பாதி மகிழ்ச்சிதான்


பாதி மகிழ்ச்சிதான்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:00 PM GMT (Updated: 3 Dec 2019 1:54 PM GMT)

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்தால்தான், மக்களால் தங்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து முறையிடமுடியும். குறைகளை தெரிவிக்க முடியும்.

கிராம பஞ்சாயத்தில் இருந்து மாநகராட்சி வரை வார்டு கவுன்சிலர்கள் இருந்தால்தான் தங்கள் பகுதிகளில் சுற்றிவந்து மக்கள் குறைகளையும் கேட்கமுடியும். அதிகாரிகளிடம் சென்று அந்த குறைகளை நிவர்த்தி செய்யமுடியும். அந்தவகையில், உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்குதான் இன்றியமையாதது ஆகும். 

இந்த நிலையில், 2011–ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தபிறகு இதுவரையில் தேர்தல் இல்லாமல் இருந்தது. உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் மக்கள் பணிகளில் பெரிய தொய்வு ஏற்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்த காலக்கட்டத்தில்தான் திருச்சி மாநகராட்சி தூய்மை நகரம் என்ற வகையில் அகில இந்தியாவில் 3–வது இடத்தைப்பெற்றது. இதுபோல, பல பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்த நேரத்தில்தான் அகில இந்திய அளவில் மக்களுக்கான வசதிகளை அளிப்பதில் பல பரிசுகளை பெற்றது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு என்று இப்போது இடஒதுக்கீடு இருப்பதால், 50 சதவீதம் பேர் பெண்கள் நிர்வாகத்துக்கு வந்துவிடுவார்கள். 

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், மத்திய அரசிடம் இருந்து மானியமாக வரவேண்டிய ஏறத்தாழ ரூ.8 ஆயிரம் கோடி இன்னமும் கிடைக்காத நிலை உள்ளது. ரூ.8 ஆயிரம் கோடி வந்திருந்தால், எத்தனையோ அடிப்படை மேம்பாட்டு வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் செய்திருக்க முடியும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, இப்போது தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளின் ஒருபகுதிக்கு மட்டும் தேர்தலை அறிவித்திருக்கிறது. 12,524 கிராம ஊராட்சி தலைவர்கள், 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு மட்டும் தேர்தல் 2 கட்டமாக அதாவது, இந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நடக்கும் என்று அறிவித்திருக்கிறது. இந்த 4 அமைப்புகளுக்குமே மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கவேண்டும். கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் தேர்தல்களில் கட்சி அடிப்படையில் போட்டியிட முடியாது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் கட்சி சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். நகர்ப்புற தேர்தல் அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

சுப்ரீம் கோர்ட்டில், புதிய மாவட்டங்களுக்கு தேர்தலுக்கு முன்பு மறு வரையறை முடிக்கப்படவேண்டும் என்று தி.மு.க. தாக்கல் செய்த வழக்கு நாளை வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது. இப்போது கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவித்தது மகிழ்ச்சிதான். ஆனால், இது பாதி மகிழ்ச்சிதானே தவிர, முழுமையான மகிழ்ச்சி அல்ல. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் அறிவித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தால்தான் முழுமையான மகிழ்ச்சி கிடைக்கும். நீதிமன்றங்கள் இதுதொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க இழுத்துக்கொண்டே போகாமல், உடனடியாக தீர்ப்பு வழங்கவேண்டும். தேர்தல் நடத்துவதை தடைசெய்ய எந்த கட்சிகளும் முயற்சி செய்யக்கூடாது. அரசும் புதிய மாவட்டங்களின் வரையறை பணிகளை ஒருசில வாரங்களில் மின்னல் வேகத்தில் மேற்கொண்டு முடிக்கவேண்டும். கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிகிற நேரத்திலேயே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story