அயோத்தி பிரச்சினை முடிந்தது


அயோத்தி  பிரச்சினை  முடிந்தது
x
தினத்தந்தி 11 Nov 2019 3:00 AM IST (Updated: 10 Nov 2019 10:20 PM IST)
t-max-icont-min-icon

நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கி நடத்திய வரலாற்று பிழையை சீர்செய்ய இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு இன்று அமலில் இருக்கிறது.

நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கி நடத்திய வரலாற்று பிழையை சீர்செய்ய இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு இன்று அமலில் இருக்கிறது. அதுபோலவே 491 ஆண்டுகளுக்கு முன்பு 1528–ல் அயோத்தியில் இந்துக்கள் ராமர் பிறந்த இடம் என்று போற்றி வணங்கும் இடத்தில் பாபர் மசூதி கட்டினார் என்ற வரலாற்று பிழையை எதிர்த்து 1853–ம் ஆண்டு முதல் தொடர்ந்து, கடந்த 166 ஆண்டுகளாக நடந்த சர்ச்சைகளுக்கும், கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்த சட்டபோராட்டங்களுக்கும் முடிவு கட்டும்வகையில் கடந்த சனிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. தற்போது 70 ஆண்டுகளாகத்தான் தொடர்ந்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடந்தாலும், 1885–லேயே பாசியாபாத் மாவட்ட கோர்ட்டில் இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

1992–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6–ந்தேதி பாபர் மசூதி கரசேவகர்கள், வி.எச்.பி., சிவசேனா, பா.ஜ.க. ஆதரவாளர் களால் தகர்க்கப்பட்டது, இந்த பிரச்சினையை விஸ்வரூபம் எடுக்க வைத்துவிட்டது. தற்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் போப்டே, சந்திரசூட், அசோக் பூ‌ஷண், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட பெஞ்சு முன்பு தொடர்ந்து 40 நாட்களாக நடந்த அயோத்தி பிரச்சினை தொடர்பான வழக்குகளில் என்ன தீர்ப்பை சொல்லப்போகிறார்கள்? என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்தமாதம் 17–ந்தேதி ஓய்வுபெறுகிறார். கடந்தவாரம் வெள்ளிக் கிழமை கோர்ட்டு வேலைநாள் முடிந்துவிட்டது. இனி அடுத்த வாரம் எந்தநேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், இரவு 9 மணிக்கு திடீரென விடுமுறை நாளான சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. எல்லா இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காலை 10.28 மணிக்கு நீதிபதிகள் கோர்ட்டுக்குள் நுழைந்து தீர்ப்பில் கையெழுத்திட்டனர்.

பொதுவாக இதுபோல 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நிச்சயமாக ஒரு நீதிபதி அல்லது 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்குவதுண்டு. ஆனால், இந்தத்தீர்ப்பு 5 நீதிபதிகளாலும் மாறுபட்ட தீர்ப்பு இல்லாமல் ஒருமனதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த 5 நீதிபதிகளில் ஒருவர் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர். தீர்ப்புக்கு ஆதாரமாக, இந்திய தொல்லியல் ஆராய்ச்சி அமைப்பு நடத்திய ஆய்வில், பாபர் மசூதிக்கு கீழே பெரிய கட்டிட அமைப்புகள் இருந்திருக்கிறது. மேலும் பாபர் மசூதி ஒரு காலியிடத்தில் கட்டப்படவில்லை என்று கூறிவிட்டு, மத்திய அரசு 3 மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, அந்த அறக்கட்டளையிடம் கோவில் கட்டுவதற்காக 2.77 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டிக்கொள்ளலாம். அதேநேரத்தில் அயோத்தியில் பொருத்தமான மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை இந்த வழக்கின் மனுதாரரான சன்னி வக்புவாரியத்திடம் ஒப்படைக்கவேண்டும். அந்த இடத்தில் வக்புவாரியம் மசூதி கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பதையும் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர். இந்த தீர்ப்பு யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி? என்று ஆராய்ந்து கொண்டு இருக்காமல், 70 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்குகளுக்கு இந்த 1,045 பக்க தீர்ப்பு ஒரு முடிவைக்கட்டிவிட்டது என்பதுதான் யதார்த்தமான உண்மை. அயோத்தி பிரச்சினை என்பது கடந்த  காலமாகிவிட்டது. இனி இது ஒரு பிரச்சினையே இல்லை. முடிந்துபோன அத்தியாயம்.

Next Story