உங்கள் முகவரி

பழமையான பாரம்பரியம் குறிப்பிடும் நகர அமைப்பு + "||" + City system referring to ancient tradition

பழமையான பாரம்பரியம் குறிப்பிடும் நகர அமைப்பு

பழமையான பாரம்பரியம் குறிப்பிடும் நகர அமைப்பு
நகரம் அல்லது ஊர் ஆகியவற்றை கட்டமைப்பதில், பழைய கால மக்கள் பல காரணிகளை கணக்கில் கொண்டு செயல்பட்டு வந்துள்ளதாக மனையடி சாஸ்திர நூல்கள் மூலம் அறியப்பட்டுள்ளது.
மேடான பகுதிகளை தேர்வு செய்து, அப்பகுதியில் அமைந்துள்ள மண்ணின் தன்மைக்கேற்ப, வடக்கு அல்லது வடகிழக்கு நோக்கி சரிவு அமைந்த நிலப்பகுதியில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.

நிலத்தின் வகைகள்

நிலத்தின் மண் அமைப்புக்கேற்ப பழைய கால மக்கள், அதை உயர்தரம், நடுத்தரம், கடைத்தரம் என மூன்று வகைகளாகப் பிரித்து, கட்டிடங்களை அமைத்துள்ளார்கள். அதாவது, மண்ணின் நிறம், மணம், நிலத்தை தட்டினால் எழும் ஒலி, மண்ணின் சுவை ஆகியவற்றை அறிந்து கொள்வதன் மூலம் தரம் நிர்ணயிக்கப்பட்டது.

ஊர்களுக்கான சுற்றளவு

மய மதம் என்ற வாஸ்து நூலின் அடிப்படையில் ஊர் அமைப்பு அதன் சுற்றளவின் அடிப்படையில் ஐந்து வகைகளாக சொல்லப்பட்டது. ஒரு தண்டம் என்பது 11 அடி என்ற நிலையில் 20 ஆயிரம் தண்டம், 40 ஆயிரம் தண்டம், 60 ஆயிரம் தண்டம், 80 ஆயிரம் தண்டம் மற்றும் ஒரு லட்சம் தண்டம் சுற்றளவு என்ற அளவுகளின் அடிப்படையில் கிராமங்கள் மற்றும் ஊர்கள் அமைக்கப்பட்டன.

கட்டமைப்புக்கான நில ஒதுக்கீடு

கிராமம் அல்லது நகர்ப்பகுதியில் இருபதில் ஒரு பாகம் மட்டுமே வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டது. மீதம் உள்ளவை விளை நிலங்கள், நீர் நிலைகள், மேய்ச்சல் நிலங்கள், மரங்கள் அடர்ந்த தோப்புகள் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டு, நகர் அமைப்பில் பல விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. அப்படி அமைக்கப்பட்ட ஊர் அல்லது நகர எல்லையில் ஆறு, ஓடை போன்ற நீர்நிலைகள் இருந்தன.

கட்டுமானப் பொருட்கள்

வீடுகள் அமைப்பில், கல் கட்டுமானம் மற்றும் செங்கல் கட்டுமானம் ஆகியவை நடைமுறையில் இருந்தன. கருங்கல் சுவர் மற்றும் செங்கல் சுவர்களுக்கு சுண்ணாம்பு மேற்பூச்சு செய்யப்பட்டது. அதற்கு, சுண்ணாம்பு மற்றும் மணல் ஆகியவற்றை கலந்து ஆலையில் அரைத்து, கலவை தயார் செய்யப்பட்டது. அரைத்த சுண்ணாம்புக் காரை சில நாட்கள் பதப்படுத்தப்பட்ட பின்னரே பயன்படுத்தப்பட்டது. அந்த சுண்ணாம்பு காரை அரை தீர்வை, முக்கால் தீர்வை, முழு தீர்வை என ஆலையின் சுற்றுகளின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகையாக குறிப்பிடப்பட்டன.

உறுதியான சுண்ணாம்பு காரை

கால்சியம் அதிகம் கொண்ட சுண்ணாம்பு காலப்போக்கில் காற்றில் உள்ள ‘கார்பன்’ வாயுவை உட்கொண்டு மிகவும் உறுதியாக மாறுவதை பழங்கால தமிழர்கள் அறிந்திருந்தார்கள். முழுத்தீர்வை காரையில் மணல் முழுமையாக அரைக்கப்பட்டு அதில் உள்ள சுண்ணாம்பு பசைத்தன்மை மற்றும் பிடிப்பு அதிகம் கொண்டதாக இருக்க, கடுக்காய் நீர், பதநீர் ஆகியவை கலக்கப்பட்டன. அந்த கலவை மூலம் கட்டமைக்கப்பட்ட வீடுகள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து நின்றுள்ளன என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.