கட்டுமானங்களுக்கு வலிமை கூட்டும் எம்-சாண்ட்
எம்-சாண்ட் பற்றி இன்னமும் பலருக்கும் மனதில் பல்வேறு கேள்விகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதன் தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடு போன்ற நிலைகளில் கட்டுமான வல்லுனர்கள் அளித்துள்ள தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
தயாரிப்பு முறைகள்
பொதுவாக எம்-சாண்ட் என்பது கருங்கற்களிலிருந்து சரியான அளவுகளில் (2.36 மிமீ முதல் 4.75 மிமீ) இயந்திரங்களால் (Vertical Shaft Impact CrusherVSI) உடைக்கப்பட்டு சலிக்கப்படுகிறது. அதிலிருந்து பொடியான நுண்ணிய துகள்கள் தண்ணீர் ஊற்றி முற்றிலும் கழுவப்பட்டு அதன் மீதுள்ள தூசு துப்புகள் முற்றிலும் அகற்றப்படுகிறது. ஆற்று மணலில் இருக்கக்கூடிய வண்டல் மண், களிமண் துகள்கள், பிற பொருள்கள் போன்ற சிக்கல்கள் செயற்கை மணலில் கிடையாது.
தாங்கு திறம் அதிகம்
எம்-சாண்ட் கலந்த சிமெண்டு கலவை மூலம் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் அமைப்பின் தாங்குதிறன் ஆற்று மணலின் தாங்கு திறனைவிட அதிகமாக இருப்பதை பல சோதனை முடிவுகள் குறிப்பிட்டுள்ளன. நமது பக்கத்து மாநிலங்களான கேரளா, கோவா, அந்தமான், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளில் எம்-சாண்ட் பெரிதும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளில் பயன்பாடு
மேலும், மத்திய கிழக்கு நாடுகளும் அவற்றின் கட்டுமானங்களில் பல ஆண்டுகளாக எம்-சாண்ட் பயன்படுத்துவதும் அறியப்பட்டுள்ளது. செயற்கை மணல் பயன்படுத்தப்படும் சிமெண்டு கலவை மற்றும் கான்கிரீட் அமைப்புகளுக்கு பொறியாளர்கள் வழிகாட்டுதல்படி பிணைப்பு மற்றும் சிறப்பான கலவை தன்மைக்காக ‘ Super plasticiser ’ ரசாயனம் பயன்படுத்தலாம்.
கிரஷர் டஸ்ட்- எம் சாண்ட் வித்தியாசம்
கிரஷர் டஸ்ட் மற்றும் எம்-சாண்ட் ஆகிய இரண்டும் ஒன்றுதான் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், அவை இரண்டும் முற்றிலும் வேறானவை. கிரஷர் டஸ்ட் என்பது ஜல்லிகளை உடைக்கும்போது உருவாகும் கழிவு பொருள் ஆகும். அவற்றை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது கூடாது. ஆனால் எம்-சாண்ட் என்பது மிகச்சிறிய ஜல்லி போல் உடைக்கப்பட்டு, தண்ணீர் தொட்டியில் சுற்றும் சல்லடை மூலம் அலசப்பட்டு, கிரஷர் தூசிகள் நீக்கி சுத்தமாக தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது.
பிளாஸ்டரிங் சாண்ட்
எம்-சாண்ட் கான்கிரீட் கலவை உறுதியானது என்பது ஆய்வக சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றுமணலில் இயற்கையாக உள்ள Chemical Impurities மாற்றுமணலில் இருக்காது என்பதால் எம்-சாண்ட் கலவையை உறுதியானது. பூச்சு கலவையின் ஒட்டும் தன்மை சற்று குறைவாகவே இருக்கும். அந்த குறையை சரி செய்யும் வகையில் Fineness அதிகமுள்ள P-SAND (Plastering Sand) சந்தையில் கிடைக்கிறது.
நிற வித்தியாசம்
பாறையின் மேலடுக்குகளில் கிடைக்கக் கூடிய வெளிர் நிறக்கற்களை அரைத்து வரக்கூடிய எம்-சாண்ட் சற்றே ஆற்று மணல் நிறத்தில் இருக்கலாம். பாறையின் கீழ் அடுக்குகளில் உள்ள கரும்பாறைகளை அரைத்து கிடைக்க கூடிய கருப்பு நிற எம்-சாண்ட் ஒப்பீட்டு அளவில் உறுதியானதாக அறியப்பட்டுள்ளது. கான்கிரீட் அமைப்புகளுக்கு கருப்பு மணல் ஏற்றது. இயற்கை வளம் காக்கப்பட்டு நல்ல சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமானால் மாற்று கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில், எம்-சாண்ட் என்ற மாற்று மணலை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி தரமான கட்டு மானங்களை அமைக்கலாம்.
Related Tags :
Next Story