போலீஸ் நிலையங்களில் புலன் விசாரணை
தமிழ்நாட்டில் 266 போக்குவரத்து காவல்நிலையங்கள், 200 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் மற்றும் 27 புறக்காவல்நிலையங்கள் உள்பட மொத்தம் 1,835 காவல்நிலையங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் 266 போக்குவரத்து காவல்நிலையங்கள், 200 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் மற்றும் 27 புறக்காவல்நிலையங்கள் உள்பட மொத்தம் 1,835 காவல்நிலையங்கள் உள்ளன. இந்த காவல்நிலையங்களில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் முதல் டி.ஜி.பி. வரையில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 235 ஆகும். ஆனால், நிறைய காலியிடங்கள் இருக்கின்றன. போலீஸ் நிலையங்களில்தான் புகார்கள் கொடுக்கப்படுகிறது. பல நேரங்களில் இவ்வாறு கொடுக்கப்படும் புகார்கள் உரிய நேரத்தில் புலன்விசாரணை செய்யப்படாமல் காலம் நீடித்துக்கொண்டே போகிறது. இதற்கு காரணம், போலீஸ்காரரின் வேலைபளுதான்.
ஒரு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும்போது அதை விசாரணை செய்யவேண்டியது இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர், தலைமை போலீஸ்காரர்கள்தான். ஆனால், இவர்கள் பணி பெரும்பாலும் பாதுகாப்பு பணியிலும், சட்டம்–ஒழுங்கை பராமரிக்கும் பணியிலும், ரோந்து பணியிலுமே இருப்பதால், பலநேரங்களில் காலையிலேயே போலீஸ் நிலையத்தைவிட்டு வெளியே செல்லும் இவர்கள், இரவு வெகுநேரம் கழித்துத்தான் திரும்பவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்தநிலையில், அவர்களால் காவல்நிலையத்தில் புகார்களை பெறுவதற்கோ, அதை புலன்விசாரணை செய்வதற்கோ, அதன்மீது வழக்கு தொடர்வதற்கோ சரியான நேரம் இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்காமல் தாமதமாகிறது. இதுபோன்ற நிலையை தவிர்க்க சுப்ரீம் கோர்ட்டு, ‘காவல்நிலையங்களில் சட்டம்–ஒழுங்கை பராமரிக்கும் குற்றப்புலனாய்வுக்கும் தனித்தனி பிரிவுகள் இயங்கவேண்டும். சட்டம்–ஒழுங்கை பராமரிக்கும் போலீசார் அந்த பணியை மட்டும் கவனித்துக்கொள்ளவேண்டும். குற்றப்புலனாய்வுக்கு என தனிபிரிவு இருக்கவேண்டும். அவர்கள் சட்டம்–ஒழுங்கை பராமரிக்கும் பணிக்கு அனுப்பக்கூடாது’ என உத்தரவிட்டிருந்தது.
இப்போது போலீஸ் டைரக்டர் ஜெனரல் அரசாங்கத்தின் ஒப்புதலைப்பெற்று இதற்குரிய ஆணைகளை பிறப்பித்துள்ளார். அதற்கேற்ப, சென்னை பெருநகரம் மெட்ரோ–1 போலீஸ் நிலையங்கள், சென்னை புறநகர் மெட்ரோ–2 போலீஸ் நிலையங்கள் மற்றும் பெரிய போலீஸ் நிலையங்களில் சட்டம்–ஒழுங்குக்கு என தனியாக ஒரு இன்ஸ்பெக்டர், குற்றப்புலனாய்வுக்கு என தனியாக ஒரு இன்ஸ்பெக்டர் இருக்கவேண்டும். மற்ற நடுத்தர மற்றும் சிறிய போலீஸ் நிலையங்களில் இருபிரிவுகளுக்கும் தனித்தனியாக சப்–இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவேண்டும். இதுதவிர, அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சட்டம்–ஒழுங்குக்கும், குற்றப்புலனாய்வுக்கும் என தனித்தனியாக எத்தனை தலைமை காவலர்கள், முதல்நிலை, 2–ம் நிலை போலீஸ்காரர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நிச்சயமாக வரவேற்கத்தகுந்தது. உடனடியாக இந்தமுறை நடைமுறைக்கு வரவேண்டும். இவ்வாறு தனித்தனியாக பிரிப்பதன் மூலம் சட்டம்–ஒழுங்கு பிரிவுக்கான போலீசார் மிகத்தீவிரமாக சட்டம்–ஒழுங்கு பராமரிப்பில் மட்டும் ஈடுபடவேண்டும். குற்றப்புலனாய்வு போலீசார் இதில் தங்கள் பராமரிப்பில் மட்டும் அக்கறையோடு ஈடுபடமுடியும். குற்றப்புலனாய்வு போலீசாரை பொறுத்தமட்டில், புலனாய்வில் நல்ல திறமைபடைத்தவர்களை மட்டும் நியமிக்கவேண்டும்.
இப்போதெல்லாம் சட்டம் படித்தவர்கள் நிறைய பேர் காவல்துறையில் சேர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை புலனாய்வு பிரிவில் நியமித்தால், நிச்சயமாக குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க சட்டரீதியாக வழக்குகளை தொடரமுடியும். ஒவ்வொரு புகார் மீதும் புலன்விசாரணை செய்ய இத்தனை நாட்கள், வழக்கு தொடர இத்தனை நாட்கள், வழக்குகளை முடிக்க இத்தனை நாட்கள் என்று காலக்கெடு நிர்ணயிக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், இந்த புலனாய்வு பிரிவில் நியமிக்கப்படுபவர்கள் அடிக்கடி மாறுதலுக்கு உட்படாமல், ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை பணிசெய்ய அனுமதிக்கவேண்டும். ஏனெனில், புகார்களை விசாரிப்பது ஒருவர், வழக்கு தொடருவது ஒருவர், அந்த வழக்குகளை நீதிமன்றத்தில் நடத்துபவர் ஒருவர் என்று இருந்தால், ஒரு சரியான இணைப்பு இருக்காது.
Related Tags :
Next Story