தெரிந்து கொள்வோம்.. –‘டியூப்ளக்ஸ்’ வீடுகள்


தெரிந்து கொள்வோம்.. –‘டியூப்ளக்ஸ்’ வீடுகள்
x
தினத்தந்தி 11 Aug 2018 12:44 PM IST (Updated: 11 Aug 2018 12:44 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு காரணங்களுக்காக அமைக்கப்படும் வீடுகளின் வகைகள் கட்டுமான தொழில்நுட்ப ரீதியாக பல விதங்களில் குறிப்பிடப்படுகின்றன.

குடியிருப்பு காரணங்களுக்காக அமைக்கப்படும் வீடுகளின் வகைகள் கட்டுமான தொழில்நுட்ப ரீதியாக பல விதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் ‘டியூப்ளக்ஸ்’  வீடு (Duplex House) என்ற வகையும் ஒன்று. இந்திய முறைப்படி இவ்வகை வீடுகள் இரண்டு தளங்கள் கொண்ட ஒற்றை வீடாக கட்டப்படுகின்றன. 

அதாவது, கீழ்த்தளத்தில் சமையலறை, ஹால் மற்றும் இதர அறைகள் கொண்டதாகவும், மேல்தளத்தில் பிரதான படுக்கையறை கொண்டதாகவும் அமைந்திருக்கும். பக்கவாட்டில் இரண்டு தனிப்பட்ட நுழைவாசல்கள் கொண்ட அமைப்பிலும் சில வீடுகள் இருக்கும்.   

தொழில்நுட்ப ரீதியாக ‘டியூப்ளக்ஸ்’ வீடு என்பது ஒரே அஸ்திவார அமைப்பு, சுவர்கள் மற்றும் மேற்கூரை ஆகியவற்றை கொண்ட இரண்டு விதமான குடியிருப்பு உபயோகங்களுக்கான தளங்களை கொண்டதாகும். அந்த அமைப்புகளில் கீழ்த்தளம் மற்றும் மேல்தளம் ஆகியவை ஒரே அளவு நீளம் மற்றும் அகலம் கொண்டதாக இல்லாமல் வெவ்வேறு அளவுகளிலும் இருக்கலாம்.

மேற்கத்திய நாடுகளில், நமது முறையை விடவும் சற்றே மாறுபட்ட நிலையில் இவ்வகை வீடுகள் கட்டமைக்கப்படுவது வழக்கம். அதாவது, ஒரே அஸ்திவாரம், சுவர்கள் மற்றும் மேற்கூரை ஆகிய அமைப்புகளுக்குள் இரண்டு வீடுகள் தனித்தனியான நுழைவாசல்கள் கொண்டதாக இருக்கும். வீடுகள் ஒன்றுக்கொன்று பக்கவாட்டிலோ அல்லது இரண்டு வகை தளங்கள் கொண்டதாகவோ இருக்கும். 

‘வில்லா டைப்’ வீடுகள் போன்ற தோற்றத்துடன், குறைவான பரப்பளவில் அமைக்கப்பட்டாலும், இவ்வகை வீடுகளுக்குள் சவுகரியமான இட வசதி கிடைக்கும். அதன் காரணமாக, இன்றைய காலகட்டத்தில் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் இவ்வகை வீடுகளை அமைப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Next Story