உங்கள் முகவரி

குடியிருப்புகளுக்கு அவசியமான நிலத்தடி நீர் பாதுகாப்பு + "||" + Groundwater protection

குடியிருப்புகளுக்கு அவசியமான நிலத்தடி நீர் பாதுகாப்பு

குடியிருப்புகளுக்கு அவசியமான நிலத்தடி நீர் பாதுகாப்பு
சென்னை பெருநகர குடியிருப்புகளின் அன்றாட தண்ணீர் தேவைகளுக்கு கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வரையில் நிலத்தடி நீரே பயன்படுகிறது.
மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகர விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக அதிகரிக்கும் தண்ணீர் தேவையை நிலத்தடி நீர் மூலமகவே பெரும்பாலான இடங்களில் பூர்த்தி செய்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, மேல்மட்ட நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுக்கப்பட்டு, தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. அதன் பின்னர், கீழ்மட்ட நிலத்தடி நீர் அதிக ஆழம் கொண்ட ‘போர்வெல்’ மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீர்

வீடுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத இரண்டு வெவ்வேறு நிலைகளில் கிடைக்கிறது. நிலத்தடியில் உள்ள பாறைகளுக்கு மேற்புறம் உள்ள நீர் மற்றும் பாறைகளுக்கு உட்புறம் செறிந்துள்ள நீர் ஆகிய நிலைகளில் கிடைக்கிறது. மேல்மட்ட நிலத்தடி நீர் கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ‘போர்வெல்’ மூலமாகவும், மேல்மட்ட பாறைகளுக்கு உட்புறம் உள்ள நீர் அதிக ஆழம் கொண்ட ‘போர்வெல்’ மூலம் எடுக்கப்படுகின்றன. மேல் நிலத்தடி நீரானது மழை நீர் பூமிக்குள் செல்லுவதன் மூலம் ஒவ்வொரு வருடமும், தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைகளுக்குள் இருக்கும் காரணத்தால் அதை தக்க வைத்துக் கொள்வது சிரமம். சென்னை பெருநகரை பொறுத்த வரையில் ஒவ்வொரு பகுதியிலும் கடினப்பாறை அமைப்பு வெவ்வேறு ஆழங்களில் அமைந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

சென்னையின் நிலத்தடி நீர்மட்டம்

சென்னை சுற்றுப்புற பகுதிகளில் வெவ்வேறு மட்டங்களில் நிலத்தடி நீர் இருப்பது அறியப்பட்டுள்ளது. பல இடங்களில் கிட்டத்தட்ட 10 அடி ஆழத்திலும், வேறு சில இடங்களில் கிட்டத்தட்ட 60 அடி ஆழத்திலும், இதர பல பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் நிலத்தடி நீர் அமைந்துள்ளது. இந்த அளவுகளை பொறுத்தே சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க மழைநீர் சேமிப்புக்கான சட்டத்தை அரசு கொண்டு வந்த காரணத்தால், பெருமளவு மழைநீர் பூமிக்குள் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பயனாக, மேல்மட்ட நிலத்தடி நீர் சில பகுதிகளில் 15 அடியாகவும், ஒரு சில பகுதிகளில் 20 அடியாகவும் உயர்ந்துள்ளது.

மழை நீர் சேகரிப்பு

நிலத்தடி நீரை பாதுகாத்துக்கொள்ள குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளில் கிணறு இருக்கும் பட்சத்தில் அதை வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் முடி விடக்கூடாது. ஒருவேளை அவை நீர் இல்லாமல் இருந்தாலும், மழை நீர் சேகரிக்கும் இடமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதிக ஆழமில்லாத ‘போர்வெல்’ மற்றும் கிணறு இருக்கும் நிலையில் அவற்றை பழுது பார்த்து வைத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு பயன் அளிக்கும். மேல் மாடியில் பெய்யும் மழைநீரை அவற்றில் செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

புதிய முறை

வழக்கமாக ‘போர்வெல்’ அமைக்கப்படும்போது கடினமான பாறையில் துளையிட்டு, பாறைப்பகுதியில் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள கெட்டியான பிளாஸ்டிக் குழாய்கள் பொருத்தப்படும். அந்த நிலையில் மேல்மட்ட நிலத்தடி நீர், கீழ்மட்ட நிலத்தடி நீர் உள்ள பகுதிக்கு செல்லாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. அதனால், பாறைப்பகுதியில் பொருத்தப்படும் பிளாஸ்டிக் குழாய்களில் ஆங்காங்கே துளைகள் போடப்பட்டு பயன்படுத்தலாம். அதன் மூலம் நீர் மட்டம் பரவலாக அமையும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.