கான்கிரீட்டுக்கு வலிமை கூட்டும் புதிய தொழில்நுட்பம்


கான்கிரீட்டுக்கு வலிமை கூட்டும் புதிய தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 29 March 2019 10:00 PM GMT (Updated: 29 March 2019 12:14 PM GMT)

கட்டுமான தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு நாளும் விதவிதமாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் மரக்கழிவுகளிலிருந்து பெறப்படும் கரியை பயன்படுத்தி உறுதியான கான்கிரீட் கலவையை உருவாக்க இயலும் என்று ஆராய்ச்சியில் அறியப்பட்டுள்ளது.


சிமெண்டு-கரி சேர்க்கை

கட்டுமானப் பணிகளில் விரயமாகும் மரக்கழிவுகளைப் பயனுள்ள வழியில் பயன்படுத்தலாம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மரக்கழிவுகள் மூலம் பெறப்படும் கரியை சிமெண்டுடன் கலந்து கான்கிரீட்டை உறுதிப்படுத்தமுடியும் என்று ஆய்வுகளில் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவ்வகை புதிய கான்கிரீட் கலவை தொழில்நுட்பம் காரணமாக கட்டுமானங்கள் அதிக காலம் நீடித்து உழைக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீரை தக்க வைக்கும் தன்மை

கார்பனை மிக அதிகமாக கொண்டுள்ள மரக்கரியில் சிறுசிறு துவாரங்கள் இருப்பதன் காரணமாக தண்ணீரை தக்க வைத்துக்கொள்ளும் திறன் அதற்கு இருக்கிறது. அதன் அடிப்படையில் நீரை தன்னுள் கொண்டு, அதன் வடிவத்தை ஒழுங்குபடுத்தும் பொருளாக செயல்படுகிறது. அந்த நிலையில் கான்கிரீட்டில் கலக்கப்பட்ட கரி அதை உறுதியாக்குகிறது என்று இந்த ஆய்வு குழுவின் தலைவரான பேராசிரியர் குவா ஹார்ன் வெய் தெரிவித்திருக்கிறார். இந்தப் புதிய வகை கான்கிரீட் தயாரிப்பு முறை காரணமாக வழக்கமான கான்கிரீட்டைவிட கிட்டத்தட்ட 20 சதவிகிதம் அதிக எடையைத் தாங்கக்கூடியதாக இருக்கும் என்தும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

உறுதி மற்றும் எடை குறைவு

மேற்கண்ட முறையின் மூலம் கான்கிரீட் கலவை பலமாக உருவாக்கப்படுவதால் கான்கிரீட் வார்ப்புகள் எடை குறைந்ததாகவும், அதே நேரம் உறுதி கொண்டதாகவும் இருக்கும். இதன் காரணமாக கான்கிரீட் பயன்பாடு வழக்கமான முறையை விட குறைவாக இருக்கும் என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. கான்கிரீட் தொழில் நுட்பத்தில் பல்வேறு மாற்று முறைகள் கண்டறியப்பட்டு வரும் காலகட்டத்தில் இந்த முறையின் மூலமாகவும் சூழல் பாதுகாப்புக்கு ஒரு மாற்று வழி கிடைத்தால் அது வரவேற்கத்தக்கதுதான் என்பது வல்லுனர்களது கருத்தாகும்.

Next Story