கான்கிரீட் அமைப்புகளின் வலிமைக்கு வேதியியல் கலவைகள்


கான்கிரீட் அமைப்புகளின் வலிமைக்கு வேதியியல் கலவைகள்
x
தினத்தந்தி 16 Sep 2017 7:15 AM GMT (Updated: 16 Sep 2017 6:21 AM GMT)

கான்கிரீட் கட்டமைப்பின் மூலப்பொருள்களாக சிமெண்டு, ஜல்லி, மணல் மற்றும் தண்ணீர் ஆகியவை உள்ளன.

கான்கிரீட் கட்டமைப்பின் மூலப்பொருள்களாக சிமெண்டு, ஜல்லி, மணல் மற்றும் தண்ணீர் ஆகியவை உள்ளன. நகர்ப்புறங்களின் வளர்ச்சிகளுக்கு தக்கவாறு விரைவாக கட்டுமான அமைப்புகளை அமைக்க வேண்டிய சூழலில் வேதியியல் தொழில்நுட்பம் அதற்கு தக்க வழியை காட்டியுள்ளது. அதாவது, கான்கிரீட் விரைவாக ‘செட்டிங்’ ஆவதற்கு ‘ Chemical Admixtures’ என்று சொல்லப்படும் வேதிக்கலவைகளை பயன்படுத்தும் தொழில்நுட்பமானது கட்டுமானத்துறையில் நடைமுறையில் இருந்து வருகிறது. அவற்றை பற்றிய தகவல்களை காணலாம்.

வேதிப்பொருட்கள் சேர்க்கை

சிமெண்டில் கலக்கப்படும் அட்மிக்ஸர்கள் பல்வேறு பெயர்களில், பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு சந்தையில் கிடைக்கும் நிலையில், குறிப்பிட்ட அட்மிக்ஸர் அனைத்து சிமெண்டுடனும் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காரணம், சிமெண்டு என்பது பல வேதிப்பொருட்கள் கலந்துள்ள மூலப்பொருள். அதன் இயல்பான தன்மையானது அதனுள் அடங்கியுள்ள வேதிப்பொருட்களின் சேர்க்கை காரணமாக மாறுபடுகிறது.

சோதனை அவசியம்

அதனால், எந்த ஒரு அட்மிக்ஸரையும் கான்கிரீட்டில் கலப்பதற்கு முன்பு அதன் பொருந்தக்கூடிய தன்மை பற்றிய சோதனை செய்த பின்னர், பயன்படுத்துவது நல்லது. இல்லாவிட்டால், அதன் இறுகும் நேரம், வலிமை ஆகியவை பாதிக்கப்பட்டு வெடிப்புகள் ஏற்படலாம். அவ்வாறு சோதனைகளில் அறியப்பட்ட விளைவுகள் குறித்து சம்பந்தப்பட்ட சிமெண்டு நிறுவனத்திற்கு தெரியப்படுத்துவது நல்லது.

அட்மிக்ஸர் வகைகள்

வேதியியல் கலவை எனப்படும் அட்மிக்ஸர்கள், செயல் திறன் கலவை, நிலை திறன் கலவை, நீர் குறை திறன் கலவை, காற்று உறை திறன் கலவை, மிகு குழைவு திறன் கலவை என ஐந்து வகைகளில் உள்ளன.

செயல் திறன் கலவை


இவ்வகையானது ஆரம்ப கட்ட இறுகும் தன்மையை துரிதப்படுத்தவும், அதன் வலிமையை விரைவாக எட்டவும் உதவுகிறது. மிக குறைந்த தட்ப வெட்ப நிலை இருக்கும் இடங்கள் மற்றும் கடல் பகுதி கட்டுமானங்களில் இந்த கலவை பயன்படுகிறது.

நிலை திறன் கலவை

கான்கிரீட்டில் தொடக்க நிலை இறுகும் தன்மையை தாமதப்படுத்த இவ்வகை உதவி செய்கிறது. நீண்ட தூரங்களுக்கு எடுத்து சென்று பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவைகள் விரைவில் செட் ஆகாமல் பாதுகாக்க இந்த வகை உபயோகப்படுத்தப்படுகிறது.

நீர் குறை திறன் கலவை


கான்கிரீட் பணிகளின்போது குறைவான நீர் பயன்பாட்டில், அதன் கட்டமைக்கும் திறனை மேம்படுத்தும் தன்மை கொண்டதாக இவ்வகை கலவை உள்ளது. நீர் மற்றும் சிமெண்டு ஆகியவற்றின் விகிதம் குறைவாக இருப்பதால் கான்கிரீட் வலிமை அதிகரிக்கிறது.

காற்று உறை திறன் கலவை

கான்கிரீட்டில் காற்றை உருவாக்கும் தன்மை பெற்ற கலவை இதுவாகும். கான்கிரீட் கட்டமைப்புக்கு ஏற்ற தன்மை பெற இந்த வகை கலவை பயன்படுகிறது. அதன் மூலம் கான்கிரீட் விரைவாக உறைவது குறைகிறது. குளிர் பிரதேசங்களில் இந்த வகை கலவை பயன்படுத்தப்படுவது வழக்கம்.

மிகு குழைவு திறன் கலவை

கான்கிரீட் பணிகளில் நீரை குறைக்கவும், அதன் இறுகும் நேரத்தை அதிகரிக்கவும் இவ்வகை உதவுகிறது. அதனால், வலிமையான தரம் கொண்ட கான்கிரீட் தயாரிக்க முடிகிறது. ரெடி மிக்ஸ் கான்கிரீட் தயாரிப்புக்கு இந்த கலவை பயன்படுகிறது. மேலும், கான்கிரீட்டின் நீர்க்கசிவை தடுப்பதற்கான நீர்த்தடுப்பு கலவைகளும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story