அலுவலக பணியை வீட்டில் செய்ய உதவும் உள் கட்டமைப்புகள்


அலுவலக பணியை வீட்டில் செய்ய உதவும் உள் கட்டமைப்புகள்
x
தினத்தந்தி 22 Dec 2018 3:08 PM IST (Updated: 22 Dec 2018 3:08 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு அலுவலகங்கள், ஊழியர்களுக்கான வேலை நேரம், அலுவலக சூழல் ஆகியவற்றில் அவர்களது விருப்பத்துக்கு முன்னுரிமை தந்து பணிகளை முன்னதாகவே செய்து முடிக்க வாய்ப்பை அளிக்கின்றன. அதன் அடிப்படையில் அலுவலக பணிகளை வீட்டிலிருந்தபடியே செய்ய ‘ஒர்க் அட் ஹோம் ஆப்ஷன்’ என்ற அனுமதியும் தரப்படுகிறது.

வீட்டில் பணிச்சூழல்

முறைப்படுத்தப்பட்ட அலுவலக சூழலில் பணிபுரிவதற்கும், வீட்டின் ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றியமைத்து பணி புரிவதற்கும் வித்தியாசம் இருக்கும் நிலையில் பல மாற்றங்களை செய்ய வேண்டியதாக இருக்கும். குறிப்பாக, வீட்டில் இருந்தபடி அலுவலக பணிகளை செய்வது பெண் ஊழியர்களுக்கு பல விதங்களிலும் ஏற்றதாக இருப்பதால் வீட்டிலேயே அலுவலக பணிச்சூழலை ஏற்படுத்த உள்கட்டமைப்பு வல்லுனர்கள் பல்வேறு ஆலோசனைகளை அளித்துள்ளனர். அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

சிறிய மாற்றங்கள் போதும்

பொதுவாக, வீட்டில் உள்ள இரண்டாவது படுக்கையறை அலுவலக அறையாக மாற்றப்படும் நிலையில் லைப்ரரி, படிக்கும் அறை ஆகிய இதர பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக அதை மாற்றிக்கொள்ளலாம். ஒரு படுக்கையறை கொண்ட வீடாக இருந்தால் அதன் ஒரு பகுதியை தடுப்பு அல்லது ஸ்கிரீன் மூலம் பிரித்து தனிப்பட்ட இடமாக பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் படுக்கை அறையிலேயே சில மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

பல்வேறு இடங்கள்

பணி காரணமாக வெளி நபர்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் வீட்டின் வரவேற்பறையின் ஒரு பகுதியை ‘பார்டிஷன்’ தடுப்புகள் மூலம் பிரித்து பயன்படுத்தலாம். மேலும், அறையின் கார்னர் பகுதி, மாடிப்படிகளின் கீழ்ப்புறம் அல்லது அறையின் ஒரு பக்கம் உள்ள சுவரை ஒட்டிய இடத்தை தேர்வு செய்தும் பயன்படுத்தலாம்.

பர்னிச்சர் வசதிகள்

மேற்குறிப்பிட்ட இடங்களில் மேஜை, நாற்காலி, அலமாரி ஆகியவற்றை அமைத்து கொள்ளலாம். இடத்துக்கு ஏற்ப உயரமான அலமாரிகள் பல்வேறு டிராயர்கள் கொண்டதாக இருக்கலாம். மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் நிலையில் முதுகுவலி ஏற்படுத்தாத வகையில் சரியான நாற்காலியை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியது முக்கியமான ஒன்று.

கண்கூசாத வெளிச்சம்

கவர்ச்சிகரமான நிறங்களில் விளக்குகளை அமைப்பது கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். அறைகளில் இயற்கையான வெளிச்சம் வரும் அளவுக்கு மனதில் உற்சாகம் ஏற்படும். குறிப்பாக ஜன்னல் அமைந்துள்ள பகுதிகள் கணினி பணியின் களைப்பை அகற்ற உதவுகின்றன. பணி புரிய அமரும் இடத்தில் எதிர்ப்புற சுவர் வெண்மை நிறத்தில் இருப்பதுடன், மின்விளக்கு வெளிச்சமும் பரவலாக இருப்பது நல்லது.

அழகிய அலங்காரங்கள்

பணி புரியும் இடத்திற்கு பக்கத்தில் பூந்தொட்டிகள் வைப்பது கண்களுக்கு இதமாக இருக்கும். மேலும், மேஜை விளக்கு, கடிகாரம், காலண்டர், பைல்கள் ஆகியவற்றை வைப்பதற்கான இடத்தை தக்கபடி அமைத்துக்கொள்ள வேண்டும். பணியிடங்களில் வைக்க இயலாத குடும்ப புகைப்படம், பெற்ற பரிசுகள் மற்றும் பதக்கங்கள் ஆகியவற்றை வீட்டில் பணி புரியும் பகுதிகளில் மனம் கவரும்படி வைத்துக்கொள்ளலாம். எப்போதும் சிறிய அறை என்பதுதான் அலுவலக பணிகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

குழந்தைகளின் குறுக்கீடு

பணி புரியும் அறை அல்லது இடங்களில் குழந்தைகள் குறுக்கிடும் நிலையில் படிப்பு சம்பந்தமான பயிற்சிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் அவர்களை அங்கே அனுமதிக்கலாம். முக்கியமாக, நாய் அல்லது பூனைகள் போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு அங்கே இடம் தரக்கூடாது.

குறிப்புகள் தேவை

வீட்டில் பணி புரியும் அறை அல்லது பகுதியில் வெள்ளை மார்க்கர் போர்டு ஒன்றை சுவரில் மாட்டி வைத்து தினசரி பணிகளை குறித்துக்கொள்ளலாம். அல்லது மடிக்கணினியில் ஸ்டிக்கி நோட்ஸ் குறிப்புகளாக அமைத்தும் கவனித்து பின்பற்றுவதும் பணிகளை எளிமையானதாக மாற்றும்.

Next Story