இந்துக்களின் புனித பயணத்துக்கு சீனா உதவி


இந்துக்களின் புனித பயணத்துக்கு சீனா உதவி
x
தினத்தந்தி 15 Aug 2019 4:30 AM IST (Updated: 14 Aug 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

இமயமலைச் சிகரங்களில் ஒன்றான கைலாயமும், அதன் அடிவாரத்தில் உள்ள மானசரோவர், ரக்‌ஷாஷ்தல் ஆகிய ஏரிகளும், இந்துக்கள், பவுத்தர்கள், சமணர்கள் ஆகிய மதத்தினரால் புண்ணிய தலங்களாகப் போற்றப்படுகின்றன.

பனி படர்ந்த நிலையில், சிவனின் ரூபமான லிங்கம் போலக்காட்சி அளிக்கும் கைலாய மலை, இறைவன் சிவன் வசிக்கும் இடம் என்பது இந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. எனவே, வாழ்வில் ஒருமுறையாவது கைலாய யாத்திரை சென்று வரவேண்டும் என்பது இந்துக்களின் லட்சியமாகக் கருதப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 21,700 அடி உயரத்தில் உள்ள கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரிக்குச் சென்று வருவது சுலபமான செயல் அல்ல. சீனாவின் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பகுதியான திபெத்தில் கைலாய மலை இருப்பதால், பாஸ்போர்ட்டு, விசா ஆகியவை இருந்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும். கைலாய மலையிலோ, மானசரோவர் ஏரியிலோ, வழிபாடு நடத்த கோவில் என்ற அமைப்பு ஏதும் கிடையாது. கைலாய மலையே சிவனின் ரூபம் என்பதால், அந்த மலைக்குத்தான் வழிபாடு நடத்தப்படும். திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவதுபோல, கைலாய மலையையும், மானசரோவர் ஏரியையும் சுற்றி நடந்தோ அல்லது ‘போனி’ எனப்படும் மட்டக்குதிரையிலோ, எருதின் மீது அமர்ந்தோ கிரிவலம் வருவார்கள். ‘பரிக்கிரமா’ எனப்படும் இந்தப் பயண தூரம் 52 கி.மீட்டர் ஆகும். இந்த புனித பயணத்தை எல்லோராலும் நிச்சயமாக மேற்கொள்ளமுடியாது. கரடுமுரடான ஏற்றமும், இறக்கமும் கொண்ட மலைப்பாதைகள், பனிபடர்ந்த மலை, உடலை ஊசியெனகுத்தும் பனி, வழியில் பலரால் கம்பு ஊன்றித்தான் செல்லமுடியும் என்ற நிர்ப்பந்தம், குறைவான ஆக்சிஜன் அளவு என்று பல இடர்பாடுகளை தாண்டித்தான் செல்லவேண்டும்.

இந்தநிலையில் சீனா, புனித பயணம் செல்லும் இந்துக்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருப்பது நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சுற்றுப்பயணம் செய்யும் பக்தர்கள் வழியில் தங்கி சற்று ஓய்வெடுக்க 4 இடங்களில் ஓய்வுமையங்கள் அமைக்க சீன அரசாங்கம் முடிவு செய்து, அதில் 2 ஓய்வுமையங்கள் இந்த ஆண்டு திறந்து இருக்கும். இன்னும் 2 ஓய்வுமையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓய்வுமையத்திலும் 150 படுக்கைகள், தங்கும் அறைகள், செல்போன் சார்ஜ் செய்ய வசதிகள், பொதுவான சமையல் அறை, கழிப்பறை ஆகிய வசதிகளோடு மட்டுமல்லாமல், உணவும் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்காக சீன அரசாங்கம் ஏறத்தாழ ரூ.36 கோடி செலவழிக்க திட்டமிட்டுள்ளது. யாத்திரை சிகர பாதையில் வழியில் ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கவும் சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த வசதிகள் அமைப்பதன் மூலம் மானசரோவர் செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தில் ஏற்படும் கஷ்டத்தை வெகுவாக குறைக்கும். இதுமட்டுமல்லாமல், இப்போது ஒரு ஆண்டில் சில தினங்கள் மட்டுமே மானசரோவர் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த புனித பயண நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இரு நாடுகளும் பரிசீலித்துக்கொண்டு வருகிறது என்று சீன தரப்பில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நல்லுறவு நடவடிக்கை நிச்சயமாக நல்ல தொடக்கம். மானசரோவர் புனித பயணத்தில் தொடங்கிய நல்லுறவு இருநாடுகளின் எல்லை பிரச்சினைகளிலும் தொடர்ந்து நட்பு நாடுகளாக மாற இந்த நடவடிக்கை தொடக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.

Next Story