நவீன சிந்தனைகளை வெளிப்படுத்தும் வித்தியாசமான கட்டமைப்புகள்


நவீன   சிந்தனைகளை   வெளிப்படுத்தும்   வித்தியாசமான   கட்டமைப்புகள்
x
தினத்தந்தி 22 March 2019 10:30 PM GMT (Updated: 22 March 2019 1:15 PM GMT)

இன்றைய கட்டுமான அமைப்புகள், நவீன பொறியியல் துணை கொண்டு வானத்தை தொடும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன.

ன்றைய கட்டுமான அமைப்புகள், நவீன பொறியியல் துணை கொண்டு வானத்தை தொடும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. தற்போதைய சூழலில் குடியிருப்பு என்ற அடிப்படை நிலையை கடந்து கட்டுமானங்கள் விதவிதமான வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. அவை சம்பந்தப்பட்ட வடிவமைப்பாளர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதத்தில் கண் கவரும் வடிவத்தையும் பெறுகின்றன. அவ்வாறு அமைக்கப்பட்ட நவீன கட்டமைப்புகள் குறிப்பிட்ட ஒரு நகரத்தின் பெருமைமிக்க அடையாளமாக கவனிக்கப்படுகின்றன. 

கட்டுமான அதிசயங்களாக உள்ள அந்த கட்டமைப்புகள் அதன் வடிவமைப்பாளர்களின் பெயரை மவுனமாக உலகுக்கு அறிவித்தவாறு நிற்கின்றன. அந்த வகையில் உலக நாடுகள் சிலவற்றில், நவீன சிந்தனைகளின் புற வடிவமாகவும், வடிவமைப்பாளர்களின் படைப்பாற்றலை வெளிக்காட்டும் விதத்திலும் உள்ள கட்டுமானங்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

நட்பு மையம், வங்காளதேசம்

வங்கதேசத்தை சேர்ந்த கா‌ஷப் மெஹபூப் சவுத்ரி என்ற கட்டிடக்கலை வல்லுனர் இந்த நட்பு மைய கட்டிடத்தை வடிவமைத்துள்ளார். பாரம்பரிய கலாசாரத்தை அடிப்படையாக கொண்டு, அர்ப்பனா என்ற தொண்டு நிறுவனத்திற்காக 2011–ம் ஆண்டு இந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். நட்பு மையம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த கட்டிடம், வங்காள தேசத்தின் கைபந்தா என்ற இடத்தில் அமைந்துள்ளது. டாக்காவை சொந்த ஊராக கொண்ட கா‌ஷப் குடும்பம் கட்டுமான துறையில் பரிச்சயம் கொண்டது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கட்டிடக்கலையில் கா‌ஷப் பட்டம் பெற்றுள்ளார். 

குளிர்ச்சியான சூழல் நிலவுவதற்காக, நட்பு மையத்தின் மேல் தளம் பசுமை பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் மூலம் கைகளால் தயாரிக்கப்பட்ட செங்கற்கள் இதன் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையான காற்றோட்ட வசதி கொண்டதாகவும், பழங்காலத்தில் கையாளப்பட்ட குறைவான உயரம் கொண்ட கட்டமைப்பு யுக்தியையும் இந்த கட்டிடம் வெளிப்படுத்துகிறது. வெள்ளம், நில நடுக்கம் ஆகிய இயற்கை பாதிப்புகளை சமாளித்து நிற்கும்படி, கச்சிதமாக திட்டமிட்டு அமைக்கப்பட்ட வலிமையான கட்டமைப்பாக இந்த மையம் உள்ளது.

ஹூடங் குழந்தைகள் நூலகம், சீனா

சீனாவின் பீஜிங் டைனன்மென் சதுக்கம் அருகில், ஹூடங் குழந்தைகள் நூலகம் மற்றும் கலை மையம் உள்ளது. கடந்த 2014–ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 9 சதுர மீட்டர் அளவில் அமைந்துள்ளது. இதன் வடிவமைப்பில் கான்கிரீட் கலவை மற்றும் சீன நாட்டின் மை ஆகியவற்றை சோதனை முறையில் கலந்து உருவான சாம்பல் நிற கற்கள் மற்றும் தட்ப வெப்ப மாற்றங்களால் பாதிக்கப்படாத பிளைவுட் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் கட்டுமான பணிகளில் பெரும்பாலும் மறுசுழற்சி பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. நூலகம் அமைந்துள்ள பகுதியில் வளர்ந்துள்ள 600 ஆண்டு பழமையான மரத்தின் வளர்ச்சியை பாதிக்காத வகையில் நூலக கட்டிடம் அமைந்துள்ளது. 

