மீன்பிடி தடைக்காலத்தை மாற்றவேண்டும்
படகோட்டி படத்தில் மறைந்த எம்.ஜி.ஆர், ‘தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ என்று பாடிய பாடல் இன்றளவும் மீனவர் சமுதாயத்தினரிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது.
படகோட்டி படத்தில் மறைந்த எம்.ஜி.ஆர், ‘தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ என்று பாடிய பாடல் இன்றளவும் மீனவர் சமுதாயத்தினரிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் மழையோ, புயலோ, வெயிலோ எது இருந்தாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்களின் வாழ்வு மிகவும் கஷ்டமான ஒன்றாகும். தினமும் மீன்பிடிக்கச்செல்லும் இவர்களுக்கு ஆண்டுக்கு 61 நாட்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்ற ஒரு தடை இருக்கிறது. ஏப்ரல் 15–ந்தேதி நள்ளிரவு முதல் தொடங்கிய இந்தத்தடை ஜூன் மாதம் 14–ந்தேதி வரை இருக்கிறது. இதற்கு காரணமாக இந்தகாலக்கட்டங்களில் மீன்களின் இனவிருத்தி நடைபெறும் என்பதால் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்பதற்காக இந்த தடை இருக்கிறது. இந்த 2 மாதமும் மீன்பிடித்தொழில் இல்லாமல், மீனவர்கள் தங்கள் படகுகளை பழுதுபார்ப்பதிலும், மீன்வலைகளை சரி செய்வதிலும் முழுமூச்சாக இருப்பார்கள்.
தமிழக அரசு இந்த 2 மாதமும் வேலையில்லாமல் இருக்கும் மீனவர்களுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக வழங்குகிறது. ஏறத்தாழ 1¾ லட்சம் பேர் இந்த உதவித்தொகையை பெறுகிறார்கள். இந்தத்தொகை போதாது உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கை மீனவர்களிடையே நீண்ட நெடுங்காலமாக இருக்கிறது. இப்போது கொடுக்கும் ரூ.5 ஆயிரத்தையும் உரியகாலத்தில் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இப்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடி தடைக்காலம் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்ட ஒன்றாகும். இந்த தடைக்காலத்தை மழைக்காலங்களில் அதாவது, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம்வரை மாற்றவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. ஏனெனில், கடலிலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் இனங்கள் இருந்தாலும் 256 மீன் இனங்கள்தான் மீனவர்கள் பிடித்து விற்பனை செய்வதற்கு ஏற்றவையாகும். மொத்த மீன் இனங்களில் 20 சதவீத மீன் இனங்கள்தான் ஏப்ரல் முதல் ஜூன் மாதம்வரை இனப்பெருக்கம் செய்யும். மற்ற மீன்வகைகள் எல்லாம் மழைக்காலங்களில்தான் இனப்பெருக்கம் செய்யும் என்று மீனவர்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது. இதுமட்டுமல்லாமல், டியூனா மற்றும் கணவாய் ரக மீன்கள் தடைக்காலத்தில் இடம் பெயர்ந்து செல்லும் என்பதால், இப்போது மீன்பிடித்தால்தான் அந்தமீன்களை பிடிக்கமுடியும். மேலும் வடகிழக்கு பருவ மழைகாலங்களில் பொதுவாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லமுடியாது. ‘ஓகி’ புயலுக்குபிறகு மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால்கூட மீன்வளத்துறையினர் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை திரும்பிவரச்சொல்லி விடுகிறார்கள். இப்போதுள்ள மீன்பிடிதடைக்காலம் 2000–ம் ஆண்டு கொண்டுவரப்பட்டதாகும். இந்த மீன்பிடிதடைக்காலத்தை செப்டம்பர் முதல் நவம்பர்வரை மாற்றவேண்டுமென்றால், கடலோர மாநிலங்கள் அனைத்தும் ஒன்றாக உட்கார்ந்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். ஆக, தேர்தலுக்குப்பிறகு தமிழக அரசு மீனவர்கள் விஷயத்தில் 2 நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். முதலாவதாக கடலோர மாநிலங்கள் கூட்டத்தை மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். அதில், இதுகுறித்து உரிய முடிவு எடுக்கப்படவேண்டும். அடுத்து தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகையை உடனடியாக வழங்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
Related Tags :
Next Story