அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் உள்ள பொறுப்பு – கடமை


அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் உள்ள  பொறுப்பு – கடமை
x
தினத்தந்தி 19 July 2017 3:00 AM IST (Updated: 18 July 2017 11:33 PM IST)
t-max-icont-min-icon

சில தினங்களுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழக 159–வது வருடாந்திர பட்டமளிப்பு விழா நடந்தது.

சில தினங்களுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழக 159–வது வருடாந்திர பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில், ஓய்வு பெற்ற ரிசர்வ் வங்கி கவர்னரும், பொருளாதார நிபுணருமான சி.ரங்கராஜன் ஆற்றிய உரை மிகவும் சிந்திக்கத் தகுந்த வகையிலும், உடனடியாக செயல்படுத்த வேண்டிய வகையிலும் இருந்தது. உயர்கல்வி சீர்திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். உயர்கல்வியின் நல்ல தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், நாம் நான்கு இனங்களில் முக்கியத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். முதலாவதாக, தேர்வுமுறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அதுபோல, பாடத்திட்டங்களை நவீனப்படுத்துதல் மற்றும் சீரிய கற்பித்தல் முறைகளை புகுத்துதல் ஆகியவையுமாகும். கல்வி கற்பதை ஒரு மகிழ்ச்சிக்குரிய அனுபவமாக மதிக்கும் வகையில் மாணவர்களின் மனப்பாங்கையும் மாற்றவேண்டும் என்று பேசி இருந்தார். இதை இப்போது முதலாவதாக, பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம் செயல்படுத்த வேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது. தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது 518 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.

தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லா கல்லூரிகளிலுமே இறுதி ஆண்டு படிக்கும்போதே ‘கேம்பஸ்’ இன்டர்வியூவில் மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பும் கிடைத்தது, கைநிறைய சம்பளமும் கிடைத்தது. இந்த எதிர்பார்ப்பில்தான் பிளஸ்–2 படித்து முடிக்கும் மாணவர்கள் எல்லோருமே தங்கள் முதல் விருப்பமாக பொறியியல் படிப்பை நாடுகிறார்கள். ஆனால், காலப்போக்கில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து விட்டதாலும், சர்வதேச நிறுவனங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மாணவர்களின் கல்வித்தரம் இல்லாததாலும், இந்த வேலைவாய்ப்பு மங்கத்தொடங்கின. பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் முழுமையாக நிரம்புவதில்லை. தற்போது தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 692 இடங்கள் இருக்கின்றன. இதில், அரசு ஒதுக்கீடாக 1 லட்சத்து 75 ஆயிரத்து 500 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 86 ஆயிரத்து 192 இடங்களும் இருக்கின்றன. தற்போது கவுன்சிலிங்கிற்கு 1 லட்சத்து 36 ஆயிரத்து 988 மாணவர்கள்தான் அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில், மொத்த இடங்களில் 47.65 சதவீத இடங்கள் அதாவது, 1 லட்சத்து 24 ஆயிரத்து 704 இடங்கள் கல்லூரிகளில் காலியாக இருக்கும்நிலை உருவாகிவிட்டது. இது நிச்சயமாக கல்லூரிகளுக்கு மட்டுமல்ல, தொழில் நுட்ப கல்வித்துறைக்கே நல்லதல்ல. இந்தநிலை மாறவேண்டும் என்றால், அரசாங்கமும், அண்ணா பல்கலைக்கழகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அரசாங்கத்தின் பொறுப்பாக பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்பு கிடைக்கும் வகையில், உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவில் தொடங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் மிகச் சொற்பமான அளவே வேலைவாய்ப்பை தரமுடியும். தனியார் நிறுவனங்கள்தான் பெருமளவில் வேலை வாய்ப்புகளை தர இயலும். அந்தவகையில், தனியார் தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்குவது அரசின் கையில்தான் இருக்கிறது. அடுத்து தனியார் நிறுவனங்கள் எந்த உயர்தரத்துடன், தகுதியுடன் என்ஜினீயர்களை எதிர்ப்பார்க்கிறது என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்றவகையில், அவர்கள் படித்து முடித்து வெளியே வரும் வகையில் பொறியியல் படிப்புக்கான பாடத்திட்டத்தை நவீன உயர்தரம் கொண்டதாக மாற்றுவதும், படிக்கும்போதே அவர்கள் செயல்முறை பயிற்சியை பெறுவதற்குமான திட்டங்களை வகுக்கவேண்டியதும் பல்கலைக்கழகங்களின் பொறுப்பில்தான் இருக்கிறது. உயர்கல்வித்தரம் இருந்தால் உலகின் எந்த மூலையிலும் தமிழ்நாட்டில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கும். அந்தவகையில் அரசும், பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து உடனடியாக தங்கள் பொறுப்பை– கடமையை ஆற்றவேண்டிய நேரம் தொடங்கி விட்டது.

Next Story