தலையங்கம்

மராட்டிய அரசியலில் மல்லுக்கட்டு + "||" + Maharashtra Politics

மராட்டிய அரசியலில் மல்லுக்கட்டு

மராட்டிய  அரசியலில் மல்லுக்கட்டு
பா.ஜ.க.வும், சிவசேனாவும் மராட்டியத்தில் இதுவரை பலமுறை எதிரும், புதிருமாக பிரிந்து இருந்தாலும், ஒரே கூட்டணியாக இருந்து ஆட்சி அமைத்து இருக்கிறது.
‘ஒரே மாதிரி சிறகுகளை கொண்ட பறவைகளே ஒன்றாக செல்கின்றன’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப, அரசியலில் ஒரே கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைப்பது உண்டு. அதே நேரத்தில் ஆட்சியை அமைப்பதற்காக எதிரும், புதிரும் கொள்கைகள் கொண்ட கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைப்பதும் உண்டு. ஆனால், பொதுவாக அத்தகைய ஆட்சிகள் நிலைத்து நிற்பதில்லை. அதேபோலத்தான் இப்போது மராட்டியத்திலும், சிவசேனாவுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதை பார்த்தால், ‘‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’’ என்றுதான் சொல்ல வேண்டியது இருக்கிறது. 

பா.ஜ.க.வும், சிவசேனாவும் மராட்டியத்தில் இதுவரை பலமுறை எதிரும், புதிருமாக பிரிந்து இருந்தாலும், ஒரே கூட்டணியாக இருந்து ஆட்சி அமைத்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில்கூட கூட்டணி அமைத்து போட்டியிட்டு, சிவசேனா சார்பில் ஒரு மந்திரியும் மத்திய அரசாங்கத்தில் பங்கு பெற்றார். தொடர்ந்து கடந்த மாதம் 21–ந் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கடந்த மாதம் 24–ந் தேதி முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் ஒரு குழப்பமான முடிவே கிடைத்தது. பா.ஜ.க. 105 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றன. எதிர் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த கணக்கில் பார்த்தால், பா.ஜ.க–சிவசேனா கூட்டணிதான் ஆட்சி அமைக்கமுடியும். ஆனால் சிவசேனா தேர்தலுக்கு முன்பே நாம் பேசியபடி, சுழற்சி முறையில் முதல்–மந்திரி பதவியை வகிக்கவேண்டும். மந்திரி சபையில் 50:50 என்ற பார்முலாபடி பகிர்ந்து அளிக்கவேண்டும் என்று கூறியது. பா.ஜ.க. சார்பிலோ தேர்தலுக்கு முன்பு அப்படி எதுவும் உடன்பாடு இல்லை. எனவே, முதல்–மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்ட நிலையில், சிவசேனா கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டது. மத்திய மந்திரி சபையிலும் அங்கம் வகித்த சிவசேனா மந்திரி ராஜினாமா செய்துவிட்டார். இதையெல்லாம் பார்க்கும்போது, தேர்தலில் எந்த கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், தேர்தலுக்கு முன்பு என்ன உடன்பாடு வைத்துக்கொண்டார்கள்? என்பதை வாக்காளர்களுக்கு தெரிவிப்பதே சாலச்சிறந்தது. 

தற்போது ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு சட்டசபையும் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்டும் கவர்னர் வழங்கவில்லை. தற்போது காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், சிவசேனா ஆட்சி அமைக்கலாம் என்று கருதுகிறது. சிவசேனாவுடன் கூட்டணி வைக்க சோனியாகாந்தி முதலில் தயக்கம் காட்டினாலும், மராட்டிய மாநில காங்கிரஸ்காரர்கள் வற்புறுத்தலால் பச்சைகொடி காட்டிவிட்டார். 24 மணி நேரத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 2 முறை காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டார். சரியான பாதையில் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது என்றும் கூறிவிட்டார். பா.ஜ.க.வோடு ஆட்சி அமைக்க சிவசேனா நிபந்தனைகள் விதித்ததுபோல, காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் நிபந்தனைகள் விதிக்கின்றன. பா.ஜ.க. மீண்டும் சிவசேனா தங்களோடு வந்துவிடும் என்றும் நம்புகிறது. இந்த அரசியல் சதுரங்க விளையாட்டில் வெற்றி பெறப்போவது யார்? என்பது அடுத்த சில நாட்களில் 4 கட்சிகளும் எடுக்கப்போகும் முடிவுகளில் இருந்து வெளிப்பட்டுவிடும். யார் ஆட்சி அமைத்தாலும் நிலையான ஆட்சி வேண்டும். இல்லையென்றால், மறு தேர்தல்தான் சரியான தீர்வாக இருக்கமுடியும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பாகும்.