வாஸ்து ரீதியாக வீடுகள் கட்டமைக்க ஏற்ற மரங்கள்


வாஸ்து ரீதியாக வீடுகள் கட்டமைக்க ஏற்ற மரங்கள்
x
தினத்தந்தி 3 Aug 2019 3:30 PM IST (Updated: 3 Aug 2019 3:30 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் கட்டமைப்பில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைக்க மர வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கதவு நிலைகள், ஜன்னல் பிரேம் ஆகியவற்றை மரத்தால் அமைப்பதை பலரும் விரும்புகிறார்கள். தற்போதைய ரெடிமேடு உலகத்தில், மரத்தால் செய்யப்பட்ட ரெடிமேடு கதவு, ஜன்னல்களும், யு.பி.வி.சி கதவு, ஜன்னல்களும் தயார் நிலையில் கிடைக்கின்றன. கார்பெண்டர் மூலம் வீட்டுக்கான மரத்தை 6 மாதகாலத்திற்கு முன்னதாக தேர்வு செய்து, அவை நன்றாக காய்ந்த பின்னர் கதவு, ஜன்னல்கள் உருவாக்கும் முறை தற்போது அதிகமாக நடைமுறையில் இல்லை.

வாஸ்து சாஸ்திர ரீதியாக வீட்டின் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் மரங்களை தேர்வு செய்வதில் பல குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படை தன்மைகேற்ப பயன்படுத்துவது நல்ல பலன்களை அளிக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். அவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

கட்டுமானப்பணிகளுக்கு பயன்படும் மர வகைகள் 3 பொதுவான நிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, ஆண் தன்மை கொண்டவை, பெண் தன்மை கொண்டவை மற்றும் இரட்டை தன்மை கொண்டவை என்ற மூன்று நிலைகளில் மர வகைகள் பிரிக்கப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

* ஆண் தன்மை கொண்ட மரம் என்பது ஒரே சீரான அளவுடன், உருண்டு திரண்ட வடிவில், கரடுமுரடாக இல்லாமல் தூண் போன்ற கச்சிதமான வடிவத்தை பெற்றிருக்கும்.

* கீழ்ப்பகுதி பருமனாகவும், மேல்பகுதி சிறியதாகவும், குறுகலாகவும் வளர்ந்த மரங்கள் பெண் தன்மை கொண்ட மரங்களாக குறிப்பிடப்படுகின்றன.

* கீழ்ப்பாகத்திலிருந்து நடுப்பகுதி வரை சிறியதாகவும், குறுகிய அமைப்பாகவும், மேல்பகுதி பருமனாகவும் அமைந்திருப்பது இரட்டை தன்மை கொண்ட மரங்களாக குறிப்பிடப்படுகின்றன.

* வாஸ்து சாஸ்திர முறைகளின்படி கூரையை தாங்கும் தூண்கள் அமைப்பில் ஆண் தன்மை கொண்ட மரங்களை பயன்படுத்தினால், நல்ல பலன்கள் ஏற்படும்.

* பெண் தன்மை கொண்ட மரங்களை குறுக்குச் சட்டங்களாகவும், ‘பீம்’-களாகவும் பயன்படுத்தினால் சிறப்பான பலன்கள் ஏற்படும்.

* இருநிலை தன்மை கொண்ட மரங்கள் சிறிய அளவிலான இணைப்பு விட்டம், இணைப்பு சட்டம் ஆகியவற்றை அமைக்க ஏற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்கால வீடுகளில் தேக்குமரம் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதை பலரும் கவனித்திருப்போம். அவ்வாறு தேக்குமரம் பயன்படுத்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும் என்பது, அவர்களுக்கு சவுகரியமான வாழ்வும் கிடைக்கும் என்றும் வாஸ்து குறிப்புகள் உள்ளன.

தேக்கு மரத்துக்கு அடுத்த நிலையில் மாமரம் பல வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அத்தகைய வீட்டு உரிமையாளர்களுக்கு குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மூன்றாவது நிலையில் இலுப்பை மரம் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவ்வாறு இலுப்பை மர கதவு, ஜன்னல்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும்போது, வீட்டு உரிமையாளர்கள் வியாபாரம் அல்லது செய்தொழிலில் லாபம் பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, வேப்ப மரம் பயன்படுத்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் நுட்பமான அறிவு கொண்டவர்களாகவும், கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

வேங்கை மரம் உபயோகப்படுத்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் விவசாயம் மற்றும் விலைபொருள்கள் சார்பான துறையில் ஈடுபட்டு லாபம் அடைவார்கள் என்றும் வாஸ்து ரீதியான குறிப்புகள் இருக்கின்றன.

வாஸ்து ரீதியாக வீடுகள் கட்டமைப்புக்கு பயன்படுத்தக்கூடாத வகையில் அரசமரம், ஆலமரம்,, அத்தி, நாவல், நெல்லி, புளியமரம், இலந்தை, எட்டி, விளா, பீலி, மகிழம் போன்ற மரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதனால் வீடுகள் கட்டமைப்பில் அவை தவிர்க்கப்பட்டன.

மேலும், கோவிலில் வளர்ந்த மரங்கள், மயான பூமி பகுதியில் வளர்ந்த மரங்கள், நெருப்பால் பாதிக்கப்பட்ட மரங்கள், தாமாக காற்றில் விழுந்த மரங்கள், மழை நீரால் பாதிக்கப்பட்ட மரங்கள் ஆகியவற்றை வீடுகள் கட்டமைப்பில் பயன்படுத்துவதும் கட்டாயமாக தவிர்க்கப்பட்டது.
1 More update

Next Story