இணைய தளம் மூலம் ஆவண பதிவு மேற்கொள்ளும் முறைகள்


இணைய தளம் மூலம் ஆவண பதிவு மேற்கொள்ளும் முறைகள்
x
தினத்தந்தி 8 Dec 2018 1:07 PM IST (Updated: 8 Dec 2018 1:07 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலம் ஆவண பதிவை மேற்கொள்வதற்கான நடைமுறைகள் பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.

முதலில் www.tnreginet.gov.in என்ற தளத்தில் ஒரு கணக்கை தொடங்கி அதில் User Name and Password ஆகியவற்றை உருவாக்கி உள் நுழையவும். பின்னர் திரையில் தோன்றும் தலைப்பை ‘கிளிக்’ செய்து கிடைக்கும் நான்கு துணை தலைப்புகளில் வரைவு ஆவணத்திற்கான சுருக்கம் என்பதை ‘கிளிக்’ செய்யவும். அதில் ஆவணத்தின் தன்மை மற்றும் முந்தைய ஆவண விவரம் என்ற இரு விஷயங்கள் இருக்கும்.

ஆவணத்தின் தன்மை

கிரயம், பாக பிரிவினை, தான செட்டில்மென்டு உள்ளிட்ட பல்வேறு வகை ஆவணங்களின் தலைப்புகளில் தேவையான ஆவணத்தை தேர்வு செய்ய வேண்டும்.

முந்தைய ஆவண விவரம்

புதிய ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்துகள் கிடைக்கப்பெற்ற மூல ஆவணத்தின் (தாய் பத்திரம்) எண், பதிவு வருடம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். பட்டா மூலம் சொத்து உரிமை கிடைத்திருந்தால் அதுபற்றிய தகவல்கள் வேண்டியதில்லை.

பின்னர் ஆவணத்திற்கேற்ப கீழ்க்கண்ட தலைப்புகளுக்கான தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

1. கட்சிக்காரர்கள் விவரம்

2. சொத்து விவரம்

3. சாட்சிகள் விவரம்

4. பிரதிநிதிகள் விவரம்

* எழுதி கொடுப்பவர், எழுதி பெறுபவர், சாட்சிகள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் அவர்களது அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். சொத்து விற்பவர் பெயர், முகவரி, அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்வதுடன், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சொத்து உரிமையாளராக இருந்தால் அனைத்து உரிமையாளர்கள் பெயரையும் பதிவு செய்ய வேண்டும்.

* எழுதி பெறுபவருடைய தொலைபேசி எண் முக்கியம். அதற்கே ஆவணத்தின் நிலை, திரும்ப பெறும் முறை, பட்டா மாற்றம் செய்யப்படும் நிலை ஆகிய செய்திகள் எஸ்.எம்.எஸ்-ஆக அனுப்பப்படும்.

* சாட்சிகள் பகுதியில் இருவர் பெயர், அவர்களது அடையாள அட்டை எண், முகவரி போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.

* பிரதிநிதிகள் விவரம் பகுதியில் பவர், மைனருக்கான கார்டியன் நியமனம் போன்ற தகவல்கள் இருந்தால் குறிப்பிட வேண்டும்.

* தாக்கல் என்ற பகுதியில் பத்திரத்தை திரும்ப பெறும் நபர் பற்றி குறிப்பிட வேண்டும்.

பதிவு செய்யப்படும் சொத்து விவசாய நிலமா, வீட்டு மனையா, அடுக்குமாடி குடியிருப்பா, வீடு உள்ள மனையா என தெரிவு செய்து கீழ்க்கண்ட தகவல்களை பதிவு செய்யவும்.

1. சொத்து விவரம்

2. புல எண் விவரம்

3. எல்லைகள் விவரம்

4. சொத்தின் அளவுகள்

5. கட்டிடத்தின் அளவுகள்

6. சொத்து விவர குறிப்புகள்

7. சொத்து விவர இனங்கள்

1) சொத்து விவரம்

சொத்து அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகம், கிராமம், சொத்துக்கான தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால் பட்டா எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

2) புல எண் விவரம்

புல எண், சொத்தின் அளவுகள் (விவசாய நிலங்களுக்கு ஏக்கர்- ஹெக்டர், வீட்டு மனைகளுக்கு சதுரமீட்டர்-சதுர அடி) சந்தை மதிப்பு, பதிவு செய்யும் சொத்தின் சர்வே எண்ணில் மாற்றப்படும் வீஸ்தீரணம், அதன் சந்தை மதிப்பு ஆகியவற்றை பதிவிட வேண்டும்.

3) எல்லைகள் விவரம்

சொத்துக்கான நான்கு திசைகளிலும் உள்ள வீடு-நிலம் ஆகியவற்றின் சர்வே எண்களை குறிப்பிட வேண்டும். அதில் முறையான எல்லைகள் என்றால் சொத்துக்கான நீளம் மற்றும் அகலம் இரண்டும் சம அளவாகவும், முறையற்ற எல்லை என்றால் நான்கு திசைகளிலும் வெவ்வெறு அளவுகளும் கொண்டதாக இருக்கும்.

4) சொத்தின் அளவுகள்

வீட்டு மனை என்றால் அதன் நீளம் மற்றும் அகலத்தை இப்பகுதியில் குறிப்பிடவும்.

5) கட்டிடத்தின் அளவுகள்

சொத்து மனையும், கட்டிடமும் சேர்ந்து இருக்கும் நிலையில் கதவு எண், மின் இணைப்பு எண், கட்டிடத்தின் மதிப்பு ஆகியவற்றை பூர்த்தி செய்யவும்.

6) சொத்து விவர குறிப்புகள்

வாங்கப்படும் சொத்து அமைந்துள்ள பகுதியின் போக்குவரத்துக்கான மாமுல் வழி பாத்தியம், பைப் லைன் மற்றும் இதர கழிவு நீர் குழாய்கள் அமைப்புகளுக்கான பாத்தியம் போன்ற தகவல்களை குறிப்பிடவேண்டும்.

7)சொத்து விவர இனங்கள்

சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள மரங்கள், கிணறு, மின் மோட்டார் பம்பு செட் மற்றும் அதற்கான மதிப்பு ஆகியவற்றை குறிப்பிடவேன்டும்.

ஆவணத்திற்கான மதிப்பீடு

ஆவணத்திற்கான மூத்திரை தீர்வை, பதிவு மற்றும் இதர வகை கட்டணங்களை தெரிவிக்கும் இப்பகுதியில் அதன் விவரங்களை கவனித்து வரைவு ஆவணத்திற்கான சுருக்கம் என்ற பகுதியை ‘கிளிக்’ செய்யவும். அப்போது தோன்றும் தற்காலிக எண்ணை வைத்தே சார்பதிவாளர் அலுவலகத்தில் டோக்கன் போடவும், ஆவணத்தை கண்டறியவும் இயலும்.

Next Story