கட்டிட விரிசல்களை சரி செய்யும் நவீன தொழில்நுட்பங்கள்


கட்டிட விரிசல்களை சரி செய்யும் நவீன தொழில்நுட்பங்கள்
x
தினத்தந்தி 21 Sept 2019 3:21 PM IST (Updated: 21 Sept 2019 3:21 PM IST)
t-max-icont-min-icon

கான்கிரீட் கட்டுமானங்களில் உருவாகும் விரிசல்கள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றை சரி செய்வது முக்கியமானது. மேலும், கட்டிடங்களின் உறுதி நீடித்து நிற்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப முறைகள் கட்டுமானப் பொறியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் எளிய சில முறைகள் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

‘எபாக்ஸி ரெஸின் இன்ஜெக்‌ஷன்’

கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களில் ‘எபாக்ஸி’ ரசாயனத்தை இன்ஜெக்‌ஷன் (EpoxyResin injection) செய்யும் முறை எளிமையாகவும், செலவு குறைவான முறையும் ஆகும். ‘எபாக்ஸி’ ரசாயனம் பலமும், இதர ரசாயனங்களால் ஏற்படும் கட்டுமான பாதிப்புகளை தடுக்கும் தன்மை பெற்றதாலும் இந்த முறை பரவலாக இருந்து வருகிறது. இந்த வழிமுறை பொதுவாக ‘டார்மண்ட் கிராக்’ என்று சொல்லப்படும் விரிவடையாத விரிசல்களுக்கு பொருத்தமானதாக அறியப்பட்டுள்ளது.

அதாவது, கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களின் நீள வசத்தில் துளைகள் போடப்பட்டு, அவற்றின் உட்புறத்தில் ‘எபாக்ஸி’ரசாயனம் செலுத்தப்படுகிறது. ஒரு துளைக்குள் செலுத்தி முடித்தவுடன், அதை ‘சீல்’ செய்து விட்டு அடுத்த துளையில் ரசாயனம் செலுத்தப்படும். இதன் ‘பாலிமர்’ ரசாயனமானது விரிசலுக்குள் அழுத்தமாகச் செலுத்தப்படுவதால் விரிசலின் முழு ஆழத்திற்கும் ஊடுருவிச் சென்று முழுமையாக அடைக்கிறது.

‘ரூட்டிங் மற்றும் சீலிங்’

விரிசல்களை அடைப்பதில் இந்த முறையும் (Routing and sealing) எளிமையான செயல்முறைகளைக் கொண்டதாகும். பொதுவான விரிசல் பழுது பார்க்கும் முறையாக உள்ளதால் தொழில் ரீதியாக அனுபவம் குறைந்த பணியாளர்கள்கூட இந்த முறையைச் செய்யலாம். சிறுசிறு விரிசல்கள் கொண்ட கட்டமைப்பு அல்லது தனிப்பட்ட பெரிய விரிசல் உள்ள கட்டமைப்பு ஆகிய எதுவாக இருந்தாலும் அதை பழுது பார்க்க இம்முறை ஏற்றது. இந்த முறைப்படி, விரிசல் அமைந்துள்ள விதத்தின் அடிப்படையில், அதன் கீழ்மட்டம் வரை சென்று, தக்க கலவையால் நிரப்பி சரி செய்யப்படுகிறது.

‘ஸ்டிச்சிங்’ முறை

விரிசலின் குறுக்காக கம்பிகளை குறைந்த இடைவெளியில் அமைத்து, துணியை தைப்பது போன்று (Stitching) இம்முறையில் பழுது பார்க்கப்படுகிறது. விரிசலின் குறுக்கே கான்கிரீட்டில் கம்பி வைக்கும் அளவிற்கு சிறிய பள்ளம் ஏற்படுத்தி, அதில் முன்னரே வளைத்து வைத்திருந்த கம்பியை பொருத்தப்படும். பின்னர், அவற்றை எபாக்ஸி ரசாயனத்தால் நிரப்பி சுவரின் மட்டம் அளவிற்கு மேற்பூச்சு செய்யப்படும்.

மேற்சொன்ன முறைகளைத் தவிரவும் ‘எக்ஸ்டெர்னல் ஸ்ட்ரெஸ்ஸிங்’ (External stressing) , ‘பாண்டிங்’ (Bonding) , ‘பிளாங்கெட்டிங்’ (Blanketing) , ‘வாக்குவம் இம்பிரிக்னேஷன்’ (Vacuum impregnation) , ‘பாலிமர் இம்ப்ரிக்னேஷன்’ (Polymer impregnation) , ‘டிரில்லிங் அன்டு பிளக்கிங்’ (Drilling and plugging) , ‘கோட்டிங்’ (coating) , ‘சாண்ட் பிளாஸ்டிங்’ (Sand blasting) , ‘ஆசிட் எட்சிங்’ (acid etching) மற்றும் காக்கிங் (caulking) ஆகியவை உள்ளிட்ட பல தொழில்நுட்ப அணுகுமுறைகள் வல்லுனர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவை, முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்த முறைகளாக இருப்பதால், அவற்றை செய்து தர பல்வேறு தனியார் ஏஜென்ஸிகள் பெருநகரங்களில் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் உதவியுடன் கட்டிடங்களின் விரிசல்களை பழுது பார்த்து அவற்றை திரும்பவும் பழைய நிலைக்கே கொண்டு வரலாம்.

Next Story