தெரிந்து கொள்வோம் மின்சார வயர் நிறங்கள்


தெரிந்து கொள்வோம் மின்சார வயர் நிறங்கள்
x
தினத்தந்தி 18 May 2019 3:06 AM GMT (Updated: 18 May 2019 3:06 AM GMT)

வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் மின்சார வயர்கள் பல நிறங்களில் இருப்பதை பலரும் கவனித்திருப்போம்

மின்சார வயர்கள் பல நிறங்களில் இருப்பதை பலரும் கவனித்திருப்போம். அவை வெறும் கவர்ச்சிகரமான தோற்றத்தை மட்டும் தருவதற்கான நிறங்கள் அல்ல. சம்பந்தப்பட்ட வயரின் ஆதார பயன்பாட்டுக்கான தகவல்களை அதன் நிறங்கள் குறிப்பிடுகின்றன. அதற்கேற்ப, வீட்டில் உள்ள மின் சாதனங்களின் பயன்பாட்டில் ஏற்படும் மின் அழுத்தத்தை தாங்கக்கூடிய தன்மை கொண்ட வயர்களை பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

மேலும், வயர்கள் மீது ஆங்கில எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருப்பதை பலரும் கவனித்திருக்கலாம். அந்த எழுத்துக்கள் குறிப்பிட்ட வயர் எவ்வகையான சூழ்நிலைகளில் பயன்படுத்த ஏற்றது என்ற தகவலை சொல்கிறது. வயர்களின் நிறங்கள் மற்றும் அவற்றின் மீது அச்சிடப்பட்ட எழுத்துக்கள் ஆகியவை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

நிறங்களுக்கேற்ப பயன்பாடு

கருப்பு - இவ்வகை வயர்கள் சுவிட்ச் மற்றும் ‘பிளக் பாயிண்டுகளில்’ பயன்படுத்தப்படுகிறது.

சிவப்பு - இரு இணைப்புகளுக்கான தொடர்பு வயராகவும், புகை உணரும் கருவிகளிலும் இவ்வகை வயர் பயன்படுத்தப்படுகிறது.

நீலம் மற்றும் மஞ்சள் - அறைகளுக்கு இடையில் குழாய்கள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்லும் வயர்கள் இவை. பொதுவாக, நீல நிற வயர்கள் 3 அல்லது 4 இணைப்புகள் கொண்ட ஜங்ஷன் பெட்டிகளில் பயன்படுகிறது. மஞ்சள் நிற வயர்கள் விளக்குகள், மின் விசிறிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளை - இந்த நிற வயர்கள் ‘நியூட்ரல்’ ஆக பயன்படுகின்றன.

பச்சை மற்றும் இதர காப்பர் வகை - தரையில் ‘எர்த்’ இணைப்பு கொடுப்பதற்கு இவ்வகை வயர்கள் பயன்படுகின்றன.

எழுத்து குறிப்பிடும் தகவல்

T (Thermoplastic Insulation) வெப்பத்தடுப்பு வயராக செயல்படும்.

H (Heat Resistance) நெருப்பால் பாதிக்கப்படாத தன்மை கொண்டது.

HH (High Heat Resistance) இவ்வகை வயர்கள் கிட்டத்தட்ட 90 டிகிரி வரை வெப்பத்தை தாங்கி நிற்கும் தன்மை கொண்டவையாக செயல்படுகின்றன.

W (Suitable for Wet Locations) ஈரப்பதம் கொண்ட இடங்களில் பயன்படுத்த இவ்வகை ஏற்றது.

N (Nylon coating, Resistant to damage by gas or oil) வாயு மற்றும் இதர திரவ பொருட்களால் பாதிக்கப்படாத தன்மை கொண்டவை இவ்வகை வயர்கள்.

X (Synthetic Polymer for FlameResistant) நெருப்புடன் தொடர்பு கொள்ளும் பகுதிகளில் இவ்வகை வயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.


Next Story