சாலை மட்டத்திற்கேற்ப வீட்டை உயர்த்தும் தொழில் நுட்பம்


சாலை மட்டத்திற்கேற்ப வீட்டை உயர்த்தும் தொழில் நுட்பம்
x
தினத்தந்தி 15 Feb 2020 10:00 AM GMT (Updated: 2020-02-15T15:30:50+05:30)

வீடுகள் கட்டமைப்பில் சாலை மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வீட்டின் தளமட்ட அளவு குறிப்பிட்ட உயரத்தில் நிர்ணயம் செய்யப்படும்.

காலப்போக்கில் சாலைகள் சீரமைப்பு பணிகள் காரணமாக அதன் மட்டம் உயர்ந்து விடலாம். அதன் காரணமாக சாலையில் தேங்கும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடக்கூடும். இந்த சிக்கலை தீர்ப்பதற்கு உதவும் தொழில்நுட்பம் ‘பில்டிங் லிப்டிங் டெக்னாலஜி’ ஆகும். அதாவது, சம்பந்தப்பட்ட வீட்டை ரோடு மட்டத்திலிருந்து வேண்டிய அளவு உயரமாக அமைத்துக்கொள்வதாகும்.

வட இந்திய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த தொழில்நுட்பம் தற்போது தமிழகத்திலும் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட செய்திகளை பலரும் அறிந்திருப்போம். சுவர்களில் விரிசல்கள் ஏற்படாமல், கச்சிதமாக எவ்வாறு வீடு உயர்த்தப்படுகிறது என்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

வீட்டை தேவையான அளவுக்கு உயர்த்தி, புதிய அஸ்திவாரத்தின் மீது வீட்டை கட்டமைப்பதற்கு முன்னர் கீழ்க்கண்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படும்.

* வீட்டின் வயது, கட்டமைக்கப்பட்ட விதம், பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள் ஆகியவை பற்றி பரிசோதித்து அறியப்படும்.

* வீட்டின் அஸ்திவார அமைப்பு, அனைத்து பகுதிகளின் உறுதி, கட்டிடத்தின் மொத்த அளவு, அதில் உள்ள தளங்கள், வீடு மழைநீரால் பாதிக்கப்படும் நிலை, வெளிப்புற சாலையின் மட்டம் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும்.

* அவற்றின் அடிப்படையில் ரோடு மட்டத்திலிருந்து பாதுகாப்பாக வீட்டை உயர்த்த வேண்டிய அளவு தீர்மானிக்கப்படும். பின்னர், கட்டிடத்தின் எடையை கணக்கிட்டு அதற்கு ஏற்ப 10 சதுரடிக்கு 3 அல்லது 4 ஜாக்கிகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

வீடுகள் அல்லது குடியிருப்புகளின் அடித்தளம் என்பது ‘பிரேம்டு ஸ்ட்ரக்சர்’ அல்லது கருங்கல் அஸ்திவாரமான ‘லோடு பேரிங் ஸ்ட்ரக்சர்’ கட்டமைப்புகளாக இருக்கும். வீட்டின் உட்புறம் உள்ள தரைத்தளம் அகற்றப்பட்ட பின்னர் வீடு என்பது அஸ்திவாரத்தின் மேல் நிற்கும் சுவர்களாக இருக்கும். அந்த நிலையில், சுவர்களின் இருபுறமும் பள்ளம் ஏற்படுத்தி, அஸ்திவாரம் மற்றும் வீட்டின் தளமட்ட சுவர்களுக்கு மத்தியில் இடைவெளி ஏற்படுத்தி, ஜாக்கிகள் பொருத்தப்படும்.

போர்ட்டிகோ, மாடிப்படிகள் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் தக்க ஜாக்கிகள் பொருத்தப்படும். அனைத்து ஜாக்கிகளும் ஒரே நேரத்தில் அங்குலம் அங்குலமாக பணியாளர்கள் மூலம் உயர்த்தப்படுகின்றன. அப்போது ஏற்படும் இடைவெளி செங்கல் சுவர் மூலம் கச்சிதமாக அடைக்கப்படும். பின்னர், அதற்கான ‘கியூரிங்’ பணிகள் முடிந்த பின்னர் வீட்டின் சுவர்கள் அத்துடன் இணைக்கப்பட்டு பூச்சு வேலைகள் செய்யப்பட்டு, பணிகள் பூர்த்தி அடைகின்றன.

இந்த முறையில், வீட்டின் அளவு மற்றும் எடை ஆகியவற்றைப் பொறுத்து சுமார் ஒன்றரை மாதத்திற்குள் பணிகளை செய்து முடிக்க இயலும் என்று தெரிய வந்துள்ளது. எதிர்பாராத சூழ்நிலையில் பணிகளின்போது வீடு பாதிக்கப்பட்டால், பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களிடமிருந்து தக்க இழப்பீட்டை பெற வேண்டும் என்பதற்காக தக்க ஒப்பந்தத்தை செய்து கொள்வது பாதுகாப்பானது.

Next Story