கான்கிரீட் கலவை எந்திர பயன்பாட்டில் பாதுகாப்பு அவசியம்
கட்டுமான பணிகளுக்கான கான்கிரீட் தயாரிக்கப் பயன்படும் கலவை எந்திரம் பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறது.
சிறிய கட்டிடங்கள் முதல் பெரிய கட்டுமானங்கள் வரை கலவை எந்திரம் மிக முக்கியமானதாகும். அதனை பயன்படுத்தும்போது எவ்விதமான பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்பது பற்றி கட்டுனர்கள் மற்றும் பொறியாளர்கள் தந்துள்ள குறிப்புகளை இங்கே காணலாம்.
* ஒவ்வொரு நாளும் கலவை எந்திரத்தை பயன்படுத்துவதற்கு முன்னதாக சோதனை ஓட்டம் என்ற நிலையில் காலியான டிரம்மை ஓட விட்டு அதன் சீரான இயக்கத்தை உறுதி செய்து கொள்ளவேண்டும். மேலும், அதில் உள்ள போல்ட்டுகள் மற்றும் நட்டுகள் ஆகியவற்றின் தன்மை பற்றி சோதித்து அறியவேண்டும்.
* அன்றைய பணிகள் முடிந்த பின்னர், பணியாளர்கள் காரைக்கரண்டி (Tr-ow-el) மற்றும் காரைச்சட்டி (Bo-nd) ஆகியவற்றை கான்கிரீட் ‘மிக்ஸர் டிரம்மின்’ உட்புறத்தில் வைத்து விடுவதாக அறியப்பட்டுள்ளது. அதனால் சோதனை ஒட்டத்திற்கு முன்பாக டிரம் உட்புறத்தில் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
* மிக்ஸர் எந்திரத்தை இயக்கும் தொழிலாளர்கள் அல்லது ஆபரேட்டர்கள் அவர்களது கைகள், ஆடைகள் மற்றும் இதர கருவிகளை கான்கிரீட் மிக்ஸரின் நகரக்கூடிய பகுதியிலிருந்து தொலைவில் வைத்திருக்க வேண்டும்.
* எந்திரம் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அதை தன்னிச்சையாக விட்டுவிட்டு சென்று விடக்கூடாது. மேலும், பணியை விரைவாக முடிக்க வேண்டி, டிரம் கொள்ளளவுக்கும் அதிகமான கான்கிரீட்டை கலக்க முயற்சிப்பது தவறான முறையாகும்.
* மின்சாரத்தால் இயங்கக்கூடிய கான்கிரீட் மிக்ஸர்களின் மின் இணைப்புகள் குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக, மின் அதிர்ச்சியை தடுக்கும் ‘சர்க்கியூட் பிரேக்கர்’ சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும். பொறியாளரது மேற்பார்வையில் அதன் ‘எர்த்’ அமைப்புகளுக்கான இணைப்புகள் அளிக்கப்படுவது மிக முக்கியம்.
* டீசல் மோட்டார் மூலம் இயங்கும் மிக்ஸர் எந்திரங்களில் வெளிப்படும் புகையை தக்க விதத்தில் தூரமாகவோ அல்லது மேல்நோக்கியோ செல்லும்படி செய்ய வேண்டும். அதற்கு மாறாக பணியிடத்தில் மோட்டர் புகை பரவும்படி இருந்தால், தொழிலாளர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு, உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம்.
* கலவை எந்திரம் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அதன் உதிரி பாகங்களை மாற்றுவது அல்லது சுத்தம் செய்வதுபோன்றவை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
* மின்சாரத்தால் இயங்கும் கான்கிரீட் ‘மிக்ஸர் டிரம்’ எப்போதுமே அதன் அம்புக் குறியிட்ட திசையில்தான் சுழல வேண்டும். அதற்கேற்பவே அதன் கேபிள் இணைப்புகள் தரப்பட்டிருக்கும். ஏதாவது காரணத்தின் அடிப்படையில் கேபிள் இணைப்புகள் தவறாக இணைக்கப்படும் நிலையில், அதற்கு எதிர் திசையில் டிரம் இயங்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் கான்கிரீட் தரம் பாதிக்கப்படக்கூடும்.
* கான்கிரீட் கலவை பணிகளை செய்ய போதுமான வெளிச்சம் அவசியமானது. அதற்கேற்ப ‘லைட் செட்டிங்’ செய்து கொள்வது முக்கியம். குறிப்பாக, கலவை எந்திரத்திற்கு அருகாமையில் குழந்தைகள் விளையாடுவதை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
Related Tags :
Next Story