அறிந்து கொள்ள வேண்டிய பட்டா விவரங்கள்


அறிந்து  கொள்ள  வேண்டிய  பட்டா  விவரங்கள்
x
தினத்தந்தி 18 Jan 2019 9:30 PM GMT (Updated: 18 Jan 2019 10:03 AM GMT)

புறநகர் அல்லது கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதியாக இருக்கும் அரசு நிலங்கள் நத்தம் என்று சொல்லப்படும்.

புறநகர் அல்லது கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதியாக இருக்கும் அரசு நிலங்கள் நத்தம் என்று சொல்லப்படும். அத்தகைய நிலங்கள் பொதுமக்களின் குடியிருப்பு தேவைக்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே கச்சிதமாக வகைப்படுத்தி ஒதுக்கப்பட்டிருந்தன.

தோராய பட்டா

பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் அடிப்படைகள் ஆகியவற்றின் காரணமாக அங்கு வசித்து வருபவர்களுக்கு தோராய மற்றும் தூய பட்டா அரசால் வழங்கப்படுகிறது. தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டாவாக அளிக்கப்படுவதாகும்.

சாலைகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளை தக்க முறையில் ஆவணப்படுத்தி, நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்த அந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்குவதன் மூலம் நிலம் வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுகிறது. 

மேற்கண்ட பட்டாவில் உள்ள பெயர்கள், அளவுகள் ஆகியவற்றில் திருத்தங்கள் கண்டறியப்பட்டு அவை தெரிவிக்கப்படும் நிலையில் தக்க திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் அது தோராய பட்டா என்று குறிப்பிடப்படுகிறது. 

தூய பட்டா

மேற்கண்ட தோராய பட்டா பெற்றவர்கள் அதில் அளவு பிழைகள் மற்றும் திருத்தங்கள் ஏதாவது இருக்கிறதா..? என நிலத்தை அளந்து சரி பார்த்து தகவலை தெரிவிக்கவேண்டும். அதன் பின்னர் முழு விவரங்களுடன் திருத்தங்கள் சரி செய்யப்பட்டு நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா அளிக்கப்படும். 

இந்த இரண்டு பட்டாக்களும் ‘மேனுவலாக’ தயார் செய்யப்படுவதுடன், பட்டாவின் பின்னால் தக்க அளவுகளுடன் நிலத்தின் வரைபடமும் இருக்கும். தோராய பட்டா பெறப்பட்ட குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பிழைகள் திருத்தப்பட்ட தூய பட்டாவை பெற்றுக்கொள்வது அவசியம்.

யூ.டி.ஆர் பட்டா

நத்தம் நிலவரி திட்ட பட்டா நிலங்களில் சர்வே நடக்கும் பட்சத்தில் அளவீடுகள் முறைப்படுத்தப்பட்டு, அதன் தகவல்கள் கணினிமயமாக்கப்படும். அதன் பின்னர் பட்டாவை யூ.டி.ஆர் (Updating Registry Scheme  UDR என்ற கணினி பதிவேடாக பெற்றுக்கொள்ளலாம்.

Next Story