வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள்!


வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள்!
x
தினத்தந்தி 7 July 2020 4:00 AM IST (Updated: 6 July 2020 10:05 PM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு மத வழிபாட்டுத் தலத்திலும் சில குறிப்பிட்ட வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது தமிழ்நாட்டிலுள்ள ஒரு பழமொழி. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில், எல்லா ஊர்களிலும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற பல்வேறு மதங்களுக்கான வழிபாட்டு தலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மத வழிபாட்டுத் தலத்திலும் சில குறிப்பிட்ட வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மக்கள் கூடும் இடங்களில்தான் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது என்பதை கருத்தில்கொண்டு, அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருக்கின்றன.

இந்தநிலையில், கடந்த மாதம் 29-ந்தேதி தமிழக அரசு சில தளர்வுகளுடன் 6-வது ஊரடங்கை அறிவித்த நேரத்தில், பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில்) ஜூலை 1-ந் தேதி முதலும், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உள்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நேற்று முதலும், கிராமப்புறங்களிலுள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானமுள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும், கிராமப்பகுதிகளிலும் பெரிய வழிபாட்டு தலங்களுக்கும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது. ஆக, கிராமப்பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி விரைவில் எல்லா இடங்களிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது. சில பகுதிகளில் வழிபாட்டுக்கு அனுமதித்திருக்கிறார்களே தவிர, வழிபாட்டு முறைகளில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக, இந்துக் கோவில்களில் தேங்காய், பழம், பூ ஆகியவை படைக்கக்கூடாது. பூஜைகள், அபிஷேகம் நடக்கும்போது, அதை பார்ப்பதற்காக தரையில் உட்காரக்கூடாது. சன்னதிக்கு முன்பாக தரையில் படுத்து சாமி கும்பிடக்கூடாது. அங்கப்பிரதட்சணம் கூடாது. திருக்குளத்துக்கு போகக்கூடாது. அர்ச்சகர்கள், பக்தர்களை தொட்டு குங்குமம், மஞ்சள், விபூதி, தீர்த்தம், பூ மற்றும் பிரசாதங்கள் வழங்குவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். விபூதி, குங்குமம் பாக்கெட்டுகளில் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுபோல, கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டு முறை, துதிப்பாடல்கள் ஆகியவற்றுக்கான புத்தகங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். பாடகர் குழு, பாடல்கள் பாடுவதை தவிர்த்து, அதற்கு பதிலாக பதிவு செய்யப்பட்ட இசைப் பாடல்களை ஒலிபரப்பு செய்யவேண்டும். 100 சதுர மீட்டர் இடத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் கூடக்கூடாது, நற்கருணை வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மசூதிகளில் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்கள், அங்கு வைத்து கை, கால், முகம் போன்றவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்தும் ‘ஒளு‘ செய்வதை தவிர்க்கவேண்டும். இதை தங்கள் வீடுகளிலேயே செய்துகொண்டு வரவேண்டும். மேலும், மசூதிகளில் மதரசாக்கள், ஆன்மிக கூட்டங்கள் நடத்தப்படுவது கூடாது என்பதுபோன்ற பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இறைவழிபாட்டு முறைகளில் காலங்காலமாக பின்பற்றி வரும் முறைகளில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு சற்று மனக்குறையாக இருக்கலாம். ஆனால், கொரோனாவால் இப்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில், இதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த கட்டுப்பாடுகள், வழிபாட்டுத் தலங்களில் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை அரசு அதிகாரிகள் வந்து சோதனை செய்வதற்கு இடம் கொடுக்காத வகையில், வழிபாட்டுத் தலங்களிலுள்ள பக்தர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்கள், தாங்களாகவே சுயகட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற பல இறைவழிபாட்டு தலங்களில் ஆன்லைன் மூலமாக நடக்கும் வழிபாட்டு முறைகள் இதே கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனுமதிக்கும் வரையில் தொடரலாம்.

Next Story