யார் பெறுவார் அந்த 22?
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில், முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 2-ம் கட்ட தேர்தலாக வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
இங்கு 39 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தாலும், அது தமிழ்நாட்டில் பெரிய அரசியல் தாக்கம் எதையும் ஏற்படுத்தப்போவதில்லை. இதேநாளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் தொகுதி, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மரணமடைந்ததால் ஏற்பட்ட வெற்றிடமாகும். மற்ற 17 தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையொட்டி ஏற்பட்ட காலியிடம் ஆகும்.
இதுதவிர அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி), சூலூர் ஆகிய 4 தொகுதிகளும் காலியாக இருந்தன. இதில் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால் ஏற்பட்ட வெற்றிடமாகும். திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த மறைந்த ஏ.கே.போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்ற 2 தொகுதிகளிலும் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் அவைகளும் காலியிடமாக அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில், 4 தொகுதிகளுக்கும் மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ஆக, மொத்தம் 22 சட்டசபை தொகுதிகளின் தேர்தல் முடிவுகளும், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளோடு மே 23-ந்தேதி அறிவிக்கப்படும். இந்த 22 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள்தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆளப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும். ஏனெனில், தமிழக சட்டசபையில் மொத்த இடங்கள் 234 ஆகும். இதில் 118 தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சிதான் ஆளுங்கட்சியாக இருக்கமுடியும். தற்போது தமிழ்நாட்டில் சபாநாயகரை சேர்த்து அ.தி.மு.க.வுக்கு 114 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு 88 உறுப்பினர்களும், அந்த கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு 8 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். அ.தி.மு.க.வில் உள்ள அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
தமிழ்நாடு கொங்கு பேரவை நிறுவனர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. சேர்ந்ததால், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிமுன்அன்சாரி பிரசாரம் செய்கிறார். மற்ற 2 பேரும் எந்தநிலையை எடுப்பார்கள் என்ற உறுதியான நிலை அரசியல் அரங்கில் காணப்படவில்லை. இவர்கள் 6 பேரையும் சேர்த்து ஆதரவாக கணக்கிட்டால் மட்டுமே குறைந்தபட்சம் 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றாக வேண்டும். இந்த 6 பேரையும் கழித்து பார்த்தால், சபாநாயகர் இல்லாமல் 107 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் இருக்கிறது. அப்படியென்றால் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். தி.மு.க.வை எடுத்துக்கொண்டால், 22 தொகுதிகளில் 21 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை கைப்பற்ற முடியும். இரு கட்சிகளுக்குமே மெஜாரிட்டிக்கு தேவையான இடங்கள் கிடைக்காவிட்டால், ஆளும்கட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்பு இருக்கிறது. ஆக, அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது தி.மு.க. ஆட்சியை கைப்பற்றுமா? என்பதற்கான விடையை இந்த 22 தொகுதிகளின் இடைத்தேர்தல்தான் தீர்மானிக்கும்.
Related Tags :
Next Story