சோர்வை போக்கும் சோபா
வீடுகளை அழகாகக் காட்டும் ‘சோபா செட்’ இல்லாவிட்டால் ஏதோ குறை உள்ளது போலத்தான் தெரியும். பல்வேறு வடிகளில் கிடைக்கும் ‘சோபா செட்’ வகைகளை இடத்திற்கு ஏற்ப தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
இடத்தை அடைத்துக்கொள்ளாமல் இருக்க ’ட’ வடிவ சோபா அமைப்பு பொருத்தமாக இருக்கும். அதை சுவரை ஒட்டியவாறு வைத்தும் இடத்தை மிச்சப்படுத்தலாம். குறிப்பாக, இவ்வகை சோபாக்களின் வண்ணத்திற்கேற்ப, மேற்புற சுவர்களில் டிசைன் வால்பேப்பர்களை ஒட்டினால் அப்பகுதி அழகாக இருக்கும்.
நவீன நாற்காலிகள்
குடியிருப்புகளில் ‘சோபா செட்’ போடுவதற்கு போதிய இடவசதி இல்லை என்பவர்கள், தற்போதைய நாகரிக வடிவமான ‘பீன் பேக்’ என்ற குட்டியான தனி நபர் சோபாவை பயன்படுத்தலாம். மேலும், ஹால், படிப்பறை மற்றும் இதர பகுதிகளில் உபயோகிக்க விதவிதமாக வடிவங்களில் உள்ள நாற்காலிகளையும் பயன்படுத்தலாம். ஸ்டைலாகவும், இடத்தை அடைக்காத கலர்புல்லான ‘பீன் பேக்’ மற்றும் நாற்காலிகளை உள்புற சுவரின் வண்ணத்திற்கேற்ப கச்சிதமாக உபயோகப்படுத்தி இடத்தை அழகாக மாற்ற இயலும்.
நாற்காலி இணைந்த புத்தக அலமாரி
நகர்ப்புற குடியிருப்புகளில் புத்தக அலமாரி என்பது அதிகமாகி வருகிறது. பணியிலிருந்து களைத்து வீடு திரும்புபவர்கள் சற்றே இளைப்பாறும் விதமாக அமர்ந்து, படிக்கும் விதத்தில் புத்தக அலமாரியுடன் கூடிய நாற்காலிகள் ‘ரிலாக்சேஷனாக’ அமைகின்றன. தினசரி பேப்பர்கள் உள்ளிட்ட வாராந்திர மற்றும் மாதாந்திர புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்தால் மாலை காபி அருந்தியபடி அவற்றை வாசிப்பது அருமையாக இருக்கும். அலமாரி, நாற்காலி ஆகியவை தனித்தனியாக இல்லாமல் ஒருங்கிணைந்த ‘காம்போவாக’ உள்ள இவை சிக்கன பயன்பாட்டுக்கு ஏற்றவை.
பலவகை பயனுள்ள படுக்கை
வீடு அல்லது குடியிருப்பில் சுவர் அலமாரி கட்டமைப்பு இல்லாவிட்டால் ரெடிமேடு அலமாரிதான் வழி. துணிகளை வைக்க, புத்தகம் அடுக்க, பொம்மைகள் வைக்க என்று அலமாரிகளை அதிகப்படுத்துவதை தவிர்ப்பதற்கான வழியாக ‘மல்டி பர்ப்பஸ் பெட்’ வகைகள் உள்ளன. படுக்கை என்பது உறங்குவதற்கான பயன்பாட்டை மட்டும் கொண்டதாக இல்லாமல், துணிகளை அடுக்கி வைக்கவும், புத்தகங்களை வரிசையாக வைக்கவும் கூடிய வசதிகள் இதில் உள்ளன. பகலில் இதை சோபாவாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Related Tags :
Next Story