தலையங்கம்

நரேந்திரமோடி மகுடம் சூட்டுகிறார் + "||" + Narendra Modi Crown Pays

நரேந்திரமோடி மகுடம் சூட்டுகிறார்

நரேந்திரமோடி மகுடம் சூட்டுகிறார்
பொதுவாக தேர்தல் கணிப்பு முடிவுகள்மீது சந்தேகப்பார்வை உண்டு. ஆனால் இந்தமுறை தேர்தல் கணிப்புகளுக்கேற்பவே தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.
பொதுவாக தேர்தல் கணிப்பு முடிவுகள்மீது சந்தேகப்பார்வை உண்டு. ஆனால் இந்தமுறை தேர்தல் கணிப்புகளுக்கேற்பவே தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. உலகிலேயே ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படுவது இந்தியாதான். இந்த திருநாட்டின் 17–வது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நேற்று தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கின. பா.ஜ.க. அமோக வெற்றி அடைந்து மீண்டும் ஆட்சி சிம்மாசனத்தில் அமர்கிறது. நேற்று காலையில் தொடக்கத்தில் இருந்தே வெற்றி இலக்கை நோக்கி பா.ஜ.க. முன்னணியில் இருந்தது. இந்த வெற்றி முழுக்க முழுக்க பிரதமர் நரேந்திரமோடிக்கு மக்கள் அளித்த மகுடம் என்பதில் சந்தேகமே இல்லை.

2014–ம் ஆண்டு பா.ஜ.க.வை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் மோடி குஜராத்தில் ஆட்சி செய்ததுபோல, நாட்டின் பிரதமராக இருந்து வழிநடத்துவார் என்ற பெரிய எதிர்பார்ப்பின் அடிப்படையில் ஓட்டுபோட்டார்கள். ஆனால் இப்போது மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற்றது என்றால், அவரது ஆட்சியின் செயல்பாடுகளால் மக்கள் பெரிதும் மனநிறைவு கொண்டு, ‘‘இவர்தான் நாட்டை மீண்டும் ஆளவேண்டும்’’ என்ற உறுதிப்பாடான எண்ணம் கொண்டுதான் வாக்களித்து இருக்கிறார்கள். பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரியால் வலிகள் எல்லாம் இருந்தாலும், அதையெல்லாம் மறந்து, பா.ஜ.க.வுக்கு மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்றால், பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய நலத்திட்டங்கள், நாடு அடைந்த வளர்ச்சி ஆகியவற்றுக்கெல்லாம் நிறைய மதிப்பெண்கள் போட்டு இருக்கிறார்கள் என்றுதான் பொருள். புல்வாமா தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தவுடன் பாலக்கோடு தாக்குதலை மேற்கொண்டு, பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது, இவர்தான் நாட்டை காப்பார் என்ற நம்பிக்கையை கொடுத்தது. இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் நிறைய செய்வார் என்ற எண்ணம்தான் மக்களுக்கு இருந்து இருக்கிறது.

எங்கள் ஆட்சியில், ‘பிரதமர் நரேந்திரமோடிதான் பிரதமர்’ என்று பா.ஜ.க.வால் சொல்ல முடிந்தது. எதிர்க்கட்சிகளால் பிரதமர் வேட்பாளர் யார்? என்று அடையாளம் காட்டமுடியவில்லை. நாடாளுமன்ற தேர்தல் என்றால் யார் தலைமையில் அரசு? என்று பார்த்துதான் மக்கள் வாக்களிப்பார்கள். அப்படி ஒரு தலைமையை எதிர்க்கட்சிகளால் காட்டமுடியவில்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். இதை நாட்டு மக்கள் மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டு நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு, மக்களின் நல்வாழ்வுக்கு கைகோர்த்து நடக்கவேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாகும். பா.ஜ.க. சார்பில் தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதிகளையெல்லாம் உடனடியாக நிறைவேற்ற தொடங்கவேண்டும். இந்த 5 ஆண்டுகளில் அந்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றினாலே போதும். வேறு புதிதாக எதையும் செய்யவேண்டியது இல்லை. மிக முதல் கடமையாக வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கவேண்டும். விவசாயிகளின் வாழ்வில் வளம்சேர்க்க ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்போல, அவர்கள் வருமானத்தை பெருக்கும் வகையிலான திட்டங்களை நிறைவேற்றவேண்டும். நாடு முழுவதும் ஒரே நிலைப்பாடு என்றாலும், தமிழக மக்கள் எப்போதுமே வித்தியாசமானவர்கள். சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரே அணியாக மத்தியில் ஒரு ஆட்சிமாற்றம் வேண்டும் என்று தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை