புத்தாண்டில் மாற்றத்தை எதிர்நோக்கும் ரியல் எஸ்டேட் சந்தை


புத்தாண்டில் மாற்றத்தை எதிர்நோக்கும் ரியல் எஸ்டேட் சந்தை
x
தினத்தந்தி 21 Dec 2019 2:16 PM IST (Updated: 21 Dec 2019 2:16 PM IST)
t-max-icont-min-icon

எதிர்வரும் 2020-ம் ஆண்டில் வர்த்தக ரீதியாக ரியல் எஸ்டேட் துறை சந்தை நிலவரத்தில் 5 விதமான காரணிகள் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளன.

திர்வரும் 2020-ம் ஆண்டில் வர்த்தக ரீதியாக ரியல் எஸ்டேட் துறை சந்தை நிலவரத்தில் 5 விதமான காரணிகள் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளன. அது பற்றி தேசிய அளவில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம்

இன்றைய காலகட்ட தொழில்நுட்ப அணுகுமுறை மற்றும் வசதிகள் வீடு விற்பவர், வாங்குபவர் ஆகிய இரு தரப்பினருக்கும் உதவும் வகையில் வளர்ந்துள்ளன. தகவல் பரிமாற்றம், வாடிக்கையாளர் விருப்பம், சேவை ஆகியவற்றில் கடந்த 5 ஆண்டுகளில் பல மாற்றங்களை ஏற்பட்டுள்ளன. கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் குறுகிய காலத்தில், எளிதாகவும், மேம்பட்ட தரம் கொண்டதாகவும், குறைந்த மனித உழைப்பு, குறைந்த பட்ஜெட் கொண்ட நிலையில் முடிவடைகின்றன. மெய்நிகர் உண்மை மற்றும் புனைவு மெய்மை போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் காரணமாக வாடிக்கையாளர்கள் கட்டுமான திட்ட பணியிடங்களுக்கு செல்லாமலேயே அவற்றை பார்க்க முடியும். உலக அளவில் ரியல் எஸ்டேட் துறையின் ‘பிளாக் செயின்’ குடிலாக இந்தியா மாறி வருவதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அன்னிய முதலீடுகள்

இந்திய அளவில் பெரு நகரங்களின் குடியிருப்பு திட்டங்கள் அல்லாத வர்த்தக-அலுவலக அடிப்படையிலான உள்கட்டமைப்பு திட்டங்களில் அன்னிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. வர்த்தக ரீதியிலான வெளிநாட்டு முதலீடுகள், தேவைகள் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் கிட்டத்தட்ட 28 சதவிகிதம் தனியார் பங்கு முதலீட்டு வரவு அதிகரித்துள்ளது. பெருநகர வர்த்தக உள்கட்டமைப்புகள், வணிக ரீதியான அசையா சொத்துகள், கிடங்குகள் கட்டமைப்பு ஆகிய நிலைகளில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், உள்ளூர் முதலீட்டாளர்களுடன் இணைந்து முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். வரும் காலங்களில் இந்த துறைகள் மேலும் வளர்ச்சி அடையும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, பங்கு சந்தை வர்த்தக அமைப்பான ரியல் எஸ்டேட் முதலீட்டு அமைப்பு  பல்வேறு சந்தை முதலீட்டு வாய்ப்புகளை பெரு நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.

வாடிக்கையாளர் தேவைகள்

தற்போதைய இறுக்கமான சந்தை நிலவரத்தில், கட்டுனர்கள் மற்றும் மனை மேம்பாட்டாளர்கள் தரப்பில் தங்களது வர்த்தக வியூகங்களை, வாடிக்கையாளர்களது தேவைகளின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டிய சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. கட்டுமான திட்டங்களில் சிறியது அல்லது பெரியது என்று இல்லாமல் மலிவு விலை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகிய அடிப்படைகளை நோக்கி கட்டுனர்கள் நகர்ந்தாக வேண்டிய சூழல் அமைந்திருக்கிறது. தற்போது மேற்கொண்டு வரும் கட்டுமான திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி இன்றைய சந்தை நிலவரத்திற்கேற்ப வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் கட்டுனர்கள் முனைந்துள்ளனர். குறிப்பாக, ‘ஜாயின்டு டெவலப்மென்டு’, தொழில் ரீதியான பங்குதாரர், இணை கட்டுனர் போன்ற கூட்டு வர்த்தக ரீதியான அம்சங்களில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஒன்றிணைக்கப்பட வேண்டிய சந்தை நிலவரம்

தேசிய அளவில் வீடுகள் விற்பனை என்பது அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற நிலையில், நகரங்களில் உள்ள பெரிய கட்டுமான நிறுவனங்கள் வீடுகள் விற்பனை நிலவரத்தை சீராக்குவதில் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. குறிப்பாக, மனை மேம்பாட்டாளர்கள் மற்றும் கட்டுனர்கள் ஆகியோர் தங்களது திட்டங்களுக்கு பெறப்பட்ட முதலீட்டு கடன்களை எவ்வகையிலாவது தீர்க்க முயற்சித்து வருகிறார்கள். சிறிய நிறுவனங்கள் இந்த விஷயத்தில் தடுமாறி வருகின்றன. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் தொழில் ரீதியாக சரிவை சந்தித்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எண்ணிக்கை இரு மடங்காக ஆகிவிட்டதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக முடங்கிய கட்டுமான திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதி உதவி அளிப்பதாக அறிவித்திருப்பது பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

புதிய பிரிவுகளின் வளர்ச்சி

2020-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களின் பொதுவான மனோவிருப்பங்களை கருத்தில் கொண்ட புதிய பிஸினஸ் மாடலாக மலிவு விலை வீடுகள் கட்டமைப்பு மற்றும் விற்பனை திட்டம் அமைய உள்ளதாக வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஆடம்பர வீட்டு வசதி குடியிருப்புகள் போன்ற மாடலில் குறைந்த விலை கொண்ட மலிவு விலை வீடுகள்  அடங்கிய கட்டுமான திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன. அத்துடன், வாடகை வீட்டுக்கு மாற்றாக, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து வாங்கிய வீட்டில் வசிக்கும் ‘கோ லிவிங்’  என்ற நடைமுறை பெரு நகரங்களில் வளர்ச்சி பெற்று வருவதையும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதன் வர்த்தக நீட்சியாக, பலரும் ஒன்றிணைந்து வாங்கிய கட்டமைப்பை அவர்களது தொழில் மற்றும் வர்த்தக தேவைகளுக்கேற்ப பயன்படுத்தி கொள்ளும் ‘கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ்’  என்ற நடைமுறையும் பெரு நகரங்களில் வளர்ந்து வருகிறது.

புதிய உட்பிரிவுகள்

வல்லுனர்களின் கருத்துப்படி கடந்த ஒரு சில ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் சந்தை கட்டமைப்பு வர்த்தக அடிப்படையிலும், நாகரிக மாற்றங்களின் அடிப்படையிலும் மேற்கண்ட புதிய உட்பிரிவுகளை  கொண்டதாக மாறியுள்ளது.

கான்கிரீட் கட்டமைப்பு மற்றும் விற்பனை என்ற நிலையிலிருந்து, வாழ்வியல் அவசியங்களின் அடிப்படையில் வாடிக்கையாளர் தேவைகளுக்கேற்ப சேவை அளிக்கும் வர்த்தக மாடலாக ரியல் எஸ்டேட் துறை மாற்றம் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் சந்தை நிலவரம் மட்டுமல்லாமல் மக்களின் பொதுவான மனப்பான்மையை கணித்தும் தங்களது வர்த்தக வியூகங்களை கட்டுனர்கள் மற்றும் மனை மேம்பாட்டாளர்கள் அமைத்து கொள்ள வேண்டும் என்று ரியல் எஸ்டேட் வர்த்தக ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story