துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு


துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 20 July 2017 3:00 AM IST (Updated: 19 July 2017 8:44 PM IST)
t-max-icont-min-icon

ஆகஸ்டு 5–ந்தேதி, 13–வது துணை ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் யார் போட்டியிடப்போகிறார்கள்? என்பதை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

கஸ்டு 5–ந்தேதி, 13–வது துணை ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் யார் போட்டியிடப்போகிறார்கள்? என்பதை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காந்தியின் பேரனும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதித்துறை  மந்திரி  வெங்கையா நாயுடுவின்  பெயர் பா.ஜ.க.வால் முன்மொழியப்பட்டது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. தற்போதுள்ள சூழ்நிலையில், சரியான ஒருவரைத்தான் பிரதமர் நரேந்திரமோடியும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். வெங்கையாநாயுடு வெற்றிபெறப்போவது நிச்சயம். ஏனெனில், துணை ஜனாதிபதியை பாராளுமன்ற, மேலவை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். பாராளுமன்றத்தில் உள்ள 543 உறுப்பினர்களும், மேல்–சபையில் உள்ள 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், 12 நியமன உறுப்பினர்களும் சேர்ந்து துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவேண்டும்.

பா.ஜ.க.வை பொறுத்தமட்டில், 527 ஓட்டுகள் நிச்சயம் கிடைக்கும் என்றவகையில், மூன்றில் இரண்டு பங்குக்கும் மேல் மெஜாரிட்டியோடு வெங்கையா நாயுடு வெற்றிபெறுவார் என்பது உறுதியாகிவிட்டது. துணை ஜனாதிபதி டெல்லி மேல்–சபை தலைவராகவும் பொறுப்பு வகிப்பார். மேல்–சபையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாதநிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள், கோ‌ஷங்கள், போராட்டங்கள் போன்ற பல புயல்களை மேல்–சபை தலைவர் சந்திக்கவேண்டியதிருக்கும். வெங்கையா நாயுடு ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர் என்பது மட்டுமல்லாமல், வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி எதுகை மோனையோடும், நகைச்சுவையாகவும் பேசும் ஆற்றல்கொண்டவர். இதுமட்டுமல்லாமல், சர்வக்கட்சிக்கும் நண்பர் என்று கூறும்வகையில், கட்சி வேறுபாடில்லாமல் எல்லோரிடமும் இனிமையாக பழகக்கூடியவர். எனவே, டெல்லி மேல்–சபையில் அனலும், புயலும் வீசினால், தென்றல் வீசச்செய்யும் திறமை ஒருவருக்கு உண்டு என்றால் அது நிச்சயமாக வெங்கையா நாயுடுவுக்குத்தான். எதுகை மோனையோடு அவர் பேசுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு, சிலதினங்களுக்கு முன்பு அவர் பெயர் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்மொழியப்படக்கூடும் என்ற சூழ்நிலையில், அவர் ‘நான் உஷாபதியாகத்தான் இருக்க விரும்புகிறேன் (உஷா என்பது அவரது மனைவி பெயர், ‘பதி’ என்றால் ‘கணவர்’ என்று பொருள்), உபராஷ்ட்ரபதியாக (துணை ஜனாதிபதியாக) அல்ல’ என்று கூறினார்.

ஜனாதிபதியாக வடமாநிலங்களில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தென்மாநில மக்களை திருப்திப்படுத்த வேண்டுமென்றால், இங்கிருந்து ஒருவர் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்வதன் மூலமாகத்தான் முடியும். இது 2019 தேர்தலுக்கும் பா.ஜ.க.வுக்கு பயன்படும். 2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் 66 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 2019–ம் ஆண்டு தேர்தலில் தென்மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றிபெறவேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் பா.ஜ.க.விற்கு, துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது சிறந்த பிரசாரமாக திகழும். இதோடு, இதுவரையில் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஜாகிர்உசேன், வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன், சங்கர்தயாள்சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரெல்லாம் துணை ஜனாதிபதியாக இருந்து ஒருமுறை பதவி வகித்தப்பிறகு, அடுத்தமுறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே, அதுபோல அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக வெங்கையா நாயுடு நியமிக்கப்படுவதற்கான ஒரு உகந்த சூழ்நிலையும் இருக்கிறது என்று பா.ஜ.க. கருதுகிறது. இப்படி பல கணக்குகளைப்போட்டு கூட்டிப்பார்த்துதான் துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வின் அடிமட்ட தொண்டனாக இருந்து தன் உழைப்பினாலும், திறமையினாலும் பா.ஜ.க.வின் தலைமை பதவிக்கே வந்த வெங்கையா நாயுடு, இதுவரை கட்சிக்கு எவ்வாறு பெருமைசேர்த்தாரோ அதுபோல, இனி நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார் என்பதைத்தான் ஒட்டுமொத்த இந்தியா எதிர்பார்க்கிறது.

Next Story