ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடக்கம்


ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடக்கம்
x

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று தொடங்கியது. வருகிற 21-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம்,

நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதியான சூரியன் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று தொடங்கியது.

இத்திருவிழா 22 நாட்கள் நடைபெறும். இதனை முன்னிட்டு கோவிலில் நேற்று காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 7.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 8 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், காலை 9.30 மணிக்கு சுவாமி கள்ளபிரான் ஸ்ரீதேவி, பூதேவி, வைகுண்ட நாயகி சோரநாத நாயகி தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10.15 மணிக்கு திருப்பல்லாண்டு தொடக்கமும், பெருமாள் முன்பு பெரியாழ்வார் எழுந்தருளலும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது.

மாலை 5 மணிக்கு சாயரட்சை, மாலை 6.30 மணிக்கு சேர்த்தியில் ராஜாங்கம் சேர்வை, இரவு 7 மணிக்கு தீபாராதனையும், இரவு 9 மணிக்கு பல்லக்கில் ராஜாங்க சேர்வையும் நடைபெற்றது.

சொர்க்கவாசல் திறப்பு

விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கும், இரவு 9 மணிக்கும் கள்ளப்பிரான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற 23-ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பகலில் பெருமாள் சயனக் திருக்கோலமும், இரவு 6.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பும் நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story