கட்டுமானங்களின் வலிமைக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள்


கட்டுமானங்களின் வலிமைக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள்
x
தினத்தந்தி 15 Dec 2018 7:42 AM GMT (Updated: 15 Dec 2018 7:42 AM GMT)

கட்டுமான அமைப்புகள் நீண்ட காலம் உறுதியாக நிலைத்து நிற்பதற்கு முதல் நிலை செயல்முறையாக சிமெண்டு மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் கலவை அளவில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டும் சரியான அளவில் கலக்கப்படுவதை ஒவ்வொரு நிலையிலும் உறுதி செய்து பணிகளை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும். அது பற்றி சிவில் பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

கான்கிரீட் கலவை விகிதம்

சென்னை போன்ற கடற்கரை பகுதிகளில் பெரும்பாலான கட்டுமானங்களில் எம்-20, எம்-25 என்ற விகிதத்தில் கான்கிரீட் கலவை அளவுகளையே பயன்படுத்துகின்றனர். அந்த விகிதத்தில் அமைக்கப்படும் கட்டிடங்கள் விரைவில் அரிப்பு பாதிப்புக்கு உள்ளாகலாம். எனவே, சென்னை உள்ளிட்ட கடற்கரை நகரங்களில் குறைந்தபட்சம் எம்-30 கலவை விகிதம் பின்பற்றப்படுவது நல்லது.

தண்ணீர் அளவு

பல கட்டுமாங்களில் மேற்கண்ட விஷயம் கச்சிதமாக கடைபிடிக்கப்படுவதில்லை என்பது அறியப்பட்டுள்ளது. பொதுவாக, கட்டுமான பணியிடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கலவை கலக்கும் இயந்திரத்தில் சிமெண்டு, ஜல்லி மற்றும் மணல் ஆகியவை ‘பாண்ட்’ மூலம் போடப்பட்டு, அவ்வப்போது தண்ணீர் ஊற்றப்படும். அவ்வாறு கலக்கப்படும் தண்ணீரின் கச்சிதமான அளவீட்டின் அடிப்படையில்தான் அந்த கலவை உறுதியாக நிற்கும் என்ற விஷயத்தை பலரும் அறிவதில்லை.

கம்பிகளின் வலிமை

மேற்கண்ட சிக்கலை தவிர்க்க அனுபவம் மிக்க பணியாளர்களை அந்த பணிகளில் பயன்படுத்துவது அவசியம். மேலும், கட்டுமானங்களில் நீள வாக்கில் உள்ள டி.எம்.டி கம்பிகள் 45 டிகிரி அளவுக்கும் மேலாக வளைக்கப்பட்ட நிலையில் பயன்படுத்துவது கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கம்பிகளின் தாங்கும் திறன் மிகவும் குறைந்து விடும் அபாயம் உள்ளது.

தொடர் பராமரிப்பு

கட்டுமானங்களுக்கு தொடர்ந்த பராமரிப்பு அவசியம். பல்வேறு வழிகாட்டுதல் மற்றும் அளவீடுகள் ஆகியவற்றை முறையாக பின்பற்றி கட்டப்படும் கட்டுமானங்கள் பல ஆண்டுகள் உறுதியாக இருக்க தொடர் பராமரிப்பு அவசியமாகும். இல்லாவிட்டால் கட்டிடங்கள் விரைவாக பாதிப்பு அடையும் வாய்ப்புகள் உள்ளன.

***
பத்திர பதிவு துறையில் புதிய வசதிகள் தொடக்கம்


பத்திர பதிவுத்துறையில் பல்வேறு வசதிகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் பதிவு செய்த ஆவணங்களை திரும்பப்பெற தாமதமானால் அவற்றை மின்னஞ்சலில் பெறும் புதிய வசதியை அரசு தொடங்கியுள்ளது. பதிவுத்துறையில் மின்னணு ஆளுமை முறைகள் விரிவாக்கம் செய்யப்படும் அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளும் அதிகரித்துள்ளதாக அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

வழக்கமாக பதிவு அலுவலகத்திற்கு சென்று வில்லங்க சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் ஆகியவற்றை பெறும் நடைமுறைக்கு மாற்றாக, வீட்டிலிருந்தே பதிவுத்துறை இணைய தளம் வழியாக விண்ணப்பித்து, அதற்கான கட்டணத்தையும் இணையதளம் மூலமாகவே செலுத்தி அதற்கான விரைவு குறியீடு என்ற கியூ.ஆர்.கோடு, சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் இலக்க சான்றொப்பமிட்ட வில்லங்க சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது

மேற்கண்ட சான்றிதழ்களில் உள்ள அச்சிட்ட கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அதன் நகலை மைய கணினியிலிருந்து பார்வையிட்டு, சான்றிதழின் உண்மை தன்மையை எளிதாக அறிந்து கொள்ளலாம். அத்தகைய சான்றிதழ்களுக்கு உரிய சட்ட அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி காரணமாக பொதுமக்கள் வில்லங்க சான்று மற்றும் சான்றொப்பமிட்ட ஆவண நகல் பெற சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை.

குறிப்பாக இப்போது நடைமுறையில் உள்ள பதிவு துறையின் கட்டணங்கள் 11 வங்கிகளின் இணையவழி மூலம் செலுத்தும் முறைக்கு மாற்றாக, இந்திய நிதியமைப்புக்குட்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பணப்பரிவர்த்தனை முறைகளிலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட புதிய இணையவழி கட்டணம் செலுத்தும் முறையும் அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை காரணமாக 58 வங்கிகள் மூலம் நெட் பாங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் யுபிஐ பேமெண்ட் ஆகிய வழிகளில் பதிவுத்துறைக்கான கட்டணங்களை பொதுமக்கள் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பதிவு பணிகள் முடிந்து சம்பந்தப்பட்ட ஆவணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஸ்கேன் செய்யப்பட்டவுடன், அதை ஆவணதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் புதிய வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வசதி காரணமாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப பெற்றுச் செல்ல தாமதமாகும் நிலையில் ஸ்கேன் செய்யப்பட்டு ஆவணதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட ஆவண நகல்களை பொதுமக்கள் தங்களது உடனடி தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளவும் இயலும்.

Next Story