நடைமுறைகளுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்


நடைமுறைகளுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்
x
தினத்தந்தி 23 Nov 2019 3:49 PM IST (Updated: 23 Nov 2019 3:49 PM IST)
t-max-icont-min-icon

மனைப்பிரிவு மற்றும் கட்டிடங்களுக்கான ஒப்புதல் அளிக்கும் அரசின் விதிகள் மற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் விதத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. அதன் அடிப்படையிலும், விதிகளில் உள்ள வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் நோக்கிலும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் -2019 ( Tamil Nadu Combined Development Regulation and Building Rules) உருவாக்கப்பட்டது.

கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் நீடித்த தன்மையை உறுதி செய்வது, வணிக ரீதியான எளிதாக்க நடைமுறைகளை (Ease of doing business) மேம்படுத்துவது ஆகிய அடிப்படைகளில் 04.02.2019 அன்று இந்த விதிகள் அறிவிக்கை செய்யப்பட்டன.

தமிழ்நாடு முழுவதற்கும் இந்த விதிகள் செயல்படுத்தப்படுகின்றன. சென்னை பெருநகர் பகுதி மற்றும் மாநிலத்தின் மீதமுள்ள பகுதிகளுக்கு வளர்ச்சி விதிமுறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாநிலம் முழுவதற்கும் பொருந்தும் வகையில் சீரான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு பகுதிகளுக்கும் பொருந்தக் கூடிய மாறுபாடுகளுடன் விதிகள் அமைந்துள்ளன.

தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் திட்ட அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள், சென்னை பெருநகர்ப் பகுதியின் வளர்ச்சி நெறிமுறைகள், இதர பகுதிகளின் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் ஆகியவற்றில் கட்டிட அனுமதி பெறுவதற்கான விதிகள், அதன் தொடர்புடைய உள்ளாட்சி சட்டங்களின் கீழ் இயற்றப்பட்ட விதிகள் ஆகிய அனைத்து விதிகளுக்கும் மாற்றாக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் அமைந்துள்ளன. அவற்றில், அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள், விதி முறைகளின்படி வளர்ச்சியை உறுதி செய்தல், கட்டுமான பணி நிறைவுச் சான்று வழங்குதல், தொழில் வல்லுநர்களை பதிவு செய்தல், வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.

திட்ட அனுமதி, கட்டிட அனுமதி மற்றும் பணி நிறைவு சான்றிதழ் ஆகியவற்றை பெறுவதற்கான நடைமுறைகள் புதிய விதிகளில் எளிமையாக்கப்பட்டுள்ளன. வாங்கும் திறனுக்கேற்ற வீட்டு வசதியினை ஊக்குவிக்கும் வகையில் தனிப்பட்ட விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிடங்கள் மற்றும் வர்த்தக வளாகங்கள் ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் எளிதாகவும், தடைகளற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கான சூழல் ஏற்படுத்தி தரவும் விதிகள் உள்ளன. திட்ட அனுமதிகள் கோரும் விண்ணப்பங்கள் மீது விரைந்து தீர்வுகள் காணும் வகையில் 2018-19 ஆண்டில், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டல அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.


Next Story