வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா


வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா
x

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா

திருவாரூர்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பாடைக்காவடி திருவிழா

வலங்கைமானில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி பூச் சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 12-ந்தேதி முதல் காப்பு கட்டுதலும், 19-ந்தேதி 2-ம் காப்பு கட்டுதலும் நடந்தது. விழா நாட்களில் தினமும் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

பக்தர்கள் குவிந்தனர்

விழாவையொட்டி பால்குடம், பால்காவடி, பறவை காவடி, தொட்டில் காவடி, செடில் காவடிகள் உள்ளிட்ட பல்வேறு காவடிகளை நேற்று மாலை முதல் பக்தர்கள் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய வண்ணம் உள்ளனர். விழாவில் கலந்துகொள்வதற்காக வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு வந்து குவிந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் படி நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா தலைமையில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

45 கண்காணிப்பு கேமராக்கள்

பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன், செயல் அலுவலர் பரமேஸ்வரி ஆகியோர் தெரிவித்தனர். விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி, மயிலாடுதுறை, பாபநாசம் ஆகிய இடங்களில் இருந்து வலங்கைமானுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கோவில் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் 45 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதால் முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மணவழகன், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

--



Next Story