குழந்தைகள் எளிமையாக பயன்படுத்தும் வகையிலும், சுலபமாக அமர்ந்து படிக்க குறைவான உயரத்திலும் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இந்த நூலகத்தில் உள்ளன. மரத்தின் கிளைகள் பாதிக்கப்படாதபடி, எளிதில் நகர்த்தக்கூடிய வகையில் எடை குறைந்த ஸ்டீல் அமைப்புகளால் உருவான பாகங்கள் சுற்றிலும் உள்ளன. ஹூடங் நூலகம் ஸாவோ, ஸாங்கே என்ற இரு கட்டிடக் கலைஞர்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

சூப்பர்கிளென், டென்மார்க்

டென்மார்க் நட்டின் கோபன்ஹேகன் மாவட்டத்தில் உள்ள ‘நோரேப்ரோ’ என்ற இடத்தில் 2012–ம் ஆண்டு சூப்பர்கிளென் என்ற பூங்கா கட்டுமானம் அமைக்கப்பட்டது. இதன் நீளம் 1 கி.மீ என்ற அளவில் இருப்பதுதான் கட்டுமானத்துறை ஆச்சரியமாக உள்ளது. சிவப்பு சதுக்கம், கருப்பு சந்தை, பசுமை பூங்கா ஆகிய மூன்று நிறங்களில், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு சதுக்கத்தில் நவீனமான உணவகங்கள், இசை, விளையாட்டு ஆகிய அம்சங்கள் உள்ளன. கருப்பு சந்தை என்பது அழகான நீரூற்றுகள், அனைவரும் அமர்வதற்கான பெஞ்சுகள் போன்றவற்றை கொண்டதாகும். பசுமைப் பூங்கா பகுதி என்பது அனைத்து மக்களும் சுலபமாக நடந்து செல்ல ஏற்ற இடமாகும். 

கச்சிதமாக திட்டமிட்டு அமைக்கப்பட்ட இந்த பூங்கா உலகின் பன்முகத் தன்மையை வெளிக்காட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற விதமாக மொராக்கோ நீரூற்றுகள், ஜப்பான் சிற்பங்கள், சீனா பனை மரங்கள், கத்தார் நியான் பலகைகள் ஆகியவை வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பான இந்த கட்டமைப்பை உருவாக்கியவர் ஜார்கே இன்ஜெல் என்ற பொறியாளர் ஆவார். பிக் ஆர்க்கிடெக்ட், டோபோடெக் என்ற இரு நிறுவனங்கள் மற்றும் சூப்பர் பிளெக்ஸ் என்ற கலைக்குழுவினர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு இதை வடிவமைத்துள்ளனர். இதன் மொத்த செலவு 11 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இஸாம் சர்வதேச பொது கொள்கை கட்டிடம், லெபனான்

புதுமையான கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்ட இஸாம் சர்வதேச பொதுக்கொள்கை மற்றும் விவகாரங்களுக்கான இந்த கட்டிடம் 2014–ம் ஆண்டில் ஸாகா ஹதித் ஆர்க்கிடெக்ட்ஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 21 மீட்டர் உயரமும், 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவும் கொண்ட இஸ்லாம் விவகாரத்துறை கட்டிடம், பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. லெபனான் முன்னாள் துணைப் பிரதமர் இஸ்ஸாம் பேர்ஸ் என்பவர் கொடுத்த நன்கொடை மூலம் இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிட வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான வயது கொண்ட பைகஸ் மற்றும் சைப்ரஸ் வகை மரங்கள் அகற்றப்படாமல், அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படாத விதத்தில் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் எளிதாக பயன்படுத்த வசதியாக செமினார் அறை, அயல் நாட்டு கொள்கை ஆராய்ச்சியாளர்கள் அறை, மக்கள் சந்திப்புக்கான இடம், நீரை மறு சுழற்சி செய்து மரங்களுக்கு பயன்படுத்துவது போன்ற உள் கட்டமைப்புகள் அனைத்தும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 21–ம் நூற்றாண்டிற்கான நவீன லட்சியங்களை பிரதிபலிக்கும் கட்டிடம் என்று பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

தபியத் நடைபாதை பாலம், ஈரான்

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்டு, இன்றுவரை மக்களிடையே பிரபலமாக உள்ள ஒரு இடம் தபியத் நடைபாதை பாலம் ஆகும். ஈரான் நாட்டின், டெஹ்ரான் நகரில் அமைந்துள்ள இந்த பாலம் வழக்கமாக ஒரு பகுதியை கடந்து செல்வதற்கான அமைப்பாக உருவாக்கப்படவில்லை. அதன் இரு புறங்களிலும் உள்ள மலைகள், காடுகள் ஆகியவற்றை அனைவரும் கண்டுகளிக்கும் வண்ணம் பல்வேறு கட்டிடங்கள் அமைந்துள்ளன. 

