இதைத்தான் 35 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயலலிதா சொன்னார்!


இதைத்தான் 35 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயலலிதா சொன்னார்!
x
தினத்தந்தி 7 Aug 2019 4:30 AM IST (Updated: 6 Aug 2019 9:51 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தனி மாநிலமாக இயங்கி வந்த அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்தை பெற்று வந்த காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மோடி அரசு.

வரலாற்று சிறப்பு மிகுந்த ஒரு நடவடிக்கையாக, கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தனி மாநிலமாக இயங்கி வந்த, அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவு மற்றும் 35 ஏ பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்தை பெற்று வந்த காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் என்ற சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் என்ற சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றும் ஒரு அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்ததோடு மட்டுமல்லாமல், வெற்றிகரமாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மோடி அரசு நிறைவேற்றி விட்டது. 

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே இந்த உறுதிமொழியை பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் தெள்ளத்தெளிவாக தெரிவித்திருந்தது. காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி மற்றும் போதிய நிதி ஆதாரங்களை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகளை தகர்த்தெறிய உறுதி பூண்டிருக்கிறோம். ஜனசங்கம் காலத்திலேயே அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்பதை இப்போது வலியுறுத்துகிறோம். இதுபோல, அரசியல் சட்டத்தின் 35 ஏ பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’’ என்பது போன்ற பல உறுதிமொழிகள் சொல்லப்பட்டிருந்தது. 

அந்த வகையில், தேர்தல் வாக்குறுதியில் சொன்ன உறுதிமொழியை பா.ஜ.க. இப்போது நிறைவேற்றிவிட்டது. மக்களவையில் பா.ஜ.க.வுக்கு அறுதிப்பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லை. கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியின்போது பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட முடியாத நிலை இருந்தது. ஆனால், இந்த முறை முத்தலாக் தடை சட்டம் என்றாலும் சரி, இப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா என்றாலும் சரி, மிக எளிதாக நிறைவேற்றிவிட்டது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பா.ஜ.க.வின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அ.தி.மு.க. தன் முழு ஆதரவை தெரிவித்தது. 

இது அ.தி.மு.க.வின் இப்போதைய நிலைப்பாடு அல்ல. 1984–ம் ஆண்டு ஜூலை மாதம் 26–ந் தேதி அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜெயலலிதா, இதே கருத்தை மிகத் தெள்ளத்தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார். காஷ்மீர் மாநிலத்தில் அந்த மாத தொடக்கத்தில் பரூக் அப்துல்லா அமைச்சரவை டிஸ்மிஸ் செய்யப்பட்டது தொடர்பாக, மாநிலங்களவையில் எழுந்த பிரச்சினையில், ஜெயலலிதா மிக அழகாக ஆங்கிலத்தில் பேசினார். தன் பேச்சின் இறுதியில் 2 கருத்துகளை அவர் முன்வைத்தார். ஒன்று, காஷ்மீர் மாநிலத்தை கவர்னர் ஆட்சியின் கீழ் கொண்டுவர மத்திய அரசாங்கம் முன்வருமா? என்று கேட்டுவிட்டு, ‘‘இந்தியாவின் மற்ற பகுதிகளோடு ஜம்மு காஷ்மீரை ஒருங்கிணைக்க ஏன் இன்னும் தாமதம்?. மற்ற மாநிலங்களைப்போல காஷ்மீரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் ஏன் கொண்டுவரக்கூடாது?’’ என்று பேசினார். அவருடைய பேச்சின் சாரம்சமே அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவை சுற்றி சுற்றியே இருந்தது. 35 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா விதைத்த விதை தான் இன்றும் அ.தி.மு.க.வின் நிலைப்பாடாக இருக்கிறது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story