பாகிஸ்தானை உலகம் புரிந்து கொண்டது


பாகிஸ்தானை உலகம் புரிந்து கொண்டது
x
தினத்தந்தி 18 Nov 2019 4:00 AM IST (Updated: 17 Nov 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

சுதந்திரம் அடைந்த ஆரம்பகாலத்தில் இருந்தே காஷ்மீர் பிரச்சினையில் தேவையில்லாமல் பாகிஸ்தான் தலையிட்டு வருகிறது.

சுதந்திரம் அடைந்த ஆரம்பகாலத்தில் இருந்தே காஷ்மீர் பிரச்சினையில் தேவையில்லாமல் பாகிஸ்தான் தலையிட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தும், அவர்களுக்கு நிதிஉதவி செய்தும், பயங்கரவாத அமைப்புகளுக்கு துணைபுரிந்தும் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்து, பயங்கரவாத செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், இந்திய பணத்தை கள்ளநோட்டுகளாக பாகிஸ்தானில் அச்சடித்து புழக்கத்தில் விடுவதை சமீபத்தில் இந்தியா கண்டுபிடித்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி செய்வதையும், ஊக்குவிப்பதையும் இந்தியா மட்டும் சொல்லவில்லை. உலகமே இப்போது புரிந்துகொண்டுவிட்டது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நிதி நடவடிக்கை செயல்குழு’ என்ற அமைப்பு பிரான்சு நாட்டு தலைநகரான பாரீஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தக் குழுவின் கூட்டம் கடந்த மாதம் பாரீசில் நடந்தது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த அமைப்பின் கூட்டம் நடந்தது. அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதிஉதவி செய்ததற்காக பாகிஸ்தான் ‘கிரே’ பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்த பல தாக்குதல்களுக்கு காரணமான லஷ்கர்–இ–தொய்பா, ஜெய்ஷ்–இ–முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதிஉதவி செய்வதை நிறுத்த பாகிஸ்தானுக்கு 27 அம்ச செயல்திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டு இருந்தது. 27 செயல்திட்டங்களில் இப்போது பாகிஸ்தான் 5 செயல்திட்டங்களை மட்டும் செயல்படுத்திவிட்டு, மீதமுள்ள செயல்திட்டங்களை கடைபிடிக்காமல் இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இந்த செயல்திட்டங்களை நிறைவேற்றாவிட்டால், பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் வைக்கப்படும் என்று இப்போது நடந்த கூட்டத்தில் இந்த அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது. இந்தமுறையே கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை தடுப்பதற்கு 3 நாடுகளின் ஆதரவு போதும் என்ற நிலையில், மலேசியா, துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆதரவு அளிப்பதால் இந்தமுறை பாகிஸ்தான் தப்பித்துவிட்டது. தற்போது ‘கிரே’ பட்டியலில் இருக்கும்போது, சர்வதேச செலாவணி நிதியம், உலகவங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதிஉதவி பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்துக்குள் பயங்கரவாதத்துக்கு நிதிஉதவி அளிப்பதையும், பணமோசடி செய்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு, மேலும் பல சர்வதேச அமைப்புகளில் இருந்து எந்தவித உதவியையும் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ஓரங்கட்டப்பட்டுவிடும். ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு இது பெரிய அடியாக இருக்கும்.

மேலும் இந்தக் கூட்டம் உலகுக்கு 2 உண்மைகளை உணர்த்திவிட்டது. ஒன்று, பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது மட்டுமல்லாமல், நிதிஉதவியும் அளித்து வருகிறது. 2–வது, பாகிஸ்தானுக்கு ஆதரவான மலேசியா, துருக்கி மற்றும் சீனா நாடுகளில், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதில் சீனாதான் முன்னணியில் இருக்கிறது. ஆனால், இப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்பாக சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, துருக்கி மலேசியா போன்ற நாடுகள் ஒருமித்த கருத்தில் இருக்கிறது. தற்போது ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் கருப்பு பட்டியலில் இருக்கிறது. பாகிஸ்தான், மங்கோலியா, ஐஸ்லாந்து மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகள் ‘கிரே’ பட்டியலில் உள்ளன. உலகம் ஓரளவுக்கு பாகிஸ்தானை புரிந்து கொண்டுவிட்டது. இனி காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்தால், அதன் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்தியா சர்வதேச அரங்கில் எல்லா நாடுகளுக்கும் தெரிவித்து, பாகிஸ்தானை தோலுரித்து காட்டவேண்டும். ஏற்கனவே பாகிஸ்தானை புரிந்துகொண்ட உலக நாடுகள் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள அதுதான் உதவும்.

Next Story