வீட்டு வாடகை ஒப்பந்தத்தில் முக்கியமான அம்சங்கள்


வீட்டு வாடகை ஒப்பந்தத்தில்  முக்கியமான அம்சங்கள்
x
தினத்தந்தி 17 March 2018 4:30 AM IST (Updated: 16 March 2018 4:14 PM IST)
t-max-icont-min-icon

தற்போதைய பெருநகர சூழலில் குறிப்பிட்ட சதவிகித மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

வாடகை வீட்டில் குடியேறும் சமயங்களில் வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்பவர் ஆகியோர்களுக்கிடையில் வாடகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது முறை. அது போன்ற சமயங்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய பொதுவான நடைமுறைகள் பற்றி இங்கே காணலாம்.

* வாடகை ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட வீட்டின் முகவரி மற்றும் உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ஆகிய இருவரது பெயர், வயது, தந்தை பெயர் ஆகியவற்றோடு, வீட்டு உரிமையாளரின் நிரந்தர வீட்டு முகவரி, வாடகைதாரரின் நிரந்தர வீட்டு முகவரி அல்லது முன்னர் குடியிருந்த வீட்டின் முகவரியை குறிப்பிட வேண்டும்.

* குடியேறும் வீட்டின் உரிமையாளர் பற்றியும், குடியேறுபவர் பற்றியும் இரு தரப்பும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குறைந்தபட்ச அளவிலாவது விசாரிப்பது பல இடங்களில் இருந்து வருகிறது. அதனால் பல சங்கடங்களை தவிர்க்க இயலும் என்று அறியப்பட்டுள்ளது.

* மாத வாடகை, அட்வான்ஸ், ஒப்பந்த காலம் எத்தனை மாதங்கள் அல்லது வருடங்கள் என்பதை குறிப்பிட வேண்டும். அட்வான்ஸ் தொகைக்கு வட்டி கணக்கிடப்படுவதில்லை. மேலும், முன்பணமாகிய அட்வான்ஸ் வீட்டின் உரிமையாளரை பொறுத்து மாறுபடலாம். அதையும் ஒப்பந்தத்தில் குறிப்பிடுவது நல்லது. மேலும், எவ்வளவு நாளைக்கு வாடகை ஒப்பந்தம் செல்லுபடி ஆகும் என்பதை குறிப்பிடுவதோடு, அதேபோல் தொடர்ந்து அதனை முறையாக புதுப்பித்துக்கொள்வதும் முக்கியம்.

* சில வீட்டு உரிமையாளர்கள் குத்தகை முறையிலும் வீட்டை வாடகைக்கு விடுகிறார்கள். குடியேறுபவர் மொத்தமாக தரும் குறிப்பிட்ட அளவு தொகைக்கான வட்டி வீட்டு வாடகையாக கருதப்படும். எத்தனை படுக்கையறை கொண்ட வீடு என்பதைப்பொறுத்து அந்த தொகையின் அளவு நிர்ணயிக்கப்படும்.

* தயாரிக்கப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரத்தின் அனைத்து பக்கங்களிலும் இடது பக்கம் வீட்டு உரிமையாளர், வலது பக்கம் குடியிருப்பவர் ஆகியோர் கையொப்பம் இடவேண்டும். மேலும், சாட்சிகள் இருவர் அதாவது முதல் சாட்சி, வீட்டு உரிமையாளர் சார்பிலும், இரண்டாவது சாட்சி குடியிருப்பவரின் சார்பாகவும் அவர்களது சுய விவரங்களுடன் கையொப்பம் இடவேண்டும்.

* வாடகை வீட்டிற்கான மின் கட்டணம் செலுத்துவது, தண்ணீருக்கான தனிப்பட்ட கட்டணம், கழிவுநீர் அகற்றுவதற்கான கட்டணம் ஆகியவை பற்றி சரியாக கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

* வாடகை வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தால் அல்லது பழுதடைந்தால் அதற்கு குடியிருப்பவர் பொறுப்பாவார். அதை சரி செய்து கொள்ளும் முறை பற்றியும் முன்னதாகவே அறிந்து கொள்வது நல்லது. பொதுவாக, பெரிய அளவிளான பழுதுகளை வீட்டு உரிமையாளரே செய்து கொள்வதும், சிறிய அளவிலான பழுதுகளை குடியிருப்பவரே கவனித்துக்கொள்வதும் பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது.

* வாடகை வீட்டை காலி செய்யும் சமயத்தில் வீட்டு உரிமையாளர் வீட்டை கவனித்து, ஏதாவது பழுதுகள் அல்லது கட்டுமான பாதிப்புகள் உள்ளனவா..? என்பதை கவனிப்பதோடு, மின்சார கட்டண பாக்கி உள்ளிட்ட இதர பாக்கிகளையும் கணக்கிட்டு அவற்றை அட்வான்ஸ் தொகையில் இருந்து கழித்துக்கொண்டு மீதியை அளிப்பது வழக்கம்.

* ‘நோட்டீஸ் பிரீயட்’ எனப்படும் அறிவிப்பு காலத்திற்கான அவகாசம் எவ்வளவு நாள் என்பதை அனுசரித்து வீடு காலி செய்வதை வீட்டு உரிமையாளரிடம் முறையாக தெரிவித்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது.

Next Story