ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்!
மாநிலங்களில் இயங்கும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்தது கூட்டுறவு தத்துவத்தையே அசைத்துவிட்டது
மாநிலங்களில் இயங்கும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்தது கூட்டுறவு தத்துவத்தையே அசைத்துவிட்டது. கூட்டுறவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில், மக்களால் மக்களுக்காக இயங்குவதுதான் கூட்டுறவு அமைப்பாகும். கூட்டுறவு சங்கமாகவோ, கூட்டுறவு வங்கியாகவோ இருந்தாலும், அதன் உறுப்பினர்கள் மக்கள்தான். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான் இயக்குனர்கள். அவர்கள்தான் தலைவரை தேர்ந்தெடுத்து, அந்த குழுவின் தலைமையில்தான் கூட்டுறவு வங்கிகள் இயங்கும்.
இந்திய கூட்டுறவு வரலாற்றில், தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் 1904-ம் ஆண்டு விவசாயிகளுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் விவசாய கூட்டுறவு சங்கமும், நுகர்வோர்களுக்காக சென்னை திருவல்லிக்கேணியில் நகர கூட்டுறவு சங்கமும், 1905-ம் ஆண்டு நகர்ப்புற மக்களுக்காக பெரிய காஞ்சீபுரத்தில் நகர கூட்டுறவு வங்கியும் தொடங்கப்பட்டது. இப்படி தமிழ்நாடுதான் கூட்டுறவு இயக்கத்திற்கே முன்னோடியாக விளங்கிவருகிறது.
தற்போது, நாடு முழுவதும் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும், 58 பல்மாநில கூட்டுறவு வங்கிகளும் இருக்கின்றன. இந்த வங்கிகளில் 8 கோடியே 60 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களது டெபாசிட்டின் அளவு ரூ.4 லட்சத்து 84 ஆயிரம் கோடியாகும். இந்த வங்கிகளின் மூலமாக மக்களுக்கு ரூ.3 லட்சத்து 3 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளுக்கு லைசென்ஸ் வழங்குவது, சோதனை நடத்த செல்வது என்று, எல்லா அதிகாரமும் தற்போது ரிசர்வ் வங்கிக்குத்தான் இருக்கிறது.
ஆனால், நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் நிர்வாக கட்டுப்பாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் 128 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்தான் இருக்கிறது. இதில், 9 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளைதவிர, மற்ற 119 வங்கிகளும் லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வங்கிகளில்ரூ.7,800 கோடி பணம் அந்தந்தப்பகுதி மக்களால் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.5,300 கோடி நகைக்கடன், வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, பல மாநிலங்களில் செயல்பட்ட பஞ்சாப், மராட்டிய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடியின் காரணமாக லட்சக்கணக்கான மக்களின் வைப்புத்தொகை பிரச்சினைக்கு உள்ளானது. எனவே, கூட்டுறவு வங்கிகளை எல்லாம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே, வங்கி ஒழுங்குபடுத்துதல் திருத்த சட்ட மசோதாவை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
அந்தச்சட்டம் நிறைவேறாத நிலையில், இப்போது அவசர சட்டத்தின் மூலமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள், அனைத்து நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் இயக்குனர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும் உரிமையை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துவிடும். அந்த கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனராக தற்போது தமிழக அரசு ஊழியர் நியமிக்கப்படுகிறார். இனி ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்துதான் நியமிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிடும். கூட்டுறவு சங்க தேர்தலில், உறுப்பினர்களுக்கான தகுதியை நிர்ணயிப்பதற்கோ, முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வழக்கு தொடுப்பதற்கோ, கூட்டுறவு சங்க பதிவாளருக்கு இருக்கும் அதிகாரமெல்லாம் இனி ரிசர்வ் வங்கிக்கு போய்விடும்.
ஒவ்வொரு கூட்டுறவு வங்கியும், அந்தந்த பகுதி மக்களின் வாழ்வாதார முறை மற்றும் அங்கு நடக்கும் தொழில்கள் போன்றவற்றை அடிப்படையாகவைத்து, அவர்களுக்கு தேவையான கடன்களை வழங்கிவரும் நிலையில், இனி ரிசர்வ் வங்கி வகுக்கும் கட்டுப்பாட்டின் கீழ்தான் வழங்க முடியும். ஏதோ 2 கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகளுக்காக 1,540 வங்கிகளின் கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கியே எடுத்துக்கொள்வது ஏற்புடையதாக இருக்காது என்பது மக்கள் கருத்து. அவசர சட்டம் கொண்டுவருவதற்கு பதிலாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தியும், மாநில அரசுகளின் கருத்துகளை பரிசீலித்தும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
Related Tags :
Next Story