பிரமாண்டமான தூண்களின் மேல் 270 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் மூன்று அடுக்குகள் கொண்டது. அவற்றில், அழகான சிற்றுண்டி சாலைகள், அமைதியாக அமர்வதற்கேற்ற இருக்கைகள், மனம் கவரும் உணவகங்கள் போன்ற அம்சங்கள் இருக்கின்றன. பிரமாண்டமான மரத்தின் கிளைகள் போன்ற வடிவமும், சுமார் 2000 டன் எடையும் கொண்ட இந்த நடைபாலத்தை லைலா அராஹியன் என்ற இரானிய பெண் பொறியாளர் வடிவமைத்துள்ளார். இந்த பாலம் நியூயார்க் நகரில் நடந்த கட்டிடக்கலை போட்டியில் சிறப்பு விருது உட்பட பல்வேறு அமைப்புகளின் பரிசுகளையும் பெற்றுள்ளது.

பெயிண்டிங்  பணிகளில் உதவும் ‘புளூ டேப்’

அறையில் உள்ள ஒரு சுவருக்கு குறிப்பிட்ட ஒரு நிறத்திலும், அதன் பார்டர் என்ற விளிம்பு பகுதிகளுக்கு வேறொரு நிறத்திலும் ‘பெயிண்டிங்’ செய்ய வேண்டியதாக இருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் ஒட்டு நாடாக்கள் உதவியாக இருக்கின்றன. அதாவது, ஒரு சுவரின் நான்கு ஓரங்களில் பச்சை வண்ண பார்டரும், அதன் உட்புறத்தில் மஞ்சள் வண்ணமும் பூச வேண்டும் என்றால், முதலில் சுவர் விளிம்புகளில் நாடாவை ஒட்டிவிட வேண்டும். 

பின்னர், உட்புற பகுதிக்கான மஞ்சள் பெயிண்டு பூசும்போது, அது சுவரின் விளிம்புகளில் நாடாவை தாண்டி செல்லாமல் தடுக்கப்படும். அந்த நிறத்தை சுவரின் உட்புறத்தில் பூசி முடித்ததும், நாடாவை பிரித்து எடுத்து விடலாம். பின்னர், பார்டர் பகுதியில் பச்சை நிறம் பூசும்போது வேறொரு டேப்பை, முன்னர் பூசிய மஞ்சள் நிற பெயிண்டிங் விளிம்பு பகுதியில் ஒட்டிவிட்டு, பார்டருக்கு பச்சை நிறத்தை பூசி விட்டு, டேப்பை அகற்றி விடலாம். இந்த முறையில் இரு வண்ணங்களும் இணையும் பார்டர் பகுதி இரு வெவ்வேறு நிறங்களால் பாதிக்கப்படாமல் கச்சிதமான நேர் கோட்டில் அமைந்திருக்கும்.   
இதைப்போல், தற்காலிகமாக மறைக்க வேண்டிய பகுதிகளை மறைத்து விட்டும் பெயிண்டிங் பணிகளை செய்ய இயலும். அது ‘டிரிம்’ செய்வது என்று சொல்லப்படும். ஒட்டு நாடா உதவி இல்லாவிட்டால், நீளமான ஸ்கேல் கொண்டு கோடு போட்டு, அதை ஒட்டியவாறு பெயிண்டிங் பணிகளை செய்ய வேண்டியதாக இருக்கும். 

இந்த ‘டேப்’ வகைகளை பெயிண்டர்கள் பயன்படுத்துவது வழக்கம். அவர்கள் ‘புளூ டேப்’ என்று அதை குறிப்பிடுகிறார்கள். அதன் பெயர்தான் நீல நாடாவே தவிர, அது புளூ நிறத்தில் பெரும்பாலும் இருப்பதில்லை. வெவ்வேறு வண்ணங்களிலும் இருக்கலாம். தற்காலிகமாக ஒட்டிக் கொள்ளவும், பின்னர் சுலபமாக பிரித்து எடுக்கவும் இவ்வகை ‘டேப்கள்’ ஏற்றதாக அமைந்திருக்கும். இன்டீரியர் அலங்கார பணிகளை செய்பவர்களுக்கும் இந்த டேப் பெரும் உதவியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story