்கள் போன்றவர்கள், திருமாலை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதை 'தைவிதம்' என்கிறோம். இதனை 'தேவ பிரதிஷ்டை' என்றும் சொல்வார்கள். பிரம்மதேவர் பிரதிஷ்டை செய்த காஞ்சிபுரம் அத்திவரதர், சூரியன் பிரதிஷ்டை செய்த கும்பகோணம் சக்கரபாணி பெருமாள் போன்றவை தைவிகப் பிரதிஷ்டை தலங்களாகும்.

* ஓரிடத்தில் முனிவர்களும், ரிஷிகளும் இறைவனை பிரதிஷ்டை செய்வதைத்தான் 'ஆர்ஷம்' என்பார்கள். மார்க்கண்டேய முனிவர் பிரதிஷ்டை செய்த உப்பிலியப்பன் கோவில், கோபில கோப்பிரளய ரிஷி பிரதிஷ்டை செய்த மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் ஆகியவை, ஆர்ஷ பிரதிஷ்டை தலங்கள்.

* அரசர்கள், மகான்கள், பக்தர்கள் ஆகியோர் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபடுவதையே 'மானுஷம்' என்கிறோம். ராமானுஜர் பிரதிஷ்டை செய்த கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள், பஞ்ச பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோவில் போன்றவை, மானுஷ பிரதிஷ்டை தலங்கள் ஆகும்.

1 More update

Next Story