சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கான்கிரீட்


சுற்றுச்சூழலை  பாதுகாக்கும்   கான்கிரீட்
x
தினத்தந்தி 10 March 2018 3:30 AM IST (Updated: 9 March 2018 4:40 PM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் பசுமை கட்டிடங்களுக்கான அவசியத்தை உணர்ந்து வரும் நிலையில் பல்வேறு யுக்திகள் அதற்காக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

லக அளவில் பசுமை கட்டிடங்களுக்கான அவசியத்தை உணர்ந்து வரும் நிலையில் பல்வேறு யுக்திகள் அதற்காக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கட்டுமான பணிகளில், காற்று மண்டலத்தை பாதிக்கும் கார்பன்–டை ஆக்சைடு என்ற கரியமில வாயுவை பயன்படுத்துவது சாத்தியமா..? என்ற சோதனை முயற்சிகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கான்கிரீட் பொருள்கள்

அதாவது, காற்றில் உள்ள கரியமில வாயுவை பிரித்து எடுத்து கட்டுமான

பணிகளுக்கான கான்கிரீட் பொருட்களில் சேர்த்து பயன்படுத்தும் சோதனை ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் கான்கிரீட் சாலைகளில் கார்பன் டை ஆக்சைடு பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.

மறு சுழற்சி

மேற்கண்ட தொழில்நுட்பம் மூலம் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை மறு சுழற்சி செய்வதால் புதியதாக கார்பன் டை ஆக்சைடு வெளியேறும் அளவு குறைகிறது. அதன் மூலம் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவை 3.5 மில்லியன் டன் என்ற அளவுக்கு குறைக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது.

கனடா நிறுவனம்

கார்பன் டை ஆக்சைடை மறு சுழற்சி செய்யும் கனடா நாட்டு நிறுவனம் ‘கார்பன்கியூர்’ ரெடிமிக்ஸ் கான்கிரீட்டின் உள்ளே கரியமில வாயுவை செலுத்தி பயன்படுத்தும் முறையை கண்டறிந்து பயன்படுத்தி வருகிறது. பல்வேறு ரசாயன ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை எடுத்துக்கொள்ளும் ‘கார்பன்கியூர்’ நிறுவனம், அதில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் குறிப்பிட்ட அளவை கான்கிரீட் கலவையில் செலுத்துகிறது. அதனால் உருவாகும் ரசாயன மாற்றத்தால் கான்கிரீட்டில் ‘கால்சியம் கார்போனேட்’ உருவாகி கான்கிரீட்டை கூடுதல் வலுவுள்ளதாக ஆக்குகிறது.

‘கார்பன் ரெடிமிக்ஸ்’

கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் கான்கிரீட் தயாரிக்கும் ஆலைகளை கொண்டுள்ள ‘கார்பன்கியூர்’ தொழில்நுட்பம் நூற்றுக்கணக்கான கட்டுமானப் பணித்திட்டங்களுக்கு ‘ரெடிமிக்ஸ் கான்கிரீட்’ விநியோகம் செய்து வருகிறது. மேற்கண்ட தொழில்நுட்பம் மூலம் ஒரு கான்கிரீட் தயாரிப்பு ஆலை ஆண்டுக்கு சராசரியாக 900 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கலாம் என்றும் அறியப்பட்டுள்ளது.

செலவு அதிகம்

மேலும், கார்பன் டை ஆக்சைடை கான்கிரீட்டில் செலுத்தும் தொழில்நுட்பங்கள் சிறிய அளவானதாக இருந்தாலும், அதிக செலவு பிடிக்கும் நுட்பங்களாக இருக்கின்றன என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நமது பகுதிகளில் சிமெண்டு தயாரிப்பில் உருவாகும் கார்பன் வாயுக்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆய்வு நிலைகளில் உள்ளன. இந்த நிலையில் கரியமில வாயுவை கான்கிரீட்டில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் அறிமுகமாகி பயன்பாட்டுக்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்று கருதலாம்.

Next Story