பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை


பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை
x
தினத்தந்தி 5 Dec 2019 3:30 AM IST (Updated: 4 Dec 2019 9:40 PM IST)
t-max-icont-min-icon

கடந்த மாதம் 26–ந் தேதி மாநிலங்களவையில், நாட்டில் நிலவும் பொருளாதார நிலை குறித்து 4 மணி நேரம் விவாதம் நடந்தது.

பல்வேறு கட்சிகளை சேர்ந்த 23 உறுப்பினர்கள் பொருளாதார நிலையை அலசி ஆராய்ந்து பேசினார்கள். இதற்கு பதில் அளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, ‘‘பொருளாதார வளர்ச்சியில் குறைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மந்தநிலை ஏற்பட்டுவிடவில்லை. ஒருபோதும் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படாது’’ என்று குறிப்பிட்டார்.

ஆனால், அடுத்த 3 நாட்களிலேயே மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், நாட்டின் பொருளாதாரம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகமோசமான நிலையில் வீழ்ச்சி அடைந்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த நிதியாண்டின் 2–வது காலாண்டு, அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் நமது ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 7 சதவீதமாக இருந்தது. வேளாண்மை, தொழில், உற்பத்தி எல்லாவற்றிலுமே குறைந்த வளர்ச்சி விகிதம் காணப்பட்டுள்ளது. உற்பத்தி ஒரு சதவீதம் குறைந்திருக்கிறது. மக்கள் பொருட்களை வாங்குவது மற்றும் முதலீடு குறைந்து வருவதை இது காட்டுகிறது.

முக்கியமான 8 உள்கட்டமைப்பு தொழில்களாக நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு பொருட்கள், உரம், ஸ்டீல், சிமெண்டு, மின்சாரம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உர உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு பொருட்கள் இரண்டையும் தவிர, மற்ற அனைத்து இனங்களிலும் ஒரு பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுக்கும், வருமானத்துக்கும் உள்ள வித்தியாசம் நிதி பற்றாக்குறையாக கணக்கிடப்படுகிறது. இதுவும் அதிகமாக இருக்கிறது. 

அதாவது, அரசாங்கத்தின் வருமானம் குறைந்து, செலவு அதிகமாகி இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமும் அதிகமாகி உள்ளது. ஐந்தில் ஒரு இளைஞர் வேலையில்லாமல் இருக்கிறார். சில்லரை பணவீக்க விகிதம், அதாவது பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்வு மிக அதிகமாகி இருக்கிறது. பொதுவாக சில்லரை பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் இருக்கவேண்டும். ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக உயர்ந்துவிட்டது. நவம்பர் மாத கணக்கீடு இன்னும் வரவில்லை. இப்போதே வெங்காயம், சர்க்கரை உள்பட பல பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது. சில்லரை பணவீக்கம் 5 சதவீதத்துக்குமேல் போய்விட்டால், சாதாரண ஏழை, எளிய மக்களால், அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களையே வாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். 

2025–ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் (ஏறத்தாழ 345 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு உயர்த்தப்படவேண்டும் என்ற மத்திய  அரசாங்கத்தின் இலக்கை எட்டவேண்டும் என்றால், ஒட்டுமொத்த உற்பத்தி  வளர்ச்சி 9 சதவீதத்துக்கு மேல் இருந்தால்தான் முடியும். இப்போதுள்ள பொருளாதார நிலையில், அந்த இலக்கை அடைய வேண்டுமென்றால், அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதிகளில் அதிக முதலீடு செய்யவேண்டும். வேலைவாய்ப்புகளை பெருக்கவேண்டும். கிராமப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தை இன்னும் அதிக நாட்களுக்கு உயர்த்தி, அதற்கான சம்பளத்தையும் அதிகரித்து, இதற்காக செலவழிக்கும் தொகைக்கு ஈடாக கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்தவேண்டும். தனியார் முதலீடுகள் நிறைய ஊக்குவிக்கப்படவேண்டும். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவேண்டும். பணம் பட்டுவாடாவுக்கு தடைகள் இருக்கக்கூடாது. நாட்டு மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் அளவுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். வேளாண்மை, தொழில், உற்பத்தி ஆகியவற்றை உச்சநிலைக்கு கொண்டுபோவதையே இலக்காக கொண்டு, அதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் வேகமாக எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Next Story