சதுர்த்தி விழா ஏற்பாடுகள்.. விதவிதமாக தயாராகும் விநாயகர் சிலைகள்


விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். இந்த விழா, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும். பொது இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா, அடுத்த மாதம் 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் கோவில்கள் சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா, பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் பூஜைகள், பஜனைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விநாயகர் சிலைகள் அடுத்த மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்திற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்து முன்னணி சார்பில் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை, இரணியல் கோணம் பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. ஒரு அடி முதல் 11 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் தயாராகின்றன. சிம்ம விநாயகர், மயில் விநாயகர், சூரசம்கார விநாயகர், வெற்றி விநாயகர், கருப்பு விநாயகர், வலம்புரி விநாயகர் என பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தான், மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு சுமார் 2500 சிலைகள் தயாராகி வருகின்றன.

இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் சூரங்குடி பகுதியில் தயாராகி வருகிறது. இங்கும் பல்வேறு வடிவிலான சிலைகளை தொழிலாளர்கள் தயார் செய்து வருகிறார்கள். சிலை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சிலைகள் எளிதில் கரையக்கூடிய வகையில் களிமண், சாக்பீஸ் பவுடர் போன்ற கலவைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்க, வெளி மாவட்டங்களில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.


Next Story