ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு


ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு  கண்ணில் சுண்ணாம்பு
x
தினத்தந்தி 11 July 2017 2:00 AM IST (Updated: 10 July 2017 11:13 PM IST)
t-max-icont-min-icon

அரைக்காசு உத்தியோகம் என்றாலும், அரசாங்க உத்தியோகம் என்று காலம்காலமாக சொல்வார்கள்.

ரைக்காசு உத்தியோகம் என்றாலும், அரசாங்க உத்தியோகம் என்று காலம்காலமாக சொல்வார்கள். பணியில் இருக்கும்போது, நல்ல சம்பளம் என்ற ஒரு மனநிறைவு இருக்கும் அதேநேரத்தில், பணியில் இருந்து ஓய்வுபெற்று, வயதுமுதிர்ந்த காலத்திலும் மாத பென்சன் கிடைக்கும். பென்சன் இல்லாத பணிகளிலும், அரசு பணி இல்லாமல் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் தங்களது வயதான காலத்திற்காக மாதம் மாதம் வயிற்றைகட்டி, வாயைக்கட்டி சேமிப்பார்கள். அந்த சேமிப்புத் தொகையை பல்வேறு முதலீடுகளில் போட்டு, அதில் கிடைக்கும் வட்டியைக்கொண்டுதான் வாழ்க்கைச்சக்கரத்தை ஓட்டுவார்கள். இந்தநிலையில், மத்திய அரசாங்க பணியில் உள்ளவர்களுக்கு 7–வது சம்பளக்குழு அளித்த சிபாரிசின்பேரில் ஏற்கனவே சம்பளஉயர்வு அளிக்கப்பட்டது. தற்போதைய பல அலவன்சுகளை உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

இப்போது, 34 லட்சம் மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும், 14 லட்சம் ராணுவ பணியில் உள்ளவர்களுக்கும் இந்தமாதம் முதல் வீட்டுவசதி அலவன்சு ஒவ்வொருவரின் அடிப்படை சம்பளத்திலும் 24, 16, 8 சதவீதங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாடு 50 லட்சத்திற்கும் மேல் வாழும் நகர்பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள், 5 முதல் 50 லட்சம்வரை மக்கள் தொகைக்கொண்ட நகரங்களில் வாழும் ஊழியர்கள், 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகைக்கொண்ட இடங்களில் வாழும் ஊழியர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதுபோல, பென்சன் வாங்குபவர்களின் மாதாந்திர மருத்துவ அலவன்சு ரூ.500–லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நோயாளிகளை கவனிப்பதற்கான அலவன்சு மாதம் ரூ.2,100–லிருந்து ரூ.5,300 ஆக உயர்த்தப்படுகிறது. குழந்தைகளுக்கான கல்வி அலவன்சு ரூ.1,500–லிருந்து, ரூ.2,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,748 கோடி கூடுதலாக செலவாகும். 7–வது சம்பளக்கமி‌ஷன் பரிந்துரையை மட்டும் அமல்படுத்தியிருந்தால் எவ்வளவு செலவு ஆகுமோ? அதைவிட, ரூ.1,440 கோடி கூடுதலாக இந்த அலவன்சு உயர்வினால் அரசுக்கு செலவு ஏற்படும்.

மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு அளிக்கப்படும் இந்த அலவன்சு உயர்வு வரவேற்புக்குரியது என்றாலும், அதேநேரத்தில் சிறுசேமிப்புகளுக்கான வட்டித்தொகையை தொடர்ந்து அரசாங்கம் குறைத்துக்கொண்டுவருவது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. ஏற்கனவே தொடர்ந்து இந்த வட்டிவிகிதங்கள் குறைக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. இப்போது ஜூலை முதல் செப்டம்பர் முடிய காலாண்டுக்கான வட்டிவிகிதம் வருங்கால வைப்புநிதி, செல்வமகள் சேமிப்புத்திட்டம், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்புத்திட்டம், கிசான் விகாஸ் பத்திரம் போன்ற சேமிப்புத்திட்டங்களுக்கு .1 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்புத்திட்டத்திற்கு 2015–16–ம் ஆண்டுகளில் 9.3 சதவீத வட்டி இருந்தது. இதுபோல, செல்வமகள் சேமிப்புத்திட்டத்திற்கு 9.2 சதவீதமாக வட்டி இருந்தது. ஆனால், இப்போதோ வருங்கால வைப்புநிதிக்கு 7.8 சதவீதம், செல்வமகள் சேமிப்புத்திட்டத்திற்கு 8.3 சதவீதம், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்புத்திட்டத்துக்கு 8.3 சதவீதம் என்று குறைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சேமிப்பில் உற்சாகம் ஏற்படுத்தவும், மூத்த குடிமக்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்கவும், சேமிப்புத்திட்டங்களுக்கு வட்டியை குறைக்காமல் இருப்பதே நல்லது. சேமிப்புத்திட்டங்களின் வட்டிவிகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டுக்கொண்டே வருவதால், மக்களுக்கு அஞ்சலகம், வங்கி போன்ற முறையான நிதிநிறுவனங்களில் சேமிப்பதில் நம்பிக்கை இழந்து, அதிக வட்டித்தரும் அதிகாரப்பூர்வமற்ற நிதிநிறுவனங்களில் சேமிப்பதற்கான உணர்வை ஊக்குவிக்கும் நிலை ஏற்படுவது அரசுக்கும் நல்லதல்ல, பொதுமக்களுக்கும் நல்லதல்ல. எனவே, எதிர்காலத்திலாவது, சிறுசேமிப்புத் திட்டங்களில் வட்டிவிகிதத்தை குறைக்காமல் நடவடிக்கை எடுத்து, ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலையை தவிர்த்து, இருகண்களிலும் வெண்ணெய் என்ற நிலையை உருவாக்க  வேண்டும்.

Next Story